அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/154-383
150. இராஜதுவேஷிகளுக்குண்டாய சட்டமும் போலீசின் சீர்திருத்தங்களும்
நமது கருணைதங்கிய பிரிட்டிஷ் பார்லிமெண்டடார் இராஜத்துவேஷ சட்டவிஷயமாயும் போலீசின் சீர்திருத்த விஷயமாயும் சில ஆலோசனைகள் செய்துவருவதாகத் தெரிகின்றது.
அதாவது நமது ராஜாங்கத்தாரால் இராஜத்துரோகிகளை தண்டிக்கவேண்டிய ஓர் சட்டத்தை நிருமித்திருக்கின்றார்கள். அச்சட்டத்தைப் பற்றி நமது தேசத்தோர் முறையிட்டுக்கொள்ளுவது யாதெனில், இராஜ துரோகச் செயல்களைச் செய்வோர்கள் யாவரும் அடங்கிவிட்டார்கள், இனியச்சட்டம் வேண்டியதில்லை, எடுத்துவிடுவது நலமென்று கூறுகின்றார்கள். இது யாதாதாரமோ விளங்கவில்லை. இராஜதுரோகிகளுக்காய சட்டத்தை எடுத்துவிட வேண்டுமென்று முறையிடுவோருக்கு இராஜதுரோகிகள் இன்னார் இனியாரென்று தெரியவருமா, அவரவர்கள் இருப்பிடங்களைக் கண்டுளரா, இராஜ துரோகிகளின் எண்ணங்களையும் செயல்களையும் நன்குணர்ந்துக்கொண்டனர்களா, விளங்கவில்லை.
இராஜ துரோகிகளின் இத்தியாதி குணாகுணங்களையும் தற்காலம் ஏற்பட்ட சட்டத்தை எடுத்துவிடவேண்டுமென்று கூறுவோர் தெரிந்திருப்பார்களாயின் இராஜதுரோகிகள் இவர்களுக்குத் தெரிந்திருந்தும் அவர்களை அடக்காதிருந்த தோஷம் இவர்களைச் சாரும். தற்கால இராஜதுரோகிகளை தண்டிக்க ஏற்பட்ட சட்டத்தை எடுத்துவிட வேண்டுமென்று முறையிடுவோர்களுக்கு இராஜதுரோகிகள் இன்னா ரினியாரென்று தெரியாமலிருக்குமாயின் தங்களுக்குத் தெரிந்ததைபோல் இராஜதுரோகிகள் அடங்கிவிட்டார்கள், அதற்காய சட்டத்தை எடுத்துவிட வேண்டுமென்று கூறுவது நியாய விரோதமேயாகும். இராஜதுரோகிகளுக்காய சட்டத்தை எடுத்துவிட வேண்டுமென முறையிடும் பெரியோர் நியாய விரோதமிது, அநியாய விரோதமிதுவெனக் கண்டறிந்து பேசல் வேண்டும். இராஜதுரோகிகளை இன்னாரினியாரெனக் கண்டறியாது அவர்களுக்காக ஏற்படுத்தியிருக்கும் சட்டத்தை எடுத்துவிடவேண்டுமென்று முறையிடுவது வீணேயாகும். ஓர் தேசத்தில் கள்ளர் தோன்றுவதைக்கண்டு களவாடுவோருக்கு இன்ன தண்டனையென்னும் சட்டம் உண்டாக்குவது இராஜநீதியாகும். சட்டம் தோன்றியபின்னர் அதற்கு பயந்து களவாடுவோரடங்கிவிடுவார்களாயின் அச்சட்டத்தை எடுத்துவிடப்போமோ. சட்டம் உண்டாய பயத்தால் கள்ளர் அடங்கினரென்பது அநுபவமாகும். அத்தகைய பயத்துக்குரிய சட்டம் இருப்பதினால் கள்ளர் தோன்றாமலிருப்பார்களா இராமல் எடுத்துவிட்டால் தோன்றாமலிருப்பார்களாவென்று ஆலோசிக்குங்கால் சட்டம் தோன்றியவுடன் அடங்கியக் கள்ளர்கள் சட்டத்தை எடுத்துவிட்டவுடன் தோன்றுவார்களென்பது துணிபாம். அதுபோல் இராஜதுரோகிகளுக்கென்று சட்டம் தோன்றியவுடன் இராஜதுரோகிகள் அடங்கிவிட்டபடியால் அச்சட்டத்தை எடுக்காது இன்னும் வலுபெறச் செய்யவேண்டியதே விதியாகும்.
ஓர்வகை பாஷாணத்திற்கு முறிவை கண்டுபிடித்தவர்கள் மேலுமேலும் அம்முறிவை விருத்திச்செய்து வைப்பார்களன்றி தேசத்தில் பாஷாணமில்லை முறிவைக்கொட்டிவிடவேண்டுமென்று எண்ணமாட்டார்கள். அதுபோல் இராஜதுரோகிகள் அடங்கியிருப்பினும், அவர்களுக்காக ஏற்பட்ட சட்டத்தை எடுக்காது நிலைபடுத்திவிட்டார்கள்.
