உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/193-383

விக்கிமூலம் இலிருந்து

189. பிரிட்டிஷ் ஆட்சியின் சட்டதிட்டங்கள்

தன்னவர் அன்னிய ரென்னும் பட்ச பாதமற்ற பிரிட்டிஷ் ஆட்சியில் இந்து ஒருவன் திருடினாலும் கட்டிவைத்தடிக்க வேண்டியதே. கிறீஸ்தவன் ஒருவன் திருடினாலும் கட்டி வைத்தாடிக்கவேண்டியதே. இந்து ஒருவன் குடித்து வெறித்து குதூகலன் செய்வானாயின் காராக்கிரகஞ் சேர்க்க வேண்டியதே. கிறீஸ்தவனொருவன் குடித்து வெறித்து குதூகலன் செய்வானாயின் காராக்கிரகஞ் சேர்க்கவேண்டியதே. இந்துக்களென்போரில் பெரியசாதியென்னும் பெயர்வைத்திருப்பினும் (பினல்கோடுக்கு) மீறுவானாயின் அவன் தெண்டிக்கப்படவேண்டியதே. கிறீஸ்தவன் ஒருவன் தன்னை ராஜாங்க மதத்தைச் சார்ந்தவனென்று கூறியபோதினும் அவனும் பினல்கோடுக்கு மீறுவானாயின் அவனையும் தெண்டிக்கவேண்டியதே யென தங்களது நீதியையும், நெறியையும் பொதுவாக வரைந்துள்ளதன்றி அநுபவத்திலும் பேதமின்றி நடத்திவருகின்றார்கள்.

இந்துக்களென்போரில் பெரியசாதியாச்சுதே யெனக் குற்றவாளியைப் பினல்கோடு தெண்டிக்காமல் விடாது. கிறீஸ்தவர்களென்போர் இராஜாங்க மதத்தைச் சார்ந்தவர்களாச்சுதே யெனப் பினல் கோடு தெண்டிக்காமல் விடாது. பிரிட்டிஷ் ஆட்சியில் பெரியசாதியென்னும் பட்சமும் பாராது, கிறிஸ்தவனாச்சுதே யென்னும் கிருபையும் தாராது. இருவரையும் ஒருவராக பாவித்து இந்துக்களுக்கு நேரிடும் சுகதுக்கங்களை தங்கள் சுகதுக்கங்களாக பாவித்தும், கிறிஸ்தவர்களுக்கு நேரிடும் சுகதுக்கங்களை தங்கள் சுகதுக்கங்களாகப் பாவித்தும் பாதுகார்த்தும் ரட்சிப்பார்கள்.

இந்துக்களென்போர் தங்களது மதச்சார்பிலுள்ளவர்களை சேர்த்துக் கொண்டு யேனைய மதத்தோரை சீவகாருண்யமின்றி கழுவிலும், கற்காணங்களிலும் வதைத்துக் கொன்றுவிடுவார்கள். சிலக் கிறீஸ்தவர்கள் தங்கள் கட்டளைகளுக்குட்பட்டவர்களை யேற்றுக்கொண்டு தங்கள் கட்டளை நீதியாயினும், அநீதியாயினும், தெரிந்து சொல்லினும், தெரியாமற் சொல்லினும் அவற்றை எதிரிட்டுக் கேட்போர்களை நெருப்பிலிட்டுக் கொளுத்தியும், தேசத்தில் இரத்த வெள்ளமோட காருண்யமின்றிக் கொன்றும்விடுவார்கள்.

இத்தகைய அநீதியும், அக்கிரமமுமாகியச் செயலை பிரிட்டிஷ் அரசாட்சியார் மறந்துஞ் செய்யமாட்டார்கள். ஆதலின் அசத்தியமும், அசப்பியமும், துன்மார்க்கமுமிகுத்தத் துணையை நாம் நாடாது வித்தையும், புத்தியும், ஈகையும், சன்மார்க்கமும் நிறைந்த பிரிட்டிஷ் ஆட்சியில் நிலைத்து அவர்களது அரசே யென்றும் நிலைக்கக் கருதி அவர்களது ராஜவிசுவாசத்தில் அமர்ந்து வாழ்வோமாயின் அவர்களைப் போல் மதபேதம், சாதிபேதமென்பதற்று நாமும் சுகசீவிகளாக வாழலாம்.

- 4:35; பிப்ரவரி 8, 1911 -