அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/123-383

விக்கிமூலம் இலிருந்து

119. ஆனந்தம் ஆனந்தம் மஹாராஜா பொப்பிலி கே.சி.ஏ.ஆர் அவர்களை எக்சிகூட்டிவ் மெம்பராக சேர்த்ததே ஆனந்தம்

தற்காலம் நமது கருணைதங்கிய ராஜாங்கத்தார் சென்னை ராஜதானி ராஜாங்க ஆலோசினை சங்கத்தில் நமது கனந்தங்கிய பொப்பிலிய மகாராஜா அவர்களை ஓர் அங்கமாக சேர்த்துள்ளதைக் கண்டு மிக்க ஆனந்திக்கின்றோம்.

அதாவது ஓர் ராஜாங்க காரிய சங்கங்களிற் சேர்ப்போர் இராஜகாரண காரியாதிகளில் மிக்கப் பழகினவர்களும், வம்மிஷவிருத்தியாய் செல்வத்தைக் கையாடி வந்தவர்களும், தன்மதம் புறமதமென்றும், தன்சாதி புறசாதியென்றும் பாரபட்சம் பாராதவர்களும், எப்போதும் கனந்தங்கிய சீவனமும், சுகவாழ்க்கையில் இருந்தவர்களுமாகிய மரபினோர்களையே கண்டெடுத்து அரச ஆலோசனை சங்கத்திற் சேர்ப்பது அழகும் சிறப்பும் என்னப்படும்.

அதுபோலவே சகல அந்தஸ்தும் கனமும் அமைந்த பொப்பிலி மகாராஜா அவர்களுக்கு எக்சிகூட்டிவ் மெம்பர் அலுவல் அளித்ததை மிக்கவானந்தமாகக் கூறியுள்ளோம்.

அங்ஙனமின்றி ஐயா, மெத்தவும் வாசித்தவர், ஆனால் சுயப்பிரயோசனத்தை நாடுவதில் சோம்பலில்லாதவர், பொருளாசையில் பேரவாக்கொண்டவர், ஆயிரங்குடிகள் கெட்டாலும் அரசன் கெட்டாலும் தன் குடும்பத்தைமட்டிலும் பாதுகாக்க முயல்கின்றவர்களாகிய சுயநலப்பிரியர்களுக்கு எக்சிகூட்டிவ் மெம்பர் அலுவலை நியமித்திருப்பார்களாயின் துக்கிக்கவேண்டியதாகும். இராஜாங்கத்தில் சுயநலப்பிரியரைச் சேர்க்காது பொதுநலப்பிரியரை சேர்த்ததுகண்டு பூரிப்படைந்தோம்.

- 3:39; மார்ச் 9, 1910 -