அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/150-383

விக்கிமூலம் இலிருந்து

146. கனந்தங்கிய ஆங்கிலேய துரைமக்களும் ஆங்கிலேயர் அரண்மனை உத்தியோகஸ்தர்களும்

சாதிபேதமற்ற திராவிடர்கள் தங்கள் சத்துருக்களாகிய சாதித்தலைவர்கள் செய்துவந்த துன்பங்களினாலும் இடுக்கங்களினாலும் நசிந்து பூர்வ மடங்களையும் ஆதனங்களையும் இழந்து சீர்குலைந்து வருங்காலத்தில் காய்ந்து மடிந்துபோம் பயிறுக்குக் காலமழை பெய்து வளர்வது போல் ஐரோப்பா கண்டத்தினின்று வந்து தோன்றிய ஆங்கிலேய துரைமக்களை அடுத்து ஊழியஞ்செய்துவருங்கால் தங்கள் சாதிபேத சத்துருக்களால் நாசமடையும் போது காத்து ரட்சித்தவர்களாதலின் கடவுளர்கள் போலும், சகல சுகமுமற்று மடியும்போது பசிதீர அன்னமூட்டி ஆதரித்தவர்களாதலின் தாய்தந்தையர்கள் போலும் எண்ணி இரவும் பகலும் கட்டிடக் கார்த்து தாங்களும் சுகம் பெற்றதுமன்றி ஆங்கில துரைமக்களுக்கும் அவர்களது பொருட்களுக்கும் யாதொரு சேதமும் ஆபத்தும் வராது பாதுகார்த்து தங்கள் சந்ததியோரும் சீர்பெற்றுவந்தார்கள்.

இவர்களது அன்பின் மிகுதியையும் உழைப்பின் வன்மெயையும் பாதுகாக்குஞ் செயலையும் கண்ணுற்ற துரைமக்களும் இவர்களைத் தங்கள் பிள்ளைகளைப்போலாதரித்து தக்க உடைகளும் புசிப்பும் அளித்துக் காப்பாற்றியதுமன்றி இவர்கள் சந்ததியோருக்கும் கல்வியூட்டி தக்க உத்தியோகங்களை அளித்தும் தாங்கள் இந்தியாவை விட்டு நீங்குங்கால் தங்கள் அன்பான ஊழியர்கள் சீவிக்கத்தக்க பூமியேனும், வீடுகளேனும் வாங்கிக் கொடுத்துப் போவதுடன் மாதாந்திர சம்பள உதவியும் ஏதேனுஞ் செய்துவிட்டுப் போவது வழக்கமாயிருந்தது.

இதுவுமன்றி தாங்கள் இந்தியாவைவிட்டு ஒருவருடம் இரண்டு வருடம் இங்கிலாந்திற்குப் போய் வரவேண்டியவர்களாயிருப்பின் தங்கள் அரண்மனை உத்தியோகஸ்தர்களையே நம்பி பத்தாயிரம் இருபதினாயிரம் விலையேறப் பெற்றப் பொருட்களையும் வண்டி, குதிரைகளையும் ஒப்படைத்துப் போய் வருவது வழக்கமாகும். இவர்களும் யாதொரு சேதமும் வராமல் பாதுகார்த்து தங்கள் எஜமானர்கள் வந்தவுடன் ஓர் கந்தைத் துவாலைகளேனும் சேதமடையாது ஒப்பிவிப்பது வழக்கமாயிருந்தது.

இத்தகைய நம்பிக்கை வாய்த்த ஊழியர்கள் மீது துரைமக்களுங் கருணைபாலித்து தங்கள் பிள்ளைகளைப்போலவே இருபதுவருடம் முப்பது வருடம் தங்களிடம் வைத்திருந்து இங்கிலாந்துக்குப் போவது வழக்கமாயிருந்தது. இவர்களுந் துரைமக்களைத் தாய் தந்தையர்களென்று எண்ணி தாங்களும் சுகசீவிகளாக வாழ்ந்து வந்ததுமன்றி தங்கள் சந்ததியோருக்குங் கல்வியூட்டி சீர்திருத்தி தக்க உத்தியோகங்களிலும் அமர்த்தி வந்தார்கள்.

