அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/161-383
157. செல்ப் கவர்ன்மெண்ட் அல்லது சுயராட்சியம்
சுய ராட்சியத்திற்கு உரியவர்கள் யார். செல்ப் கவர்ன்மெண்டை நடத்தப்போகின்றவர்கள் யார். இத்தேசத்தில் நூதனமாகக் குடியேறியுள்ள ஆரியர்களா அன்றேல் இத்தேசப் பூர்வக் குடிகளாகும் திராவிடர்களா. இவ்விருவர்களுள் யார் உரியவர்கள் என்பதைக் கண்டறிந்தே பேசல் வேண்டும்.
இத்தேசத்தில் நூதனமாகக் குடியேறியுள்ள ஆரியர்களின் ஒழுக்க தன்மங்களுக்கும், பூர்வக் குடிகளாயுள்ள திராவிடர்களின் ஒழுக்க தன்மங்களுக்கும் நாளதுவரையில் மாறுபட்டிருப்பதை அநுவத்திற் கண்டறியலாம். அதாவது திராவிடர்களின் சுபாசுப காரியங்களுக்கு இத்தேச சகல பாஷைக்காரர்களும் வருவார்கள். ஆரியர்கள் மட்டிலும் வரமாட்டார்கள். சாதியாசாரத்தைப் பற்றிக்கொண்ட சில திராவிடர்களின் சுபாசுபங்களுக்கு ஒருவர் இருவர் வந்தபோதினும் அரிசியையும், துட்டையும் பெற்றுக்கொண்டு அகன்றுவிடுவார்களன்றி சுபாசுபத்திற் கலக்கவே மாட்டார்கள்.
ஆரியர்களின் சுபாசுப காரியங்களுக்கு அவர்களைச் சார்ந்த ஆரியர்களே போவார்களன்றி அவர்கள் நூதனசாதியிற் சம்மதித்த திராவிடர்களாயினும் அவர்கள் நூதன சாதியிற் சம்மதப்படா திராவிடர்களாயினும் ஒருவரும் போகவுமாட்டார்கள் அவர்களழைக்கும் வழக்கமுங் கிடையாது. திராவிடர்கள் செய்யும் தானங்களோவெனில் இத்தேசத்திலுள்ள சகல பாஷைக்காரர்களுக்கும் அளிப்பது வழக்கமாகும். ஆரியர்கள் செய்யும் தானமோ வென்னில், அவர்களைச்சேர்ந்த ஆரியர்களுக்கே செய்வார்களன்றி ஏனையோர்களைத் தங்கள் நாட்டாரென்றுக் கருதி தானஞ் செய்யவே மாட்டார்கள்.
ஏனெனில் அவர்கள் இத்தேசத்திற்கு அன்னியப்பட்டவர்கள். ஆதலின் அவர்கள் தங்கள் சுயசாதியோர் விருத்தியையும் தங்கள் விருத்தியையும் கருதுவார்களன்றி இத்தேசத்தோராம் திராவிடர்களின் விருத்தியைக் கருதுவதே கிடையாது. திராவிடர்களாம் இத்தேசப் பூர்வக் குடிகளை அன்னியதேச ஆரியர்கள் வந்து செயித்து மேற்கொண்டார்களென்று சிலக் கட்டுமொழிக் கூறுகின்றார்களாம். அத்தகையக் கூற்று அவர்களது அநுபவத்திற்கே மாறாகும். எங்ஙனமெனில், ஆரியரென்போர் இத்தேசத்துள் குடியேறும்போதே பிச்சையேற்றுண்டே குடியேறியுள்ளார்கள். அதன் அநுபவம் மாறாது நாளதுவரை இரந்துண்ணுந்தொழில் அவர்களுக்குள் மாறாமலிருக்கின்றது.
இத்தேசத்தோரால் தொழில்களுக்கென்று வகுத்திருந்தப் பெயர்களையெல்லாம் சாதிகளென்று மாற்றி கல்வியற்ற பெருங்குடிகளை வசப்படுத்திக் கொண்டு வஞ்சினத்தாலும், சூதினாலும், கபடத்தினாலும், பலவகை மாறுபாடுகளினாலும் திராவிடர்களை மேற்கொண்டார்களேயன்றி யுத்தத்தினால் மேற்கொண்டார்களென்பது கனவிலும் நினைக்கக்கூடியதன்று. ஆரியர்கள் அத்தகைய யுத்தவீரர்களாய் இருப்பார்களாயின் நாளதுவரையில் ஆரியர்களைக்கண்டு திராவிடர்கள் ஓடுகின்றார்களா, திராவிடர்களைக்கண்டு ஆரியர்கள் ஓடுகின்றார்களாவென்னும் அநுபவப்போக்கில் வல்லபத்தைக் கண்டுக்கொள்ளலாம்.
