உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/138-383

விக்கிமூலம் இலிருந்து

134. டிப்பிரஸ் கிளாசை சீர்திருத்தத் தோன்றிய கூட்டத்தோர்களே

கண்ணோக்குங்கள். எதார்த்தத்தில் ஏழைகளை ஈடேற்றத் தோன்றியுள்ளோராயின் அவர்களைத் தங்களைப்போல் கனவான்களாகச் செய்து விடுவதினும், பள்ளிக் கூடங்களை வைத்து தங்களைப்போல் பி.ஏ. எம்.ஏ., பட்டம்பெற வைப்பதினும், தற்காலம் இல்லமின்றி அல்லோகல்லப்படும் ஏழைகளைக் கண்ணோக்கி நிலைக்கச்செய்வர்களேல் இவர்களே டிப்பிரஸ் கிளாசை ஈடேற்றுவோர்களாவர்.

அதாவது பிரிட்டிஷ் துரைத்தனத்தாராகும் ஆங்கிலேய துரைமக்கள் சென்னையில் நிலைத்தபோது சாதிபேதமுள்ளவர்களுக்கு எதிரடையான சாதிபேதமில்லா திராவிடர்களையே தங்கள் ஆங்கிலேய அரண்மனை உத்தியோகஸ்தர்களாக நியமித்துக்கொண்டு அவர்கள் மத்தியில் வாழ்ந்துக் கொண்டிருக்கும்படியாக சில இடங்களில் குடியிருக்கச் செய்து வைத்திருந்தார்கள். அவைகளிற் சிலதாகும் காட்டுக்கோவில், சாணாங்குப்பம், அமீர்தோட்டம் இம்மூன்று இடங்களிலும் ஏறக்குறைய எண்பது வருடங்களுக்கு மேற்பட வாழ்ந்து வந்தக் குடிகளை அவ்விடம் விட்டு போய்விடும்படி அவற்றைத் தற்காலம் வாங்கிக் கொண்ட புண்ணியபுருஷர்கள் கூற ஏழைக்குடிகள் யாவரும் தங்குவதற்கு வேறு இடங் கிடையாது, பிள்ளைகளை இழுத்துக்கொண்டும் சாமான்களை வாரிக்கொண்டும் அழுதக்கண்ணும் துக்க சிந்தையுமாய் அல்லல்பட்டலைகின்றார்கள்.

இத்தகையப் பரிதாபகாலத்தில் ஏழைகளை ஈடேற்றத் தோன்றிய கூட்டத்தார் கண்ணோக்கம்வைத்து தலைசாய்க்க இல்லம் இல்லாது அல்லல்படுவோரை ஆதரித்து இல்லம்பெறச் செய்வரேல் இவர்களையே எழியோர்களை யீடேற்றும் தாதாக்களென்று கூறவர். இவ்வகையான கஷ்டத்தை நீக்கி நிலைக்கச்செய்யாதவர்கள் அவர்களை சீர்திருத்தி முன்னுக்குக் கொண்டுவருவரென்பதும் அதற்காகக் கூட்டங்கள் கூடியுள்ளாரென்பதும் அபலமேயாம். ஆதலின் ஏழைகளை சீர்திருத்துங் கூட்டத்தோரும், ஏழைகளுக்குக் கல்வி கற்பிக்குங் கூட்டத்தோரும் அல்லலடைந்தலையும் ஏழைகளுக்கு இல்லம் நிலைக்கும் ஏதுவைச் செய்யும்படிக் கோருகிறோம்.

- 3:48; மே 11, 1910 -