அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/173-383

விக்கிமூலம் இலிருந்து

169. ஆசைக்கோர் அளவுமில்லை ஆலோசிக்க நேரமுமில்லை

அதாவது, ஓர் மனிதன் தனக்கென்னுமோர் சித்திரமாளிகையைக் கட்டுங்கால் அதனைக் காணும் மற்றோர் மனிதன் அது போல் கட்டவேண்டுமென்றாசிப்பது சுவாபம். ஒருவன் தனது தோட்டந் துரவுகளை விருத்திசெய்து நந்தவனங்களையமைத்து பலபுட்பங்களை வளர்த்து பரிமளிக்கச் செய்வானாயின் அவற்றைக்காணும் மற்றொருவன் அதைப்போற் செய்யவேண்டுமென்றாசிப்பான். ஒருவன் தக்க ஆடைகளையும், ஆபரணங்களையும் அணைந்து வெளிதோன்றுவானாயின் அவனைக்காணும் மற்றொருவன் அதைப்போலணைய ஆசிப்பான். ஒருவன் தனது அழகிய ரதத்தில் வெண்மெநிற அசுவங்களைப் பூட்டி உலாவுவதற்கு வெளிதோன்றுவானாயின் அவற்றைக்காணும் மற்றொருவன் அத்தகைய ரதமூர ஆசிப்பான்.

இத்தகைய ஆசையின் பெருக்கத்தால் இருப்பில் பணமிருக்கினும் ஒருபொருள் கிடைத்தால் மறுபொருள் கிடையாது, எடுத்தவிஷயம் முடிவுபெறாது துக்கிப்பதுமுண்டு. சகலமுங்கிடைத்து எடுத்தகாரியம் முடிவு பெறினும் அதனை அநுபவிக்கும் தேகசுகமின்றியும், மக்கள் பெருக்கமின்றியும் அதி அல்லலடைவதும் உண்டு. காரணமோவென்னில், ஒருவன் எடுத்துச்செய்யும் ஏதுக்குத்தக்க நிகழ்ச்சிகள் மற்றொருவனுக்கும் நேராதாதலின் அதிதுக்கத்திற்கு ஆளாகின்றான்.

ஓர் குடும்பச்செயலின் நிகழ்ச்சி அவன் எண்ணம்போல் நிகழாது அல்லலடையுங்கால் ஓர் கிராமத்தை ஆண்ட அக்குடிகளைப் பாதுகாக்கும் நிகழ்ச்சி எண்ணம் போல் நிகழுமோ. ஓர் கிராமக் குடிகளைக் காக்கும் வல்லபமும், பாகுபாடுகளும் வகையற நிகழாவிடின் ஓர் தேசத்தை ஆளப்போமோ. ஆளும் ஆளுகையும் அடங்கிவாழுங் குடிகளும் எண்ணம் போலமையுமோ ஒருக்காலும் அமையாவாம். அவ்வகை அமைதற்குக் காரணம் அரசருக்கு அடங்கிய மதியூகிகளாம் அமைச்சர்களிருத்தல் வேண்டும். அமைச்சர்களுக்கடங்கிய பாதுகாப்பாளர் இருத்தல் வேண்டும். பாதுகாப்பாளருக்கு அடங்கிய படைகளிருத்தல் வேண்டும். படைகளுக்கடங்கிய குடிகளிருத்தல் வேண்டும். அங்ஙனமிராது குடிகளடங்காவிடின் படைகளிருந்தும் பயனில்லை. பாதுகாப்பாளர் அடங்காவிடின் அதியூகமுற்ற அமைச்சர்களிருந்தும் பயனில்லை. அதியூக அமைச்சர்கள் இருந்தும் சகலரையும் அடக்கியாளும் வல்லமெமிகுத்த அரசளில்லாவிடின் பயனில்லை. இத்தியாதி காரணகாரியங்களை ஆலோசியாமல் பேராசை கொண்டு ஒன்றைக் கட்டியாள வேண்டுமென்றெண்ணுவது உள்ளதுங்கெட்டு பாழடைவது திண்ணமேயாம். பேராசையாலும், முன்பின் ஆலோசிக்காச் செயலாலும், கிஞ்சித்துக் கல்விகற்று சிற்சில அதிகார உத்தியோகங்களில் அமர்ந்து உபகாரச் சம்பளம் பெற்றுள்ளவர்களும் கலைவிருத்தி யாதுமற்று பி.ஏ., எம்.ஏ. பட்டம் பெற்று உத்தியோகமற்று அலைவோர்களும் ஒன்றுகூடி வித்தையும், புத்தியும், ஈகையும், சன்மார்க்கமும், வல்லமெயும் நிறைந்த ஆங்கிலேய துரைத்தனத்தாரை ஓட்டிவிட்டுத் தாங்களே ஆண்டுக்கொள்ளலாமென்று எண்ணுகின்றார்கள். இத்தகைய ஆலோசனையற்றப் பேராசையால் தாங்கள் கெட்டு சீரழிவதுடன் ஏழைக்குடிகள் யாவரையும் இழுத்து இழிவுக்குள்ளாக்கப் பார்க்கின்றார்கள்.

