அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/148-383
144. தற்கால இந்தியர் சீர்பெறாக்காரணம் சிலர் தங்களை உயர்ந்த சாதியோரென்று உயர்த்திக்கொள்ளுவதும் சிலர் தங்களைத் தாழ்ந்தசாதியோரென்று தாழ்த்திக்கொள்ளுவதுமேயாம்
இந்திரதேசமானது புத்த்தன்மத்தை அநுசரித்து பொய்ப்பேசாமலும், கொலைசெய்யாமலும் களவுசெய்யாமலும், பிறர் தாரத்தை இச்சியாமலும், மதுபானம் அருந்தாமலும் சுத்த தேகவாழ்க்கையிற் பொருந்தி ஒற்றுமெயிற் சிறந்து ஒருவருக்கொருவர் அன்பும் ஆறுதலும் பெற்று வாழ்ந்துவந்த காலத்தில் புருடர்கள் யாவரும் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கத்தில் நிறைந்தும் இஸ்திரீகள் யாவரும் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பென்னும் நான்கிலும் சிறந்து சகசீவிகளாக வாழ்ந்து வந்தார்கள்.
அத்தகைய வாழ்க்கை காலத்தில் அவன்சிறிய சாதி, இவன் பெரியசாதி என்னும் சாதிகர்வங்களில்லாமலும் அவன்சுவாமிபெரியசாமி, இவன் சாமி சிறியசாமி என்னும் மதகர்வங்களில்லாமலும், அவன் வித்தையிற் பெரியோன், இவன் வித்தையிற் சிறியோனென்னும் வித்தியா கர்வங்களில்லாமலும், அவன் கனவான் இவன் ஏழையென்னும் தனகர்வங்களில்லாமலும், தங்கடங்கள் செயல்கள் யாவும் வித்தியா விருத்தியிலும், பூமியின் விருத்தியிலும், கல்வியின் விருத்தியிலும், ஞானவிருத்தியிலுமே கண்ணுக்கருத்துமாய் நின்று பாஷைபேதம் இருப்பினும் மநுகுல பேதங் கிஞ்சித்துமின்றி அன்பின் பெருக்கத்தால் ஒருவருக்கொருவர் உபகாரிகளாக விளங்கி சகலருஞ் சுகச்சீர் பெற்று ஆனந்தவாழ்க்கையில் இருந்தார்கள். ஒற்றுமெயும், சுகச்சீரும், ஆனந்தமும் மிகுத்த வாழ்க்கையினால் இந்திரதேசமும் சிறப்புற்று உலகத்தில் தோன்றியுள்ள மநுகுலத்தோர் யாவரும் இந்திரதேசம் வந்து அரியவித்தைகளைக் கற்றுச் சென்றார்கள் என்பதைத் தெரிந்துக்கொள்ளுவதற்குப் பூர்வ சரித்திரங்களே போதுஞ் சான்றாம். அத்தகைய வித்தையிலும், புத்தியிலும், ஈகையிலும், சன்மார்க்கத்திலும் நிறைந்து ஒற்றுமெயிலும், ஒழுக்கத்திலும் சிறப்புப் பெற்றிருந்த தேசமானது சிலவஞ்சநெஞ்சமுடையோர் குடியேற்றங் கொண்டு அவர்களதுசுயப் பிரயோசனங்களுக்காய் ஞானமார்க்க பிரமணவேஷம் இட்டுக்கொண்டு தங்கள் பொய்வேஷம் அறியாக் கல்வியற்றக் குடிகளையும் காமியமுற்ற சிற்றரசரையும் வசப்படுத்திக் கொண்டு பூர்வ பௌத்தமார்க்க மேன்மக்களால் வகுத்திருந்தத் தொழிற்பெயர்கள் யாவையும் சாதிப்பெயர்களென