அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/120-383

விக்கிமூலம் இலிருந்து

116. பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் பிரதம நோக்கம்

அதாவது நமது கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் தற்காலந் தோன்றி வரும் இராஜத்துரோகச் செயல்களுக்கும், இராஜத் துவேஷக் கூட்டங்களுக்கும் இந்தியாவில் தோன்றியுள்ளப் பலசாதிவகுப்பாரில் எச்சாதியார் முக்கிய காரணரென்றும், இராஜாங்கப் பிரதம உத்தியோகங்கள் வேண்டுமென்றும், சுயராட்சியம் வேண்டுமென்றும் பேரவாக்கொண்டு பத்திரிகைகளில் வரைகிறவர்களும், பேசுகிறவர்களும் எச்சாதி வகுப்பினரென்றுங் கண்டறிந்துக்கொள்ள வேண்டியதே பிரிட்டிஷ் ஆட்சியின் பிரதம நோக்கமென்னப்படும்.

தற்காலம் அடுத்தடுத்துத் தோன்றிவரும் இராஜத்துரோகச் செயல்களுக்குக் காரணபூதமாக விளங்குவோர் சுயவாட்சியாம் அவாவின் பெருக்கத்தால் பிரிட்டிஷ் ஆட்சியை எதிற்கத்தக்க எத்தனங்களைச் செய்துவருகின்றார்கள். அவ்வகுப்பாரின் குணா குணங்களையும் போரவாச் செயல்களையும் உறவாடிக் கெடுக்கும் மித்திரபேதங்களையும் பத்து குடும்பங்கள் கெட்டாலும் கெட்டும் நாம்மட்டிலும் சுகமாக வாழ்கவேண்டுமென்னும் வஞ்சகர்களையும், மனித வகுப்போரை மனிதர்களாக பாவிக்காத மட்டிகளையும், தாங்களே சகல சுகங்களையும் அநுபவிக்க வேண்டும் ஏனையோர் அத்தகைய சுகங்களை அநுபவிக்கலாகாதெனத் தீங்கு செய்துவரும் பொறாமெயுள்ளோர்களையும் கண்டறிந்து குடிகளை அடக்கியாளும் உத்தியோகங்களைக் கொடாமலும், குடிகளை பயமுறுத்தி நீதிசெலுத்தும் உத்தியோகம் கொடாமலும், குடிகளைக் கண்டித்துப் பணம் வசூல் செய்யும் உத்தியோகங்களைக் கொடாமலும் தடுத்து இத்தகைய உத்தியோகங்கள் யாவையும் பிரிட்டிஷ் ஆட்சியோர் நடாத்திவருவார்களாயின் சகல சாதிகுடிகளும் சுகம்பெற்று வாழ்வதுடன் இராஜதுவேஷ சிந்தைகளகன்று இராஜ விசுவாசத்தில் நிலைப்பார்கள்.

அங்ஙனமின்றி இந்தியர்களுக்குத்தக்க உத்தியோகங்களைக் கொடுத்து ஆதரிக்க வேண்டுமென்னும் அன்பிருக்குமாயின் தங்களைப்போல் சாதி வித்தியாசமற்றவர்களும், தங்களைப் போல் சமயவித்தியாச மற்றவர்களையும், தங்களைப்போல் பொருளாசையற்றவர்களையும், தங்களைப் போல் வித்தையிலும் புத்தியிலும் ஈகையிலும் சன்மார்க்கத்திலும் நிறைந்துள்ள இந்தியர்களைக் கண்டெடுத்து இராஜாங்க பிரதம் உத்தியோகங்களை அளிப்பார்களாயின் சகல் ஏழைக்குடிகளும் பிரிட்டிஷ் ஆட்சியில் சுகசீரடைவதுடன் தேசமும் சிறப்புற்று இராஜவிசுவாசமும் பெருகி பிரிட்டிஷ் ஆட்சியும் ஆறுதலடையுமென்பது சத்தியம் சத்தியமேயாம்.

- 3:38; மார்ச் 2, 1910 -