உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/125-383

விக்கிமூலம் இலிருந்து

121. பூர்வக் குடிகளுக்கு பூமி கிடைக்காமல் செய்கின்றார்களாம்

வந்தேறியக் குடிகள் தங்கள் சுயப்பிரயோசனங்களுக்காய் ஏற்படுத்திய அண்டை பாத்தியமென்னும் சட்டமே பூமிகளின் விருத்தியைக் கெடுத்து வருவதுடன் பூர்வக்குடிகளின் விருத்தியையும் கெடுத்துவருகின்றது. இத்தகைய அண்டை பாத்தியத்தாலுண்டாகும் அதிகாரமும் அதன் செல்வாக்கும் பெருகியும் நிலைத்தும் வருமாயின் ஓர்கால் சுதேசிய சொந்த பாத்தியங்கொண்டு இராஜாங்கத்தோரை எதிர்ப்பதுடன் ஏழைப் பூர்வக் குடிகளையும் நாசஞ்செய்துவிடுவார்கள். ஆதலின் நமது கருணைதங்கிய இராஜாங்கத்தார் அண்டை பாத்தியாயம் அண்டை பாத்தியமென உள்ளவனுக்கே பூமிகளைக் கொடுத்து பாழ்படுத்துவதினும் அண்டை பாத்தியமென்னும் சட்டத்தை எடுத்துவிட்டு விழலாயுள்ள பூமிகளை சகலயேழைகளும் உழுது பயிர் செய்து சீவிக்கும்படி செய்வார்களென நம்புகிறோம்.

ஆரடாவிட்டது மானியமென்றால் நான்தான் விட்டுக்கொண்டேன் என்னும் பழமொழிக்கிணங்க, கனந்தங்கிய மகமதியர் அரசாங்க காலத்தில் தங்கடங்கள் சாதியதிகாரப் பெருக்கங்களினால் மனங்கொண்ட பூமிகளை வளைத்து உபயோகப்படுத்திக் கொண்டார்களன்றி சுதேச அரச சுதந்திரம் கிடையாது. மகமதிய வரசாங்காலத்தில் பூமிகளை சேகரித்துக் கொண்டார்களென்பதற்கு தற்காலம் அவர்கள் வைத்துள்ள மிராசிதாரர், ஜமீன்தார், அவுல்தார், சுபேதார், செருஸ்தாதாரென்னும் பெயர்களே போதும் சாட்சியாம். இவ்வகையாக அவர்களனுபவித்து வரும் பூமிகளை சுகமாக அனுபவித்துக் கொண்டபோதிலும் அப்பூமிகளுக்கு அருகே விழலாயுள்ள பூமிகளையேனும் மற்றவர்களை யநுபவிக்கவிடாது தங்களும் அநுபவிக்காது அண்டை பாத்திய வரப்பிட்டுக் கெடுப்பதில் யார் சுகம் பெறுவர்.

இவ்வண்டை பாத்திய சட்டத்தால் எதிரிகளையும் பிழைக்கவிடாது தாங்களும் அப்பூமிகளை அநுபவிக்காது பாழாக்கி வருகின்றார்கள். அத்தகையப் பாழடைந்த பூமிகளைப் பயிரேறச் செய்யவும், எழிய நிலையிலுள்ளக் குடிகளை ஈடேறச்செய்யவும் கருணைதங்கிய மிஷநெரி துரைமக்கள் வேண்டிய முயற்சி எடுத்து கானல் மழையென்றும், பனி வெய்யலென்றும் பாராது உழைத்து வருகின்றார்கள். அவ்வகையாய் ஏழைகளைக் காப்பாற்றுவோரும், பூமிகளைப் பயிரோங்கச் செய்வோருமாகிய மிஷநெரி துரைமக்கள் கோரிக்கைக்கு நமது கருணைதங்கிய ராஜாங்கத்தோர் இதங்கி அண்டை பாத்திய சட்டத்தை அடியோடெடுத் தெறிந்துவிட்டு அவர்கள் கேட்கும் பூமிகளை அளித்துப் பயிரேறச் செய்வதுடன் பூர்வ ஏழைக் குடிகளையும் சுகம்பெறச் செய்யும்படிக் கோருகிறோம்.

- 3:40; மார்ச் 16, 1910 -