அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/147-383

விக்கிமூலம் இலிருந்து

143. கன்னம்பாளையக் கிறிஸ்தவர்களும் அவ்விடத்திய இந்துக்களென்போரும்

கன்னம்பாளையக் கிறீஸ்தவர்கள் தாங்கள் குடியிருந்தவிடத்திலிருந்தக் குளங்குட்டைகளில் நீரில்லாமல் இந்துக்களென்போர் வாசஞ்செய்யும் இடத்திலிருக்கும் குளத்திற்குச் சென்று நீர் மொண்டுக்கொள்ள எத்தனித்த போது இந்துக்களென்போர் அவ்விடத்திய நீரை மொள்ள விடாமல் தடுத்ததாகவும் அந்தப் பரையாது கலைக்ட்டர் துரையவர்களிடம் சென்று விசாரிணைக்கு வந்திருப்பதாகவுங் கேழ்வியுற்று மிக்க விசனிக்கின்றோம்.

அதாவது கிறிஸ்தவர்கள் வாசஞ்செய்திருந்தவிடங்களில் நீருள்ள வரையில் மற்றக் குளங்களுக்குங் கிணறுகளுக்கும் போகாமல் தங்களிடமுள்ளக் குளங்களிலேயே நீர் மொண்டு உபயோகித்து வந்தது இந்துக்கள் யாவரும் அறிந்தவிஷயமே. தங்களிடங்களில் நீர் கிடையாது தவிக்குங்கால் நீருள்ளயிடங்களைத் தேடி ஓடி வந்திருக்கின்றார்கள். நீர் கிடையாமல் தவிக்குங் குடிகள் மீது காருண்யம் வைத்துக் காப்பாற்றாமல் தாகத்திற்குத் தவிக்கும் இந்தியக் குடிகளை விரட்ட ஆரம்பிக்கும் கன்நெஞ்சமுடையவர்பால் சுதேசிய அதிகாரத்தைக் கொடுத்துவிட்டால் இன்னும் என்ன அனியாயம் ஏழைக் குடிகளுக்குக் கொடாமல் தடுத்துத்துன்பப்படுத்துவார்களோ தெரியவில்லை. இந்துக்கள் என்போர் தாங்கள் நீரருந்த வேண்டிய இடங்களிலும் தாங்கள் சுகம் அனுபவிக்க வேண்டிய இடங்களிலும் சாதியாசாரம் சமயாசாரம் பார்ப்பது கிடையாது. ஏழை மனுக்கள் நீரருந்த வேண்டிய இடங்களிலும், சுகமனுபவிக்க வேண்டிய இடங்களிலும், சாதியாசாரம் சமயாசாரம் உண்டுபோலும்.

இந்துக்களென்போர் தாங்கள் சொந்த பூமிகளிலுள்ளக் குளங்களுக்குங் கிணறுகளுக்குந் தங்கள் அதிகாரங்களைச் செலுத்தினபோதிலும் புறம்போக்கிலுள்ளக் கிணறுகளுக்கும் குளங்களுக்கும் என்ன அதிகாரமுண்டு. ஈதன்றி கோவில்களிலுள்ளக் குளங்களும் கிணறுகளும் இந்துக்களென்னும் சாதிபேதமுடையக் கூட்டத்தாருக்கும் சுதந்திரங் கிடையாது. பூர்வக் கோவில்களென வழங்கும் கட்டிடங்களும் கிணறுகளும் குளங்களும் பௌத்தர்கள் உடையவைகளாதலின் அவைகளைச் சகலரும் அநுபவிக்கக் கூடிய சுதந்திரமுண்டு. புத்ததன்மமானது சகலரும் அனுபவிக்கக்கூடிய பொது சுகமாதலின் இந்திரதேசத்துள்ள பூர்வபுத்ததன்ம மடங்களும் குளங் கிணறுகளும் சகல சீவராசிகளுக்கும் பொதுவாதலின் அவ்வகையாய குளங் கிணறுகளில் சாதியாச்சாரத்தை போதிப்பதில் யாதுபயன்.

