அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/151-383

விக்கிமூலம் இலிருந்து

147. யார்வீட்டு சொத்திற்கு யார் அத்து நியமிப்பது

தற்காலம் இத்தேசத்தில் சுதேசியம் சுதேசியமென்று கூட்டமிட்டுத் திரிவோருடன் சகலருக்குத் தங்களை சுதேசிகளென்று சொல்லாமலே விளங்குமென்று எண்ணித் திரியும் சாதிபேதமற்ற திராவிடர்கள் சேராமலும் அவர்கள் கூட்டுறவை நாடாமலும் இருப்பதைக் கண்டவர்களிற் சிலர் சாதிபேதமற்ற திராவிட சைவ திருப்பணித் தொண்டர்களையும் வைணவ திருப்பணித் தொண்டர்களையும் தங்கடங்கட் சிலாலயங்களின் கருடஸ் தம்பம் வரையில் வரும்படியான உத்திரவளிக்க வேண்டுமென்னுங் கூட்டங்கூட்டி பேசுவதாகத் தெரிந்து வியப்புறுகிறோம்.

அதாவது பூர்வ பௌத்தமடங்கள் யாவையும் சிவாலயம், விஷ்ணுவாலயமென நிருமித்துக் கொண்டவர்கள் அக்கட்டிடங்களுக்கு சுதந்திரக்காரர்களாகும் பெளத்தர்களை வாயற்படி வரையிலும் வரலாம், கருடஸ்தம்பம் வரையிலும் வரலாமென்னும் உத்திரவளிக்க யோசிப்பது என்ன அதிகாரமோ என்பதேயாம். யீதன்றி சாதிபேதமற்ற திராவிடர்களுட் பெரும்பாலோர் ஆங்கிலேய அரண்மனை உத்தியோகமாகும் துரைமக்கள் திருப்பணிச்செய்து தக்க சம்பளங்கள் பெற்று வேண உடையும் வேண்டிய புசிப்பும் புசித்து சுகசீவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள் அத்தகைய துரை மக்கள் திருப்பணியில் சம்பாதிக்கும் பணத்தைக்கொண்டு அநாதிமுத்தனுக்குத் திருப்பணிச் செய்யவேண்டும் என்னும் பொய் மொழி கூறி பொருள் சம்பாதித்துத் தானும் தனது பெண் பிள்ளைகளும் புசித்து உலாவுவதுடன் வாயற்படி கடந்து கருடஸ்தம்பம் வரையிலும் போகலாமென்றுங் குதூகலிக்கின்றார்களாம்.

கருணைதங்கிய துரைமக்களிடம் திருப்பணி செய்து சம்பாதிக்கும் பணங்களை விறுதாவாம் வெறுப்பணிக்குச் செலவு செய்து வீணர்களைத் தின்று ஊதவைப்பதால் யாதுபயன். சமயோசிதமாக தங்களுக்குப் பொருளளித்து போஷிக்கும் வரையில் பூஷிப்பவர்கள் பொருள் கொடாவிடில் தூஷிப்பார்களென்பது திண்ணம். அத்தகையப் போஷணைச்செய்து தூஷணைப்பெறுவதினும் துரைமக்களுக்குத்திருப்பணிச் செய்து சம்பாதிக்கும் பணத்தைக்கொண்டு தெருப்பணியாந் திண்டாட்டஞ்செய்யாது அப்பணத்தைக் கொண்டு தங்கள் சந்ததியோருக்குக் கல்விவிருத்தியும் கைத்தொழில் விருத்தியும் செய்து வைக்க முயல்வார்களாயின் சிறுவர்களில் நிலைத்து அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வமெனத் தெரிந்து தாய்தந்தையர் திருப்பணியில் லயித்திருப்பார்கள். அங்ஙனமின்றி தங்கள் மதமே மதம், தங்கள் தேவனே தேவனென மதோன்மத்தங் கொண்டு மதக்கடை பரப்பி தெருப்பணி தொண்டுசெய்யுங்கோளென்போர் வார்த்தையை நம்பி துரைமக்கள் திருப்பணியால் சம்பாதித்தப் பணத்தை வீணே செலவிட்டு விழலுக்கிரைத்த நீர்போல் இரைப்பதாயின் தாங்களுங்கெட்டு தங்கள் சந்ததியோருங்கெட்டு வித்தையிலும் புத்தியிலுமிகுத்த சுகசீவிகளைக்கண்டு வெம்பவேண்டியதேயாம்.

