அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/160-383
156. அதிகார உத்தியோகம் யாருக்களிப்பது?
இத்தேசத்தை ஆளுகைபுரிவோர் யாரோ அவர்களது குணாகுணங்களையும் செயல்களையும் நன்கராய்ந்து அவர்களது ஒழுக்கத்திற்கும் செயலுக்கும் தக்கவாறு தெரிந்தெடுத்து அவர்களுக்கே அதிகார உத்தியோகம் அளிப்பது அழகாம்.
அங்ஙனமின்றி அரசாங்கத்தோர் ஒழுக்கத்திற்கும் செயலுக்கும் மாறுபட்டுள்ளவர்களுக்கு அதிகார உத்தியோகங்களை அளிப்பதாயின் அவர்களுக்குள்ள மாறுபட்டச்செயலால் இராஜாங்கத்திற்கு ஆறுதலில்லாமற்போம். ஆதலின் நம்மெயும் நந்தேயத்தையும் ஆண்டு ரட்சித்து வரும் பிரிட்டிஷ் ஆட்சியரின் ஒழுக்கமும் செயற்களும் யாதெனில், சகல சாதியோர் மீதினும் பேதமற்ற அன்பு பாராட்டி குடிகளுக்கு வருந் துன்பங்களை தங்களுக்கு வந்த துன்பம்போல் கருதியும், குட்டிகளுக்கு வரும் வியாதிகளை தங்களுக்கு வந்த வியாதிபோல் இதங்கியும், குடிகளுக்கு நேரும் இடுக்கங்களை தங்களுக்கு நேர்ந்த இடுக்கம்போல் பாவித்தும், குடிகளைக் கண்களைப் போலும் தாங்கள் தங்கள் கண்களின் இமையைப்போலுமிருந்து பாதுகார்த்து சுகசீரளித்து வருகின்றார்கள். இத்தகைய நீதியும், அன்பும், நெறியுமிகுத்த அரசாட்சியில் அத்தகைய ஒழுக்கமும் அன்பும் செயலும் அமைந்தவர்களுக்கே அதிகார உத்தியோகங்களை அளிப்பதாயின் சகல குடிகளும் சுகச்சீர்பெற்று ஆனந்த வாழ்க்கை அடைவார்கள்.
தற்காலம் தோன்றியுள்ள இந்திய வாழ்க்கைக் குடிகளுக்கோவெனில், பிரிட்டிஷ் ஆட்சியோருக்கு அமைந்துள்ள ஒழுக்கமும் அன்பும் செயலும் கிடையவேகிடையாவாம். உள்ள ஒழுக்கமும் செயலுமோவென்னில் நான் பெரியசாதி, அவன் சின்னசாதி, அவனிலுமவன் சின்னசாதி என்னும் பொய்யாகிய சாதிவரம்புகளை ஏற்படுத்திக்கொண்டு தங்கள் பொய்யாகுங் கட்டுக்கதைகளுக்கு எதிரிகளா இருந்து கண்டித்த விவேகிகளையெல்லாம் தீண்டாத சாதிகளென வகுத்துக்கொண்டு தாங்கள் சுகமடையவேண்டிய இடங்களிலும் செயல்களிலும் சாதியாசாரம் கிடையாது, தங்களால் தாழ்த்திவைத் திருக்கப்பட்டவர்கள் சுகமடையவேண்டிய இடங்களிலெல்லாம் சாதியாசாரமென்னும் பொய்க் கதைகளைப் புகட்டி விவேகிகளையும், ஏழைகளையும் தலையெடுக்கவிடாமற் செய்துவருகின்றார்கள்.
ஈதன்றி சில விவேகிகள் எதிர்த்து சாதி ஏதுங்காண், சமயமேதுங் காணென்று கேட்பார்களாயின் சாதித் தலைவர்களை சாமி சாமியென்று கும்பிட்டுத் திரிவோர்களையும் ஒன்று கூடிக்கொண்டு அவன் சாதியை ஒளிக்கின்றான் இவன் சாதியை ஒளிக்கின்றானென பயமுறுத்தி தங்கள் சுயகாரியங்களில் சுகமடைந்து வந்தவர்களுக்கு பிரிட்டிஷ் ஆட்சியைச் சேர்ந்த அதிகார உத்தியோகங்களும் அளித்துவருவதாயின் ஏழைக் குடிகளை இன்னும் எவ்வகையால் தாழ்த்தி ஏதேது கேடுகளைச் செய்து முன்னிலும் பின்னும் ஏது வாதிப்பார்களென்பதை தெரிந்துக் கொள்ளவேண்டியதுதான்.
