அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/133-383

விக்கிமூலம் இலிருந்து

129. பிரிட்டிஷ் ராஜரீகம் கிறீஸ்துமதத்தையே சார்ந்ததோ

ஒருக்காலுமில்லை. பிரிட்டிஷ் ஆட்சி தன்னவ ரன்னியரென்னும் பற்றில்லாததும் தன்மதம் பிறமதமென்னும் பேதமில்லாததும் தன்மனை பிறர்மனையென்னும் கபடில்லாததுமாகிய நிலையே தொன்றுதொட்டு அவர்கள் வம்மிஷவரிசையாய் நிறைவேறிவருகின்றது.

அத்தகைய ஜனன பழக்கமானது தங்கள் சுயதேசங்களை விட்டு அன்னியதேசங்களுக்குச் சென்றபோதினும் அன்னியர் தேசங்களைக் கைப்பற்றிக்கொள்ளினும் அந்தந்த சமயத்தோரை அவரவர்கள் சமயத்திலேயே நிலைக்கச் செய்து சுகமளித்துவருகின்றார்கள்.

மற்ற கிரேக்கர், ரோமர், போர்ச்சுகீயர் முதலிய அரசர்களும் ஐதரலிமுதலியமகமது அரசர்களும் வைணவ சைவசமயமென்னும் இந்துவரசர்களுந் தங்கள் ராஜரீக காலத்தில் தங்களுக்கு அன்னியப்பட்ட மதஸ்தர்கள் தங்கள் மதத்திற் சேராமற்போய்விடுவார்களாயின் அவர்களை கத்தியால் வெட்டிக்கொன்றும் கற்காணங்களிலும் கழுவிலேற்றி வதைத்தும் நீதிமான்களையும் விவேகிகளைபம் நெருப்பிலிட்டுக் கொளுத்தியும் தங்கள் மதமே மதம் தங்கள் சமயமே சமயமென மற்ற மதத்தோரை வதைத்துவந்த சங்கதிகளை அவரவர்கள் சரித்திரங்களினாலும் அவரவர்களின் ஆளுகைகளின் செயல்களினாலும் அறிந்துக்கொள்ளலாம்.

பிரிட்டிஷ் ராஜாங்கமோ அங்ஙனமன்று, கிறீஸ்தவர்களின் கோவில்களோ அங்கங்கு சிறப்பாக இருத்தல் வேண்டும், மகமதியர் கோவில்களோ அங்கங்கு சிறப்பாக இருத்தல் வேண்டும், சைவர்கள் கோவில்களோ அங்கங்கு சிறப்பாக இருத்தல் வேண்டும். இராஜாங்க திரவியமும் அவரவர்களுக்கு சகாயம் செய்யவேண்டி செய்து தன்மதம் பிறர்மதமென்னும் வித்தியாசம் பாராது இராஜகீயம் நடாத்திவருகின்றார்கள்.

இவைகளுக்குப் பகரமாயுள்ள ஓர் திட்டாந்த தாட்டாந்தத்தைப் பாருங்கள். தற்கால வங்காள கவர்னர் ஜெனரலுக்குமுன் கவர்னர் ஜெனரலாயிருந்த காலம் கர்ஜன் பிரபு அவர்களின் ஆளுகையில், இந்துதேச முழுவதிலும் கட்டப்பட்டுள்ளப் பூர்வக் கட்டிடங்களும் கோவில்களும் எங்கெங்கு இடித்து கீலகமுற்றிருக்கின்றதோ அவைகள் யாவையும் இராஜாங்கச் செலவினால் சீர்திருத்தி செவ்வனே வைக்கவேண்டுமென்று உத்திரவளித்திருக்கின்றார். அவ்வுத்திரவின்படி அனந்தம் இடிந்துக்கிடக்குங் கட்டிடங்களை சீர்திருத்தி செவ்வனேவைத்திருக்கின்றார்கள். இத்தகைய ஓர் ஆதரவைக் கொண்டே பிரிட்டிஷ் ராஜரீகம் கிறீஸ்துமதத்தைமட்டிலுமே சார்ந்ததன்று. சகலமத சிறப்பையும் தம்மத சிறப்பெனக் கருதி நடுநீதியிலும் நெற்றியிலும் ஒழுகி தங்கள் செங்கோலை நடத்திவருகின்றார்கள்.

அதனினும் இந்தியாவின் இராஜ அங்கங்களானவர்கள் கிறிஸ்தவர்களாக மட்டிலுங் காணவில்லை. பௌத்தர்களும் இருக்கின்றார்கள், வைணவர்களுமிருக்கின்றார்கள், சைவர்களும் இருக்கின்றார்கள், மகமதியர்களுமிருக்கின்றார்கள், பாரசீகர்களும் இருக்கின்றார்கள். இத்தியாதி மதப் பிரிவினர்களும் மகாகனந்தங்கிய ஏழாவதாசர் எட்வர்ட் சக்கிரவர்த்தியாரவர்களின் அங்கங்களில் ஒவ்வொருவராய் நிறைந்து ராட்சியபாரம் தாங்கி பிரிட்டிஷ் ஆட்சியென விளங்குங்கால் பிரிட்டிஷ் ராஜரீகம் கிறீஸ்துமதத்தையே சார்ந்ததென்று கூறுவதற்கு ஆதாரமில்லை. சக்கிரவர்த்தியே கிறீஸ்தவராயினும் அவரது நீதியும் நெறியும் ஓர் மதத்தைச் சார்ந்ததன்று.

- 3:45: ஏப்ரல் 20, 1910 -