அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/172-383
168. பாபு சாரத சரண மித்திரா அவர்களின் மார்க்கம்
கிரேக்கர் ரோமானியரைவென்றபோல் தாங்கள் ஆங்கிலேயரை வெல்லவேண்டுமென்றும், சகலரும் தேவநாகிரிலிபியை எழுதவும், இந்தி பாஷையில் பேசவேண்டுமென்றும், இந்துமதத்தோர் சகலரும் ஒற்றுமெய் பெறவேண்டுமென்றுங் கூறி இந்துசபை ஒன்று ஸ்தாபித்து பலயிடங்களிற் பிரசங்கங்களும் செய்துவருவதாக நவம்பர்மீ 5உ-ய சுதேசமித்திரனில் வெளியிட்டிருக்கின்றார்கள்.
இதே பாபு சாரத சரண மித்திரா என்பவர் வங்காள ஐகோர்ட் ஜட்ஜிகளிலொருவராயிருந்ததாகவும் வரையப்பட்டிருக்கின்றது. இத்தகைய ஓர் பெருத்த நியாயாதிபதி உத்தியோகம் பெற்று தன்னை சகல மக்களும் (லார்ட்) லார்ட் என்று சொல்லும்படியான அந்தஸ்துக்கும், கெளரதைக்குங் கொண்டுவந்து வங்காளதேசமெங்கும் பிரகாசிக்கச் செய்தவர்கள் ஆங்கிலேயர்களா அல்லது இந்துக்களா என்பதை பகுத்துணராது ஆங்கிலேயரைவென்று அரசுபுரிய வேண்டுமென்னு மதி, ஏதுமதியோ விளங்கவில்லை. தீட்டிய மரத்திற் கூர் பார்ப்பதுபோல் தனக்கு விவேகவிருத்தி செய்துப் பிரகாசிக்கச்செய்த ஆங்கிலேயர்களின் நன்றியை மறந்து அவர்களது அரசையே கைப்பற்றவேண்டுமென்னும் எண்ணங்கொண்ட பாபு சாரத சரண மித்திரருக்கே இந்தியதேச சக்கிரவர்த்தி பட்டத்தை இந்துக்கள் அளித்துவிடுவார்களோ. அவ்வகை அளிப்பினும் ஆயிரத்தியெட்டு சாதிப்பிரிவு, ஐம்பத்தியெட்டு சமயப்பிரிவுள்ள முப்பதுகோடி மக்களை முநிந்தாளும் வல்லபமுண்டோ. இந்த தேசத்தில் சிற்றரசு நடாத்திவரும் அரசர்களே ஆங்கிலேயர் அரசாட்சிக்கு அடங்கியே தங்களது ராட்சியங்களை ஆண்டுவரவேண்டுமென்றும், அவர்களது உதவியே தங்களுக்கு எக்காலமும் இருக்கவேண்டுமென்றும் கோரி தங்கள் ராஜகாரியாதிகளை நடத்திவருங்கால் ராஜகீயவல்லபம் ஏது மற்ற ஓர் நியாயாதிபதியாயிருந்தபாபு சாரத சரண மித்திரருக்கு ஆங்கிலேயரது ஆளுகையை அபகரிக்கவேண்டுமென்னும் எண்ணத் தோன்றி கிராமங்கள் தோரும் பிரசங்கிக்க ஏற்பட்டது பேராசையே ஆகும்.
அதாவது கனி உருசியாயுள்ளதென்று மரத்தை வேரோடு பிடுங்க எத்தனிப்பதுபோல் ஆங்கிலேயர் தனக்களித்துள்ள உத்தியோக கெளரதையால் வங்காளநாட்டோர் யாவரும் தன்னைக் கர்த்தனே கர்த்தனென்று அழைத்தபடியால் இவ்விந்துதேச முழுவதையும் ஆட்சி செய்வோமாயின் சகல இந்துக்களும் சாமி சாமி யென்றுக் கொண்டாடுவார்களென்று எண்ணி விட்டார் போலும்.
இவரது இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் யாவரும் இந்திபாஷைக் கற்றுக்கொள்ள இருநூறு வருடஞ் செல்லும். இந்திபாஷைக் கற்றுக்கொண்ட பின்னால் இந்திய சாதியோர்கள் யாவரையும் ஒருசாதியாகச் செய்ய ஒரு நூறு வருடஞ் செல்லும். சாதிகள் யாவும் ஒன்றுபட்டவுடன் உன்சாமி பெரிது, என்சாமி பெரிதென்னும் மாளா வழக்கிட்டுவரும் சருவமதங்களும் ஒருமதமாக ஒருநூறுவருடஞ் செல்லும். இத்தகைய ஒற்றுமெநாள் கண்டடைய பாபு சாரத சரண மித்திரர் என்றுஞ் சிரஞ்சீவி பட்டம் பெறவேண்டியதேயாகும். அத்தகைய சிரஞ்சீவி பட்டமும் ஏழுபேருக்குதான் அளித்துள்ளதென அவர்கள் மதாசாரியர்கள் கூறியுள்ளபோதினும் அச்சிரஞ்சீவிபெற்ற எழுவரில் ஒருவரையேனுங் கண்டதுங்கிடையாது கண்டோமெனக் கூறியவருங் கிடையாதாதலின் அச்சிரஞ்சீவி என்னும் மொழியும் பொய்ம்மொழியாய் உள்ளதாதலின் அன்னோர் முயற்சிகள் யாவும் வீண்முயற்சியேயாகும்.