இத்தேசத்துள் ஆரியர்களுக்குச் சத்துரு சாதிபேதமற்ற திராவிடர்களேயாகும். திராவிடர்களுக்குச் சத்துரு ஆரியர்களேயாவர். காரணமோவென்னில் ஆரியர்கள் சத்தியதன்மமாம் புத்ததன்மங்களை மாறுபடுத்தி அசத்திய தன்மங்களையும், அசத்திய சாதிவரம்புகளையும் ஏற்படுத்திவந்தகாலத்தில் அசத்தியதன்மங்களையும், அசத்திய சாதி வரம்புகளையும் சகலருக்கும் விளக்கி பொய்ம்மொழிகளை ரூபித்துவந்த திராவிடர்கள் யாவரும் சத்துருக்களானார்கள். அத்தகைய ஆரியர்களின் சத்துருக்களாகிய திராவிடர்களே தற்காலம் சண்டாளர்களென்றும், தீண்டாதவர்களென்றும், தீயர்களென்றும், பறையர்களென்றும் தாழ்த்தப்பட்டு நிலைகுலைந்திருக்கின்றார்கள்.
இத்தகைய காலத்தில் அன்னியதேசத்தோராம் ஆரியர்களுக்கும் அவர்கள் வாக்கை சிரமேற்றாங்கிநிற்பவர்களுக்கும், செல்ப் கவர்ன்மெண்டென்னும் சுயராட்சியம் அளித்துவிடுவதாயின் சாதிபேதமற்ற திராவிடர்களாம் அறுபது லட்சத்திற்கு மேற்பட்டக் குடிகள் யாவரும் அதோகதியால் மாய்ந்து அடியோடு சாய்ந்துவிடுவார்களென்பது சத்தியம் சத்தியமேயாம்.
நமது கருணைதங்கிய பிரிட்டிஷ் அரசாட்சியார் இந்தியர்மீது கிருபை பாலித்து சுயராட்சியமளிப்பதாயின் அச்சுயராட்சியத்திற்கு உரியவர்கள் திராவிடர்களேயன்றி ஆரியர்களாக மாட்டார்கள். இந்து தேசத்தை சிறப்படையச் செய்தவர்கள் பூர்வ திராவிடர்களே யாகுமென்பதை சரித்திரத்தாற் காணலாம். இந்துதேசச் சிறப்பையும், இந்தியர்களின் ஒற்றுமெயையும் பாழ்படுத்தி சீர்கெடச்செய்தவர்கள் ஆரியர்களே என்பதை அவர்களது அநுபவத்திற் காணலாம்.
ஆதலின் நீதியும், நெறியவும், கருணையும்வாய்ந்த பிரிட்டிஷ் ஆட்சியார் கண்ணோக்கம் வைத்து மற்ற சாதியோர் கல்வியிலும், செல்வத்திலும் மிகுத்திருப்பதுபோல் சாதிபேதமற்ற திராவிடர்களையும் முன்னேறச்செய்து அவர்கள் சுகச்சீரும் அறிவின் விருத்தியும் பெற்றபின்னர் சுயராட்சியம் அளிப்பார்களாயின் சருவ மக்களும் சுகச்சீர் பெற்று நல்வாழ்க்கைப் பெறுவதுடன் பிரிட்டிஷ் ராஜவிசுவாசத்திலும் நிலைத்து மிக்க நன்றியறிதலுள்ளவர்களாவார்கள். அப்போதே பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்ட திராவிடர்களின் சுயராட்சிய சிறப்பு உலகெங்கும் பிரகாசிக்கும். அத்தகையப் பிரகாசத்தால் பிரிட்டீஷ் ஆட்சிக்கும் இணையில்லா ஆறுதலுண்டாம்.
- 4:16; செப்டம்டர் 28, 1910 -