இவ்வகையாக இவர்கள் சீர்பெற்று முன்னேறுவதைக்காணும் சாதித்தலைவர்கள் மனம் சகியாது முன்னிருந்த துரை மக்களுக்கு இவர்கள் மீது யாது மாறுபாடுகளைக் கூறிய போதினும் சாதித்தலைவர்கள் வார்த்தைகளை சட்டைச் செய்யாது இவ்வேழை அரண்மனை ஊழியர்களை அன்பாகவே ஆதரித்து முன்னேறச் செய்துவந்தார்கள். இத்தகைய ஏழை ஊழியர்கள் உழைப்பையும் அன்பின் மிகுதியையும் கண்டு ஆதரித்து வந்த பழைய துரைமக்கள் நாளுக்குநாள் இந்தியாவைவிட்டு புதிய துரைமக்கள் வந்துசேருங்கால் இவ்வெழிய கூட்டத்தோருக்கு சத்துருக்களாகிய சாதித்தலைவர்கள் சென்று இவர்கள்மீது அன்பு பாவிக்க விடாத போதனைகளையூட்டிக் கெடுத்துவருவதுமன்றி பத்துவருடம் இருபது வருடம் ஓர் துரைமக்களிடம் நிலையாக ஊழியஞ் செய்துவருவதினால் தங்கள் பிள்ளைகளை வித்தியாவிருத்திசெய்து சுகமடைந்து வருகின்றார்களென்றெண்ணி ஒவ்வோர் துரைமக்களும் தங்களுழியர்களை நாள்பட உத்தியோகத்தில் வைக்கப்படாதென்னும் பொறாமெய் போதனைகளையுஞ் செய்துக் கெடுத்துவருகின்றார்கள். அவர்கள் போதனைகள் யாவும் கெட்ட எண்ணப் போதனைகளென்று அறியாத துரைமக்கள் அவர்கள் சொற்படி நடந்து ஏழை ஊழியர் அன்பையும் ஊக்கத்தையும் கெடுத்துக்கொண்டு வருகின்றார்கள். துரைமக்கள் அன்பும் நம்பிக்கையுமற்று ஊழியம் வாங்கிவரும் செயலை நாளுக்கு நாளுணர்ந்துவரும் ஊழியர்களோ துரைமக்களையே தாய்தந்தையர்களென நம்பி இரவும் பகலும் கட்டிக் கார்த்து உழைத்து வந்தவர்கள் மனமும் வேறுபட்டு வேண்டாவெறுப்புடன் தங்கள் ஊழியங்களைச் செய்துவருகின்றார்கள். ஆங்கில துரைமக்களுக்கு அன்புடனும் விசுவாசத்துடன் ஊழியஞ் செய்துவந்தவர்கள் தற்கால துரைமக்கள் அன்பற்றச்செயலால் தாங்களு மன்பற்று விசுவாசமற்றுவூழியஞ் செய்ய நேர்ந்துவருகின்றது. இத்தகைய துரைமக்கள் அன்பற்றச் செயலால் ஊழியர்களு மன்பற்று தாய்தந்தையரென்றெண்ணியிருந்த விசுவாசமுமற்று இரவும் பகலும் கட்டிக்கார்த்துவருஞ் செயலுமற்று துரைமக்கள் பொருட்களைக் காப்பாற்றவேண்டிய பயமுமற்று அஜாக்கிரதா வழியஞ்செய்துவருகின்றார்கள். இத்தகையாய் ஆங்கிலேய துரைமக்களுக்கு இவ்வூழியர் மீதிருந்த வன்பும், இவ்வூழியர்களுக்கு துரைமக்கள் மீதிருந்த வன்பும் நாளுக்குநாள் மாறுபட்டுவருவதைக் கண்டு வரும் இவர்களுடைய சத்துருக்கள் மறுபடியும் இவர்களைப் பூர்த்தியாகக் கெடுத்து பழய நிலைக்குக் கொண்டுவருவதற்கெண்ணி தங்கள் சுதேசியக்கூட்டத்திற் சேர்க்கத்தக்கயெத்தனங்களைச் செய்துவருகின்றார்கள்.

இவர்களும் அவர்கள் வார்த்தையை நம்பி சேர்ந்துவிடுவார்களாயின் துரைமக்களுக்குக் கோபம்பிறந்து இன்னுந் தாழ்த்திவிடுவார்கள். நாமும் அவர்களை சீர்திருத்துவதுபோல் சேர்த்து சரியாகப் பாழ்படுத்தலாமென்று பார்த்திருக்கின்றார்கள். இத்தகைய சத்துருக்களின் மித்திரபேதங்களை நோக்குங்கால் நமது மனம் திகைக்கின்றது. காரணமோவென்னில் ஆங்கிலேய துரைமக்களுக்கு வூழியர்கள் மீதிருந்த அன்பும் நம்பிக்கையும் குறைந்துவருவதும் ஊழியர்களுக்கு ஆங்கிலேயர்மீதிருந்த வன்பும் ஆசையும் மாறுதலடைந்து வருவதுமாகியச் செயல்களைக் காண்பதினாலேயாம் இப்பவும் பூர்வ ஆங்கிலேயர்கள் அன்பும் ஊழியர்களின் விசுவாசமும் மாறாமலிருக்க வேண்டுகிறோம்.

- 4:7; சூலை 27, 1910 -