அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/127-383
123. இந்துதேச எழியக்குடிகளை ஈடேற்றத் தோன்றியவர் கனந்தங்கிய பரோடா ராஜனேயாம்
தற்காலம் சென்னை ராஜதானியில் ஏழைக்குடிகளை ஈடேற்ற வேண்டுமென தோன்றியுள்ள கூட்டத்தோருக்கு சாதியும் வேண்டும், சமயமும் வேண்டும் (டிப்பிரஸ் கிளாசை) ஈடேற்றவேண்டுமென்னும் பெயரும் வேண்டும். ஆனால் கனந்தங்கிய பரோடா மகாராஜனவர்களுக்கோ சாதியும் உதவாது, சமயமும் உதவாது, நீதியும் ஏழைகளின் ஈடேற்றமே அவருக்கு வேண்டும்.
அதன் அநுபவமோ, தற்காலம் பரோடாவில் ஏற்படுத்தியுள்ள பெருத்த கலாசாலையில் சகலசாதி வகுப்போருடன் கலந்து வாசிப்பதற்கு டிப்பிரஸ் கிளாசென்ற எழியப் பிள்ளைகள் ஐந்து பெயரை சேர்த்தார்களாம். இவர்களைக் கண்டவுடன் அக்கலாசாலையில் வாசிக்க வந்திருந்தப் பிள்ளைகள் யாவரும் ஒரேகட்டாக எழுந்து அந்த ஐந்துபேர்களுடன் நாங்கள் கலந்துட்கார்ந்து வாசிக்க மாட்டோமென்று எழுந்து அவர்கள் இல்லங்களுக்குப் போய்விட்டார்களாம். அதனைக் கேழ்வியுற்ற மகாராஜனவர்கள் யாது உத்திரவு பிறப்பித்துள்ளரென்னில், அந்த ஐந்து எழிய வகுப்புப் பிள்ளைகளுடன் சகலபிள்ளைகளும் கலந்தே வாசித்தல் வேண்டும். அப்படி வாசிக்காதவர்களும் அக்கலாசாலைக்கு வராதவர்களுமாகியவர்களை தனது கவர்ன்மென்டு உத்தியோகசாலைகளில் சேர்க்கப்பட மாட்டாதென்று கண்டிப்பான உத்திரவளித்துவிட்டார்.
சகோதரர்களே, இத்தகைய ஏழைகளுக்காய் இதக்கம் வைத்துள்ள நமதையன் பரோடா மகாராஜனவர்களுக்கு நன்றியறிந்த வந்தனங் கூறுங்கள், வந்தனங் அகூறுங்கள். அவரதரிய அன்பும் மென் மேலும் பெருகவென்று ஆசிகூறுங்கள். ஆசிர் கூறுங்கள். அவரது ஆயம் நீடிக்கவேண்டுமென்று உங்களன்பை பெருக்குங்கள், அன்பை பெருக்குங்கள். இதுவல்லவோ தயாளகுணம், இதுவல்லவோ பொது சீர்திருத்தம், இவரல்லவோ தன்னவரன்னிரென்னும் பட்சபாதமற்ற ராஜன், இவரல்லவோ சகல மனுக்களும் ஒரே வகுப்பினரென்று கண்டறிந்த புண்ணியபுருஷன், இவரல்லவோ ஏழைகளை ஈடேற்றத் தோன்றிய தயாநிதி.
இத்தகைய பேரறிவும் கருணையும் நிறைந்த இந்திய அரசர்கள் இன்னும் நான்கு பேரிருப்பார்களாயின் பிரிட்டிஷ் ஆட்சியின் பிரகாசமும் இராஜவிசுவாசமும் மென்மேலும் பெருகுவதுடன் ஏழைக்குடிகள் யாவரும் சுகசீர்பெற்று இந்திரதேசமானது பழய இந்திராபதியென்றே விளங்கும்.
- 3:41: மார்ச் 23, 1910 -