இத்தேசப் பூர்வக்குடிகள் சாதித்தலைவர்களின் வேஷங்களால் நசுங்குண்டு நாளுக்குநாள் தலையெடுக்க ஏதுவின்றி சீர்கெட்டிருக்குங்கால் அத்தகைய சாதிஅதிகாரத்துடன் உத்தியோக அதிகாரங்களையும் கொடுத்துவிடுவதினால் காற்றுடன் நெருப்புங் கலந்துக்கொள்ளுவதுபோல் சாதி அதிகாரத்துடன் உத்தியோக அதிகாரங்களையும் பெற்று அவர்களுக்கு எதிரிகளாகும் இத்தேசப் பூர்வக்குடிகளை எங்கும் தலைக்காட்டவிடாமல் ஒட்டிவிட ஆரம்பித்துக் கொண்டார்கள். இக்கொடிய ஆரம்பத்தால் பூமியை உழுது சீர்திருத்தும் உழைப்பாளிகளும் கைத்தொழிலுக்கு உழைத்து கண்டுபிடிக்கும் உழைப்பாளிகளும் பலத் தொழிலிலும் உழைத்து பாடுபடும் கஷ்டவாளிகளும் பலதேசங்களுக்குஞ்சிதறி ஓடிப்போனதுபோக இன்னும் உள்ளவர்களும் போகின்றடியால் இத்தேசத்திலுள்ள பூமிகளின் விருத்திகளும் வித்தியவிருத்திகளும் நசிந்து தேசம் சீர்கெடுவதுடன் அரசாங்கத்தோருக்கும் ஆனந்தமில்லாமல் குடிகளுக்கும் சுகமில்லாமற் போய்விடுகின்றது.
இவற்றுள் சாதித்தலைவர்களென வேஷம் போட்டுள்ளார்கள் யாவரும் பல்லக்கிலேயே ஏறிச் செல்லவேண்டும் என்பாராயின் அப்பல்லக்குகளை தூக்குகின்றவர்கள் யாவர். தாழ்ந்த சாதியோர் தூக்கிச் செல்லவேண்டும் என்பாராயின் அவர்களை எதிர்த்து நாங்கள் ஒருவருக்குத் தாழ்ந்த சாதியோருமல்ல, எங்களுக்கு உயர்ந்த சாதியாருமில்லையெனத் துணிந்துக் கூறுவார்களாயின் பல்லக்கு மற்றும் பல்லக்கு எடுப்போனு மற்றுப்போமன்றோ, அக்கால் ஏறிச்செல்வோன் இஞ்சித்தின்னக் குரங்கைப்போல் இளிக்க நேரிடுமென்றறியாது சாதியதிகாரத்துடன் உத்தியோகவதிகாரத்தையும் பெற்றுக்கொண்டு உழைப்பாளிகளாய் உள்ளப்பூர்வக்குடிகளை ஊரை விட்டோட்டிக்கொண்டே வருகின்றார்கள். அவ்வகை ஓட்டுகின்றவர்களாயினும் ஏறு பிடித்துழுது பூமிகளை விருத்தி செய்கின்றார்களா, ஆயுதங்களைப் பிடித்து வித்தியாவிருத்தி செய்கின்றார்களா அதுவுங் கிடையாது. சாதி அதிகாரமும் வேண்டும், அதிகார உத்தியோகங்களும் வேண்டும் தங்களுக்கு விரோதிகளாயுள்ளோர்களை ஊரைவிட்டு ஓட்டவும் வேண்டுமென்றால் தேசம் சீர்பெறுமோ அரசாங்கத்தோர் ஆனந்திப்பர்களோ, குடிகள் சுகமடைவர்களோ இல்லை.
இத்தகைய இடுக்கச் செயல்களையும் அச்செயல்களுக்கு காரணங்களாயுள்ளோர் குணாகுணங்களையும் கருணைதங்கிய இராஜாங்கத்தோர் கண்ணோக்கமுற்று இத்தேசத்தோர் சாதி அதிகாரத்தினால் ஏழைக்குடிகளை எவ்வெவ்வகையால் வருத்தி ஏதேதுவகையால் சீர்கெடுத்து நசித்து வருகின்றார்கள். இத்தகையோருக்குள்ளசாதி அதிகாரத்துடன் நமது ராஜாங்க அதிகார உத்தியோகத்தையும் கொடுத்து வருவதினால் ஏழைக்குடிகளின் கேடுகளுக்கு இன்னும் என்ன உதவியாகிவிடுமென்று ஆராய்ந்துக் கருணை வைப்பார்களாயின் இத்தேசத்து பூமிகளின் விவசாயக்குறைவும் கைத்தொழில்களின் விருத்திக் குறைவும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெள்ளற விளங்கும்.
ஆதலின் பூமியின் விருத்திகளையும், கைத்தொழில் விருத்திகளையும் கோறும் கருணைதங்கிய ராஜாங்கத்தோர் பூர்வ ஏழைக்குடிகளின்மீது கருணை பாவித்து அதிகார உத்தியோகங்களைத் தங்களை ஒத்த ஒழுக்கமும் காருண்யமும் செயலுமுள்ளவர்களுக்கே அளித்து ஆதரிப்பார்களென எதிர்பார்க்கின்றோம்.
- 4:15; செப்டம்பர் 21, 1910 -