அன்னோர் முயற்சியில் இன்னோர் விபரீதமும் உண்டு. அதாவது யாதெனில், பணக்காரர்களும், உயர்ந்தவகுப்போருமன்றி மத்தியஸ்தர்களே ஏழைகளை சீர்திருத்தி சமரசத்திற்குக் கொண்டுவரவேண்டுமென்று கூறினராம். ஈதோர் சுயகாரிய போதனைபோலும். பணக்காரர்களும், உயர்ந்த வகுப்பாரும் ஏழைகளை சீர்திருத்தாது மத்தியஸ்தர்கள் சீர்திருத்துவதாயின் எளிதாமோ. பணமும் விவேகமில்லாமல் ஓர் சீர்திருத்தம் நிலைபெறுமோ அல்லது உயர்தரத்தோரும் பணக்காரர்களும் ஒன்றுசேர்ந்து சகல சுகங்களையும் அநுபவித்துக்கொண்டு மத்தியஸ்தர்களையும் ஏழைகளையும் சம ஏவலுக்காளாக்கிக் கொள்ளுவதற்கோ உயர்ந்தோர்கள் என்போர் விவேகத்தில் முதிர்ந்த மேதாவிகளா அன்றேல், தங்களுக்குத் தாங்களே உயர்ந்த சாதியோரென்று சொல்லிக்கொள்ளுகிறவர்களா. விவேகமுதிர்ந்த மேதாவிகளாயின் பாபு சாரத சரணமித்திரர் மொழியை மதியார்கள். தங்களுக்குத் தாங்களே உயர்ந்த சாதியோரென்று சொல்லிக் கொள்ளுகிறவர்களாயின் பாபு அவர்கள் மொழியை சிரமேற்கொண்டு அவர் சொல்லுமிடங்களுக்கெல்லாம் ஏந்தித்திரிவர். இத்தகைய ஆலோசினை உயர்ந்த சாதியென்னும் வேஷமிட்டுள்ளோரே சகல சுகங்களையும் அநுபவித்துக் கொண்டு மத்தியஸ்தர்களையும், ஏழைகளையும் சமயேழைகளாக்கிவிடுவதற்கு ஈதோர் போதனாவுபாயம் என்றே கூறல் வேண்டும்.
பிராமணனென்னு மொழியின் பொருளென்ன. அது எக்காலத்தில் யாரால் வகுத்தப் பெயரென்றும், க்ஷத்திரியனென்னு மொழியின் பொருளென்ன, அதுவும் எக்காலத்தில் யாரால் வகுத்தப் பெயரென்றும், வைசியனென்னு மொழியின் பொருளென்ன, அதுவுமெக்காலத்தில் யாவரால் வகுத்தப் பெயரென்றும், சூத்திரனென்னு மொழியின் பொருளென்ன, அதுவும் எக்காலத்தில் யாவரால் வகுத்தப் பெயரென்றுங் கண்டறிந்து கல்வியற்றவர்களுக்கு விளக்கி சமரச சீருக்கும் ஒற்றுமெய்க்குங் கொண்டு வருகிறவர்களைக் காணோம்.
தொழிற்பெயர்களை சாதிப்பெயர்களாக வகுத்துக்கொண்ட மந்தமதியோருக்கு அறிவுருத்தி அவரவர்களுக்குள்ள சாதி கர்வத்தையும், மதகர்வத்தையும் அகற்றி செவ்வை செய்து சீர்பெறும் வழிகளை விடுத்து ஆங்கிலேயர்களை ஓட்டிவிட்டு தாங்களே அரசாளவேண்டுமென்று எண்ணுவது தூலத்தை அறுத்தடித்துள்ள ஆப்பைப்பிடுங்கிவிடுங் குரங்குக்கு ஒப்பாயதேயாம்.
சாதிபேதமும், சமய பேதமும் நிறைந்த இத்தேசத்துள் ஆங்கிலேய துரை மக்களின் ஆதரவை ஊன்றிக்கொண்டே சீவிப்பது அழகாகும். அங்ஙனமின்றி நமது பாபு அவர்கள் கூறிய மொழியைக்கேட்டு நடப்பதாயின் ஆப்பைப் பிடுங்கிவிட்ட குரங்கினும் அதி பாடுபட வேண்டியது திண்ணமேயாம்.
- 4:23; நவம்பர் 16, 1910 -