இத்தகைய வித்தையற்றவர்களும், விதரணையற்றவர்களும், ஈகையற்றவர்களும், சன்மார்க்கமற்றவர்களும், வல்லமெயற்றவர்களுமானோர் தங்கள் தங்கள் பேராசையின் மிகுதியாலும், பகுத்தறியா குணத்தினாலும் கூட்டங்களைக் கூட்டியும், பத்திரிகைகளில் வரைந்தும் இராஜதுரோகிகளாகின்றார்கள். பேராசையால் துரோக சிந்தை மிகுத்தக் கூட்டத்தோர்களை சேராமலும், இராஜதுரோகப் பத்திரிகைகளைக் கண்களிற்பாராமலிருப்பதே பிரிட்டிஷ் ஆட்சியின் குடிகளுக்கு அழகாகும். பகுப்பற்ற பேராசையுள்ளோர் பேச்சை நம்பி மற்றக் குடிகளும் பின்தொடருவாராயின் இரும்பை அடிக்கும்படி துரும்பையும் நசித்து விடுவதுபோல் பகுத்தறிவற்றப் பேராசையால் பத்து பேர் கூடிச்செய்யும் வீண்செயலுடன் சேர்ந்துக்கொள்ளும் பதினாயிரங் குடிகளும் பாழடையவேண்டியதேயாம்.

எவ்வகையாலென்னில், சாதி ஆசாரமென்னும் பொய்க்கதைகளை உண்டுசெய்து அதில் தங்களைப் பெரியசாதிகளென வகுத்து மற்றவர்களை அடக்கியாளுவதுபோல் பிரிட்டிஷ் ஆட்சியைப் பெற்றுக் கொண்டு மற்றக் குடிகளை இன்னும் அடக்கியாளவேண்டுமென்னும் எண்ணமுள்ள பேராசை மிகுத்தோரைப் பின்பற்றுவது உள்ளக்கூடிகள் இன்னுங் கேடடையுமென்பது திண்ணம்.

எக்காலுந் தங்கள் சுயசாதிகளின் சேர்க்கைகளையும், சுயசாதிகளின் விருத்திகளையும், சுயசாதிகளின் சுகங்களையுங் கருதியுள்ளக் கூட்டத்தோருடன் ஏனையோர் கூடி உதவிபுரியினும் தாழ்ந்த வகுப்பான் தாழ்ந்த வகுப்பானென்றே புறக்கணித்து தங்கள் சுகத்தைப் பார்த்துக்கொள்ளுவார்கள். அத்தகைய சுயப்பிரயோசனக் கூட்டத்தோர் கூட்டுரவிலும் அவர்கள் முகத்திலும் விழிக்காது சகலர் சுகத்தையுங் கருதி சகலரும் மாடமாளிகைகளில் வாழ்கவேண்டும், சகலரும் ஆடையாபரணங்கள் அணைந்திருத்தல் வேண்டும், சகலரும் வண்டி குதிரைகளில் ஏறி உலாவல்வேண்டும், சகலரும் தங்களைப்போல் ஆனந்தத்தில் இருக்கவேண்டுமென்னும் அன்பு மிகுந்த பிரிட்டிஷ் ஆட்சியே இவ்விடம் நிலைத்து அவர்களது ஆளுகைக்குள் சகலரும் வாழ்கவேண்டுமென்று எண்ணுவதே இராஜவிசுவாசிகளுக்கழகாகும். இத்தகையக் கருணைமிகுத்த ஆங்கிலேய அரசாட்சியைக் கருதாது பேராசைமிகுத்த பகுத்தறிவற்றவர் பேச்சைக் கேட்பது பத்திலும் பாழேயாம்.

- 4:24: நவம்பர் 23, 1910 -