உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/215-383

விக்கிமூலம் இலிருந்து

211. டிப்பிரஸ்டு களாசென்பதென்னை?

அடா, தாழ்ந்த வகுப்போர்களே, உங்களை உயர்த்தப் போகின்றோம் அவ்வகையாயின் உங்களை எங்களுடன் சேர்த்துக் கொள்ளுவதா, இல்லை, இல்லை, தூரனின்று கொண்டு உயர்த்தப் போகின்றோம். அதாவது கோமணங்கட்டிக் கொண்டு விளையாடித் திரிவோன், வேட்டி கட்டிக் கொண்டால் உயர்த்தப்பட்டா னென்பதேயாம். டிப்பிரஸ்கிளாசை சீர்திருத்தப்போகின்றோமென்போர் அன்னியர் பொருளுதவி கொண்டு செய்வோமென்னில் அவர்கள் படுங்கஷ்டத்திற்குத்தக்க தொகை எடுத்துக் கொள்ளாமற் போவரோ. வேலைகளை நடத்துவோருக்கும் வேலைகளைச் செய்வோருக்கும் பொருளுதவி வேண்டுமன்றோ, ஆதலின் மதக்கடை பரப்பி சீவிப்போருக்கும், டிப்பிரஸ்கிளாசை சீர்திருத்தப்போகின்றோமென்போருக்கும் பேதமுண்டோ, இல்லை. தோன்றிய காரணமோவென்னில் நாம் காலமெல்லாம் தாழ்த்தி வைத்த சாதியார் தங்களுக்குத் தாங்களே முன்னுக்கு வர ஆரம்பித்துக் கொண்டார்கள். ஆதலால் அவர்களை நாங்களே முன்னுக்கு கொண்டுவரப்போகின்றோம் என்னும் படாடம்பங்காட்டி தாழ்ந்தவர்களை உயர்த்தப் போகின்றோம் என்னும் மொழியை காலமெல்லாம் கூறி இப்போது தாழ்ந்தவர்கள் முப்போதும் தாழ்ந்தவர் களென்று நசித்து தலையெடுக்காமல் பாழ்படுத்துவதற்கேயாம்.

யதார்த்தத்தில் மனிதர்களை மனிதர்களாக பாவித்து ஏழைகளை சீர்திருத்தப் போகின்றோமென்னும் எண்ணமுடையார் இத்தகைய இழிமொழியை என்றும் கருதவுமாட்டார்கள், எடுத்துக்கூறவும் துணியார்கள். தந்த்ரோபமாகத் தாழ்த்தி தலையெடுக்கவிடாமல் செய்ய வேண்டுமென்னும் கெடு எண்ணமுள்ளோரே இத்தகைய இழிகுறியிடு பெயரிட்டு ஈடேற்றப் போகின்றோம் என்பார்கள்.

ஓர் சிறந்தவிவேகியும் சிறந்தகுலத்தோனுமாயோனை பத்து பெயர்கூடிக் கொண்டு இவன் தாழ்ந்த குலத்தான் நீசன், மிலேச்சனெனத் தாழ்த்திக் கொண்டே வருவார்களாயின் அவன் மனங்குன்றி நாணமடைந்து சீர்கெடுவானன்றி முன்னுக்கு வாரான்.

ஓர் பிச்சையேற்றுண்ணும் அவிவேகியும் மிலேச்சக் குடும்பத்தோனுமாயோனை பத்து பெயர்கூடிக் கொண்டு இவன் மிக்க சிறந்தோன், உயர்குலத்திற் பிறந்தோன், தனதான்யம் நிறைந்தோன் என உயர்த்திக் கொண்டே வருவார்களாயின் நாளுக்குநாள் சிறந்து முன்னேறுவானன்றி தாழ்வடையானென்பது அனுபவக் காட்சியாதலின் நெடுங்காலம் சத்துருக்களாயிருந்து கெடுத்தவர்கள் தற்காலம் மித்துருக்களென தோன்றி சீர்திருத்தப் போகின்றோமென்பது சூன்ய மொழியாதலின் பூர்வக் குடிகள் ஆய்ந்தோய்ந்து அண்டுவார்களென நம்புகிறோம்.

- 4:51; மே 24. 1911 -