அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/126-383

விக்கிமூலம் இலிருந்து

122. டிப்பிரஸ் கிளாஸ் என்று அழைக்கப்படுவோர் பூர்வம் அந்தஸ்தில் வாழ்ந்த குடிகளே யாகும்

பூர்வகாலமாம் ஆயிரத்தியைந் நூறுவருடங்களுக்குமுன்பு புத்ததன்மத்தைத் தழுவி இராஜவிசுவாசத்திலும் ஒழுக்கத்திலும் நீதியிலும் நின்று சுகசீவிகளாகவும் தக்க அந்தஸ்தையுடையவர்களாகவும் வாழ்ந்து வந்தவர்களே தற்காலம் தாழ்ந்தசாதியோரென்றும், தாழ்ந்த வகுப்போரென்றும் பராயசாதியோர்களால் கூறப்பட்டதுமன்றி நாளது வரையில் தாழ்த்தி நசித்துவருகின்றார்கள்.

காரணமோ வெனில் இத்தேசத்துள் நாதனமாகக் குடியேறிய பராயசாதியோர் தங்கள் சுயப்பிரயோசன சீவனத்திற்காய் உன்சாமி சிறிது என்சாமி பெரிதென்னும் மதக்கடைகளைப் பரப்பி பொய்ப் புராணக் கட்டுக் கதைகளை ஏற்படுத்தி அதனாற் சீவிக்க ஆரம்பித்த காலத்தில் கல்வியற்றோர் யாவரும் அவர்கள் பொய்யை மெய்யென்று நம்பி அவர்கள் போதனைகளுக்குட்பட்டு விட்டார்கள்.

புத்ததன்மத்தைச் சார்ந்த விவேகிகள் யாவரும் அவர்கள் பொய்க் கதைகளை செவிகளில் ஏற்காமலும் அவர்களைத் தங்கள் கிராமங்களுக்குள் நெருங்கவிடாமலும் துரத்தியடித்துக்கொண்டே வந்தார்கள். அவ்வகையாய்ப் பூர்வக்குடிகள் துரத்துவதும் வந்தேறியக் குடிகள் ஓடுவதும் வழக்கமாயிருந்தது. இவர்கள் அடிக்கு பயந்து ஓடுகிறவர்களை வழியிற்காண்போர் ஏன் பயந்து ஓடுகின்றீர்களென்றால் அவர்கள் தாழ்ந்தசாதியார் எங்களை அவர்கள் தீண்டலாகாதென்று பொய்யைச் சொல்லி அவர்களை இழிவுகூறிக் கொண்டே ஓடுவது வழக்கமாயிருந்தது.

இதே வழக்கத்தை நாளுக்குநாள் தேசத்திற்கு தேசம் பரவச்செய்து தங்களை உயர்ந்த சாதியோரென்று ஏற்படுத்திக் கொண்டு புத்ததன்மத்தைப் புறமதமென்றும் தங்கள் பொய்மதக்கட்டுக்குள் அடங்காத பௌத்தர்களை புறசாதியோரென்றுங்கூறி அவர்களை பறைசாதியோரென்று கூறிக்கொண்டும் புத்ததன்ம ஓதல்; ஓதிவைத்தல், வேட்டல், வேட்பித்தல், யீதல், ஏற்றல் என்னும் அறுவகைத் தொழிலையும் சரிவரச்செய்யும் சண்-ஆளர்களை சண்டாளர்களென்றும் நீதிநெறியில் நிற்போர்களை தீயரென்றும், தாழ்ந்த சாதியேரென்றும் தீண்டப்படாதாரென்றும் இழிவுபடுத்திக்கொண்டே சிற்றரசர்களையும் கல்வியற்ற பெருங்குடிகளையுந் தங்கள் வசப்படுத்திக் கொண்டபடியால் தங்களுக்கு எதிரிடையாயும் தங்கள் பொய்மதத்திற்கு விரோதிகளாகியுமிருந்தப் பூர்வக்குடிகளை பலவகையாலுங்கெடுத்து பாழ்படுத்தி தங்களால் நசித்துவந்ததுமன்றி நூதனமாக இத்தேசத்திற் குடியேறியவர்களுக்கும் இழிந்த சாதியோரென்று கூறி அவர்களாலும் அவமதிக்கச்செய்து நாகரீகம் பெறவிடாது நசித்துவிட்டார்கள். அவர்களையே தற்காலம் டிப்பிரஸ்கிளாசென்று அழைத்து வருகின்றார்கள். இவர்கள் மொத்தத் தொகையே ஆறுகோடிக்குமேல் உண்டு. இவ்வாறு கோடி மக்கள் உண்டென்னும் சிறப்பும் ஆங்கில அரசாட்சியின் சுகமேயாம்.

இதுகாறும் ஆங்கில அரசாட்சி இவ்விடம் வந்து தோன்றாதிருக்குமாயின் ஆறுகோடி மக்களென்னும் இலக்கத்தில் ஆறுபேரேனும் இருப்பார்களோ இரார்களோவென்பது சந்தேகமேயாம். அதாவது கருணை நிறைந்த பிரிட்டிஷ் ஆட்சியாம் ஆளுகையிலேயே கொழும்பு அதுராஜபுரத்தில் பறையன் குடைபிடிக்கலாகாதென்னும் பொறாமெயும், பற்கடிப்பும், பொச்செரிப்பும் அவர்களை விட்டு நீங்காதிருக்க பிரிட்டிஷ் ஆட்சியாயிராது சாதிநாற்றத்தோர் ஆட்சியே இருந்திருக்குமாயின் ஆறுகோடி மக்களில் ஆறுபேரேனும் இருந்திருக்கமாட்டார்களென்பது துணிபு.

இந்த டிப்பிரஸ்கிளாசென்றழைக்கப் பெற்றோர் பூர்வம் அந்தஸ்தில் வாழ்ந்தவர்களென்பதற்கு ஆதாரம் யாதெனில், அவர்களால் வரைந்து கையிருப்பில் வைத்துள்ள நீதி நூல், ஞானநூற்களினாலும் அறிவதன்றி தற்கால மிஷநெரி துரை மக்கள் செய்துவரும் கல்விவிருத்தியில் முன்னேறி பிஏ. எம்.ஏ. முதலிய கெளரதாபட்டம் பெற்று அறிவின் விருத்தியிலும் சுகத்திலும் இருப்பதே போதும் ஆதாரமேயாம்.

- 3:41: மார்ச் 23, 1910 -