இனிபோலீசு சீர்திருத்தங்களோவெனில், போலீசாரென்று சொல்லும் உத்தியோகஸ்தர்களை குடிகளுக்கு நேரிடும் விரோத கஷ்டங்களிற் கார்க்கவும், கள்ளர் பயங்களை அகற்றி ஆதரிப்பதற்கே நியமித்திருக்கின்றார்கள். இத்தகைய நியமனத்தோர் இராஜ விசுவாசமும் குடிகளின்மீது அன்பும் வைத்து துஷ்டர்கள் மீது கண்ணோக்கமுடையவர்களாய் அவர்களது துஷ்டச்செயலை அடக்கிக்கொண்டே வருவார்களாயின் அவர்களது நியமனப்பாதுகாப்பு என்று மழியாதுப் பிரகாசிக்கும். அங்ஙனமின்றி கருணைதங்கிய பிரிட்டிஷ் துரைத்தனத்தார் ஏற்படுத்தியுள்ள போலீஸ் நியமனங்களுக்கும், இத்தேசத்தோர் சாதியாசார மாறுபாடுகளுக்கும் முரண்பட்டு வருகின்றது. காரணமோவென்னில் இத்தேசத்தோர் நூதனமாக ஏற்படுத்திக் கொண்டுள்ள சாதியாசாரக் கட்டுப்பாடுகள் யாவும் தங்கடங்கள் சுயநலத்தை நாடி தங்களை சாதித் தலைவர்களாக வகுத்துக் கொண்டு ஏழைகளை வருத்தி அடக்கி தங்கள் காரியாதிகளை நடத்திக்கொள்ளுவதற்கேயாம்.
அத்தகைய காரியக்கர்த்தர்களுக்கு சாதியதிகாரத்துடன் போலீசு உத்தியோகமும் கிடைத்துவிடுமாயின் குடித்தனக்காரன் அம்மிக்கல்லை அதிகாரிவீட்டு கோழிமுட்டை உடைக்குமென்னும் பழமொழிக் கிணங்க குடிகளுக்குப் பலவகையான மாறுபாடுகளும், இடுக்கங்களும் தோன்றிக் கொண்டே வருகின்றபடியால் நாளுக்கு நாள் குறைகளைக் கண்ணுற்றுவரும் பிரிட்டிஷ் ஆட்சியார் போலீசு விஷய சீர்திருத்தங்களையே முக்கிய ஆலோசனைக்குக் கொண்டுவருகின்றார்கள்.
அத்தகைய போலீசின் சீர்திருத்தத்தைக் கருணைதங்கிய ராஜாங்கத்தோர் முக்கிய கண்ணோக்கம் வைத்து சாதிபேதமுள்ள இத்தேசத்தில் சாதித்தலைவர் களாயுள்ளவர்களுக்குப் போலீசு உத்தியோகங்களைக் கொடாது சாதிடோதக் கட்டுபாடுகளுக்கு உட்படாதவர்களுக்குக் கொடுத்து சீர்திருத்துவார்களாயின் போலீசு இலாக்காவில் அடுத்தடுத்து நேர்ந்துவரும் கஷ்டநஷ்ட விசாரணைகள் அமர்ந்து சுகமுண்டாகும்.
தங்களுக்குத் தாங்களே பொய்யாகிய சாதிசட்டங்களை வகுத்துக் கொண்டு அவன் சாதியை ஒளித்துச் சொல்லுகின்றான், இவன் சாதியை ஒளித்துப்பேசுகிறானென்னும் பயமுறுத்தி ஏழைக்குடிகளை நசித்து தங்கள் சுயநலங்களைப் பெருக்கி சுகமடைந்து வந்தவர்கள் இராஜாங்கப் போலீசின் நீதியதிகாரமும் பெற்றுக்கொள்ளுவதானால் ஏழைக்குடிகளுக்கு இன்னும் இடுக்கங்கள் அதிகரித்து நாளுக்குநாள் சுகமடையாது சீரழிந்து போகின்றார்கள்.
சாதித்தலைவர்களாயுள்ளவர்கள் நீதி வழுவாது தங்கள் உத்தியோகங்களை நடத்தி வந்த போதிலும் பழய சாதியாசார பயத்தால் ஏழைக்குடிகள் தங்கள் சுதந்திரங்களைக் கேழ்க்கவும் நியாய வந்நியாய விஷயங்களை யெடுத்துக் காட்டவுமியலாதவர்களாய் ஒடுங்கி முன்னேறும் வழியின்றி தவிக்கின்றார்கள்.
தன்சாதி புறசாதி என்னும் பேதமற்றதும் தன்னவ ரன்னியரென்னும் பட்சபாதமற்றதுமாகிய பிரிட்டிஷ் ஆட்சியில் அத்தகைய நிலைவாய்த்த உத்தியோகஸ்தர்களே போலீசிலமர்ந்து காரியாதிகளை நடத்தி வருவார்களாயின் பிரிட்டிஷ் ஆட்சியின் நீதிப்பிரகாசம் மேலுமேலும் ஒளிவுபெறும். அங்ஙனமின்றிசாதிபேதமற்ற ஆட்சியில் சாதிபேதமுள்ளவர்களைப் போலீசு காரியக்கர்த்தர்களாக நியமிப்பதினால் பொதுவாகிய சீர்திருத்தங்களுக்கு ஏதுவின்றி மாறுதலடைந்துக்கொண்டே வருகின்றது. இதுவிஷயங்களைக் கருணைதங்கிய பிரிட்டிஷ் ஆட்சியார் கண்ணோக்கம் வைத்து சாதிபேதமுள்ளோர்கள் நாளுக்குநாள் முன்னேறும் வகைகளையும், சாதிபேதம் இல்லார்கள் நாளுக்குநாள் பின்னடையும் வகைகளையும் ஆராய்ந்து இருவர்களையும் சமமாய சுகச்சீர்பெறச்செய்வார்களென்று நம்புகிறோம்.
- 4:11; ஆகஸ்டு 24, 1910 -