மாற்றி தங்கள் போதனைக்கிசைந்து தங்களுக்கு வேண்டிய உதவிபுரிந்து வருகிறவர்கள் யாவரையும் உயர்ந்த சாதியென வகுத்துக்கொண்டு இவர்களது பிராமண வேஷந்தெரிந்து அடித்துத் துரத்தி யாதொரு உதவியும் புரியாது குடிகள் யாவர்களுக்கும் இவர்களது மித்திரபேதங்களையும் வஞ்சகக் கூத்தையும் வேஷத்தையும் பறைஞ்சினவர்களைத் தாழ்ந்த சாதிகளெனக் கூறிப் பலவகையாலுந் தலையெடுக்கவிடாது பாழ்படுத்தி வந்தபடியால் வித்தியா விருத்திக்கு உரியவர்கள் பாழ்பட, வித்தைகளும் பாழ்பட்டு விவசாய விருத்தியுள்ளோர் பாழ்பட, பூமிகளும் பாழடைந்து, கல்வியுடையார் பாழ்பட, கலைநூற்களின் விருத்தியும் பாழ்பட்டு, பௌத்ததன்ம சாதுசங்கங்கள் பாழ்பட, ஞானிகளென்னும் பெயர்களும் பாழ்பட்டு என்றும் அழியா இந்திரதேசச் சிறப்பும் பாழடைந்து போய்விட்டது.
இதன் ஆதாரபீடம் இத்தேசமெங்கும் கொண்டாடிவந்த இந்திர விழாக்கள் என்று பாழடைந்ததோ அன்றே சத்தியதன்மங் குன்றி அசத்திய தன்மம் பரவிவிட்டது, அசத்தியதன்மமே அனந்தங் கேடுகளுக்கு ஆதாரமாயின.
இத்தேசப் பூர்வக் குடிகளின் புண்ணியபலத்தால் பிரிட்டிஷ் ஆட்சியார் தோன்றி அவர்களும் புத்ததன்மமாகவே தங்கள் அரசாட்சியை நடத்தி வருகின்றபடியால் அதன் பலன் கிளைத்து வித்தியாவிருத்தியும், விவசாய விருத்தியும், கல்வி விருத்தியும் பெருகிக்கொண்டுவருகின்றது. இத்தகைய விருத்திகாலத்திலும் ஒற்றுமெய்க் கேட்டிற்கு மூலமாகும் சாதிகர்வத்தையும், வித்தியாவிருத்தியின் கேட்டிற்கு மூலமாகும் மதகர்வத்தையும் விடாது பற்றிக்கொண்டிருக்கின்றபடியால் பிரிட்டிஷ் ஆட்சியார் செய்துவரும் வித்தியாவிருத்திகளும், விவசாய விருத்திகளும் முன்னுக்குவராது திகைத்து நிற்கின்றது. இத்தகைய விருத்தியின் கேட்டிற்கும் தேச சிறப்பின் குன்றுதலுக்குங் காரணம் சிலர் தங்களை உயர்ந்த சாதி உயர்ந்த சாதியென்று அண்ணாந்து சோம்பலையும், பொறாமெயையும் வஞ்சினத்தையும் பெருக்கிக்கொள்ளுவதும், சிலர் தங்களைத் தாழ்ந்தசாதியோரென்று ஒப்புக்கொண்டு நசுங்குண்ணுவதுமேயாம். மநுகுலத்தவருள் தாழ்ந்தவர்களென்றும் உயர்ந்தவர்கள் என்றும் கூறித்திரியும் ஒற்றுமெய்க்கேடே இந்தியதேச சீர்கேட்டிற்கு அடிப்படையாகும். ஆதலின் இந்திய தேச சோதிரர்கள் யாவரும் சுயக்கியானத்தில் நின்று மநுகுல சகோதிர வாஞ்சையைப் பெருக்கி இராஜவிசுவாசத்தில் நிலைக்க வேண்டுகிறோம்.
- 4:7: சூலை 27, 1910 -