இந்துக்களென்போர் தங்கடங்கள் சாதியாசாரங்களிலும் சமயாசாரங்களிலும் வழுவில்லாமலும் மனுதன்ம சாஸ்திரங்களுக்கு மாறுபடாமலும் நடந்துவருவார்களாயின் தங்களிடங்களில் ஏழைகளை நீர்மொள்ளவிடாமல் தடுக்கும் ஆசாரம் பொருந்தும், தங்களுடைய மநுதன்ம சாஸ்திரத்தை சரிவர அநுசரிக்காதவர்களும் சாதியாசாரம் சமயாசாரங்களில் நிலைக்காதவர்களுமாகியவர்கள் பொதுவாகியக் குளங்கிணறுகளை தங்களுடையவைகளென்று ஏற்றுக்கொண்டு, ஏழைகளை நீரருந்தவிடாமல் தடுப்பது அந்நியாயமேயாம்.

சாதிபேத மில்லாமல் வாழ்ந்திருந்த இந்திரதேசத்தில் நூதனமாகிய சாதிபேதத்தை உண்டு செய்துக்கொண்டு தாங்கள் மட்டிலும் சுகமநுபவித்தால் போதும், ஏனையோருக்கு யாது சுகக்கேடுண்டானாலும் ஆகட்டுமென்று எண்ணிக் கொண்டு சீவகாருண்யமற்று ஜலமீய்ந்து தாகத்தைத் தணிக்க இதக்கமில்லாதவர்கள் வானத்தை நோக்கி மழைப் பெய்யவில்லை என்றால் பெய்யுமோ, பயிறு விளையவில்லையென்றால் விளையுமோ ஒருக்காலுமாகா. இந்துக்களென்பவர் குளங்களில் மாடுகள் வாய்வைத்து தண்ணீர் குடிக்கலாம், குதிரைகள் வாய்வைத்து தண்ணீர் குடிக்கலாம், கழுதைகள் வாய்வைத்து தண்ணீர் குடிக்கலாம், ஏழைகளாகிய மனிதசீவர்கள் தங்கள் பாத்திரங் கொண்டேனும் தண்ணீர் மொள்ளப்படாதென்னும் கொடூர சிந்தையை உடையவர்கள் நாளுக்கு நாள் இத்தேசத்தில் பெருகிவருகின்றபடியால் வானஞ்சுருங்கி பஞ்சமுண்டாகி பெருவாரிக் காச்சலும் பிளேக்கென்னும் நோயும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. “ஏழைக ளழுதக்கண்ணீர் கூரிய வாளுக்கொக்கு” மென்னும் பழமொழிக்கிணங்க தாழ்த்தப்பட்டவர்கள் உயர்த்தப்படுவதற்கும் உயர்த்தப்படுகிறவர்கள் தாழ்த்தப்படுவதற்கும் காலம் வந்துவிடும். அப்போது நாங்கள் உயர்ந்தோர்கள் உயர்ந்தோர்களென்று கூச்சலிடுவதாயின் ஒருவரும் அவ்வாக்கியத்தை ஏற்காமற்போவர். அவ்வகை ஏற்காது அவமதிப்படைவதற்கு முன் தங்களுக்குள்ள தாகம் ஏழைகளுக்கும் இருக்குமென்றும், தங்களுக்குள்ள பசி ஏழைகளுக்கும் இருக்குமென்றுந் தங்களுக்கு வேண்டிய சுகம் ஏழைகளுக்கும் வேண்டியதென்றும் சீவகாருண்ணியம் வைத்து தாகத்தைத் தணியுங்கள், பசியைப் போக்குங்கள், சுகத்தைக் கொடுங்கள் “அதிக முறுக்குவதால் அறுந்துபோமென்னும்” அநுபவமுண்டு. ஆதலின் சுகச்சீர்பெறக் கருதுவோர் சகலரையுஞ் சுகச்சீர்பெறக் கருதுங்கள்.

- 4:6: சூலை 20, 1910 -