உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/192-383

விக்கிமூலம் இலிருந்து

188. சத்தியவாதி யென வெளிதோன்றி அசத்தியும் பேசப்போமோ

ஒருநாளும் பேசலாகாது. அவ்வகைப் பேசுவதாயின் சத்தியவாதி யென்னும் பெயர் பொருந்தாது. விவேகமும் பெருந்தகைமெயும் வாய்த்த பரோடா மகாராஜனவர்களது சீர்திருத்த வாக்கியங்களில் கசிமலமாம் சாதியாசாரத்தை ஒழிக்க வேண்டுமென்பதும் ஓர் வாக்கியமாகும்.

அத்தகைய வாக்கியத்தைக் கேட்ட சத்தியவாதி என்பவர் துள்ளிக் குதித்து சாதியாசாரம் இந்தியாவில் மட்டுமன்று, உலகெங்கு முள்ளதென்றும் சாதியாசாரம் உள்ளபடியால் அனந்த சுகங்களுண்டென்றும், அவ்வகையில்லாவிடின் தேசங் கெட்டுப்போமென்றும், அமேரிக்கர்கள் சாதியாசாரத்தை மதிக்கின்றார்களென்றுங் கூறியுள்ளார்.

இவரது கூற்று எவ்வளவு சத்தியத்தை விளக்குகின்றது, எவ்வளவு அசத்தியத்தை விளக்குகின்றது என்பதை ஆய்ந்தறிவோமாக. இந்துக்களென்போர் சாதியாசாரமோவென்னில், அந்த ஐயர் வீட்டில் இந்த ஐயர் சாப்பிடமாட்டார், அந்த முதலியார் வீட்டில் இந்த முதலியார் சாப்பிட மாட்டார், அந்த நாயுடு வீட்டில் இந்த நாயுடு சாப்பிடமாட்டாரென்பார். ஐயா, ஐயரென்றால் ஒன்றுதானே, முதலியென்றால் ஒன்றுதானே, நாயுடென்றால் ஒன்றுதானே, ஏனவர்கள்வீட்டில் சாப்பிடப்போகாதென்றால், அவர் வேறு ஐயர், நாங்கள் வேறு ஐயர். அவர் வேறு முதலியார் நாங்கள் வேறு முதலியார், அவர் வேறு நாயுடு, நாங்கள் வேறு நாயுடு. ஆதலின் ஒருவர்வீட்டில் ஒருவர் சாப்பிட மாட்டோம் என்பார்கள்.

ஐரோப்பியர், அமேரிக்கர்களின் பிரிவினைகளோவென்னில், சக்கிலிவேலை செய்பவன்வீட்டில் அரசகுடும்பத்தான் பெண் கொள்ள மாட்டான். ஆனால் சக்கிலிவேலை செய்பவன் சமயல் வட்டித்து புசிப்பளிப்பானாயின் அரச குடும்பத்தான் பேதமின்றி புசிப்பான். சக்கிலிவேலை செய்பவன் பெண் ரூபவதியாயிருந்து அரசபுத்திரன் இச்சிப்பானாயின் களங்கமின்றி விவாகஞ் செய்துக் கொள்ளுவான். அக்காலத்தில் அரசகுடும்பத்தோர் யாவரும் வந்துசேர்ந்து பேதமின்றி புசிப்பெடுத்துக் கொள்ளுவார்கள். சக்கிலிவேலை செய்பவன் அத்தொழிலைவிட்டு நீங்கி நன்கு வாசித்து விவேகவிருத்தி அடைவானாயின் ஆலோசினை சங்கத்தோருடன் ஓரங்கமாக சேர்க்கப்படுவான். அரச குடும்பத்தோருடன் கலந்தும் புசிப்பான். இதுவே ஐரோப்பியர், அமேரிக்கர்களின் செயல்களாகும். இத்தகைய செயலை இந்துக்களது சாதியாசாரத்துடன் ஒப்பிடுவது கஸ்தூரிக்குங் கசிமலத்திற்கும் ஒப்பிடுவதொக்கும்.

நாளுக்குநாள் இந்துக்களுக்குள் சாதி நாற்றம் பெருகிக்கொண்டு வருகின்றபடியால் பிரிவினைகளும் பெருகி ஒருவருக்கொருவர் உபகாரமற்று சீரழிந்துவருவது பிரத்தியட்சப்பிரமாணமாகக் கண்டும் சாதியாசாரத்தால் சுகமுண்டென்று கூறியது என்னமதியோ விளங்கவில்லை. பெரிய சாதி சிறியசாதி யென்னுங் கேடுபாடுகளால் ஒரு வீதியில் முப்பத்தியெட்டு சாதிகள் குடியிருந்துக்கொண்டு கொள்வினை கொடுவினை பேதம், புசிப்பின் பேதம் மதபேதம் ஆகியக் கொடுஞ்செயல்களை வகித்து ஒற்றுமெய்க் கெட்டு பாழடைந்து வருவதைப் பார்த்தும் பாராததுபோல் சத்தியவாதியென வெளிதோன்றியது விந்தையேயாம்.

தன்னை உயர்ந்த சாதியென உயர்த்திக் கொண்டு ஏனையோரை தாழ்ந்தசாதியென ஏமாற்றி ஏவல் வாங்கியும், பொருள்பரித்தும் தின்னும்படியான பொய்சாதி வேஷம் போய்விடுகிறதே யெனப் புலம்பத் தோன்றினாரேயன்றி இவர் சத்தியவாதியாக வந்தவரன்று.

யாதார்த்தத்தில் சத்தியவாதியாக வெளி தோன்றுவாராயின் பரோடா ராசனது மொழியை பொன்போலேற்று பூரண மதிபோல் விளங்கிநிற்பார். அங்ஙனமின்றி சுயப்பிரயோசனங் கருதி பெரிய சாதி வேஷம்பூண்டவராதலின் பரோடாவரசன் விவேகமிகுத்த பெருங் கருத்து விளங்காது விழிக்கின்றனர்.

- 4:34; பிப்ரவரி 1, 1911 -