துரைமக்களிடத் திருப்பணிச் செய்து சம்பாதிக்கும் பணவுதவியால் சாதிபேதமுள்ளோர் கருடஸ்தம்பம் வரையிலுமன்று அவர்களது மூலஸ்தானம்வரையிலும் சாதிபேதமற்ற திராவிடர் போனபோதிலும் விசேடவஸ்து யாதொன்றையும் அங்குக் காணப்போகிறதுமில்லை, யாதொரு சுகபலனும் அடையப்போகிறதுமில்லை. காணும் காட்சியும் அடையும் பலனும் யாதெனில், கற்பூரப் புகையால் இருளடைந்த அறையைக் காண்பதுவே காட்சியும், கற்பூரப் புகை அனலாலடையும் ஊஷ்ணமே கண்ட பலனாகும். கருடஸ்தம்பத்தருகிலுள்ளச் சிலைகளையும் மூலஸ்தம்ப இருளறையிலுள்ளச் சிலைகளையும் போய் பயந்து பயந்து பார்ப்பதினும் (மியூஜியம்) எனுங் கண்காட்சி கூடத்திற்குச்சென்று யாதொரு பயமுமின்றி ஆனந்தமாக நின்று பார்ப்பதாயின் கணக்கற்றக் கற்சிலைகளையும், கணக்கற்ற பொற்சிலைகளையுங் கண்டு ஆனந்தித்து வருவதுடன் இத்தேசத்தில் காணாதப் பொருட்களையெல்லாம் கண்டு களிக்கலாம். அங்குள்ள சாமிகளைக் காண்பதற்கு மத்திய துபாசிகளாம் கோவில் குருக்களும் வேண்டியதில்லை. பணச்செலவும் வேண்டியதில்லை. நீவிரென்ன சாதியெனக் கேழ்ப்பார் களென்னும் பயமுமில்லை. துரைமக்கள் திருப்பணியில் கண்ணோக்கம் வைத்து அவர்கள் அரண்மனையை சுத்திகரிப்பதே கோவில் திருப்பணியாகவும் சம்பாதிப்போர் மேலும் மேலும் அத்திருப்பணியில் அவர்கள் அரண்மனையைப் பிரகாசிக்கச் செய்வதே தூபதீபமாகவும், அவர்கள் தேகத்தை சுத்திகரிக்கச் செய்வதே திருமஞ்சனமாகவும், அவர்களுக்கு நல்லாடையணைந்து காண்பதே துயிலாடையாகவும், அவர்களுக்கு வேண்டிய புசிப்பூட்டி திருப்தியடையச் செய்வதே அன்னபிஷேகமாகவும், அவர்களுக்கு சுகநித்திரையளிப்பதே சயனமஞ்சனமெனக்கருதி துரைமக்கள் திருப்பணியை அவர்கள் மனங் குளிரவும் ஆனந்தமுறவும் செய்து வருவதாயின் அவர்களது கருணையே மேலுமேலும் பெருகி தங்கள் திருப்பணித் தொண்டர்களை சுகம்பெறச் செய்வதுடன் தொண்டர்களின் சந்ததியோர்களையுங் கல்வி விருத்தி செய்து முன்னுக்குக் கொண்டுவந்து விடுவார்கள். ஆதலின் ஆங்கிலேய அரண்மனை உத்தியோகஸ்தர்களாகும் சாதிபேதமற்ற திராவிடர்கள் சாதிபேதமுள்ளோர் மித்திர பேதத்திற்கு இசைந்து கருடஸ்தம்பம் மூலஸ்தம்பமென மகிழ்ந்து வீண் மோசம் போவார்களாயின், பூர்வங் கோலுங் குடுவையுங் கொடுத்ததினும், தற்காலமோ கோமணமுமின்றி ஓட்டிவிடுவார்கள். அதாவது தங்கள் சுதேசியம் நிலைபெறும் வரையில் நீங்களும் சுதேசிகள் தான் ஆனால் கருடஸ்தம்பம் வரையிலும் வரலாமென்று கூறி சுதேசியம் நிலைத்தவுடன் நீங்கள் பழையப் பறையர் பறையர்களேயென்று பழுக்கப் பார்த்துவிடுகிறார்கள்.

வெல்லமென்னும் வாயை நக்காதீர்கள். விஷமென்றறிந்தும் விழுங்காதீர்கள். ஆயிரவருடகாலமாக அலக்கழித்து தாங்கள் சீர்கெடுத்துமன்றி நூதனமாக இத்தேசத்திற் குடியேறுவோருக்குந் தாழ்த்தியாகக்கூறி தலையெடுக்கவிடாமற் செய்துவந்தவர்கள் தற்காலம் கருடஸ்தம்பம் வரையில் வரலாமென்று வரையறுத்து அத்து பிரிப்பது அவர்கள் சுயப்பிரயோசன சுதேசியச் செயல்களுக்கேயாகும். பௌத்தர்கள் வியாரங்களில் பௌத்தர்களுக்கு அத்துபிரிக்கவும் வரையறுக்கவும் ஏனைய மதஸ்தர்களுக்கு அதிகாரமுங் கிடையாது, சுதந்திரமுங்கிடையாது. ஆதலின் துரைமக்களின் திருப்பணித் தொண்டுகளை செவ்வனே நடாத்தி அவர்களுக்கு அன்பு பெருகச் செய்யுங்கள். அன்புபெருகச் செய்யுங்கள்.

- 4:8; ஆகஸ்டு 3, 1910 -