உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/216-383

விக்கிமூலம் இலிருந்து

212. கவர்ன்மென்டார் தான் கலாசாலைகளை வைத்தாதரிக்க வேண்டும் குடிகள் அவற்றை வைத்து ஆதரிக்கலாகாதோ

கவர்ன்மென்டார் தாங்களடைந்து வரும் பயனில் குடிகளுக்கு என்று எவ்வளவோ உதவியும் ஆதாரங்களும் செய்து வருகின்றார்கள். அவ்வகை செய்துவரும் அனுபவமானது வீடுகளின் சிறப்பையும், வீதிகளின் சிறப்பையும், ஆடையாபரண சிறப்பையும், சுகப்புசிப்பின் சிறப்பையும், கல்வியினது சிறப்பையும், கைத்தொழிலினது சிறப்பையும் கொடுத்து சகல சாதியோரையும் சமரச சுகத்திற் கொண்டுவரும் வழியில் விடுத்திருக்கின்றது. குடிகளுக்கென்று அத்தகையப் பெருஞ் செலவை கவர்ன்மென்டார் செய்து வராவிடின் இத்தேசசிறப்பையும் மனுக்கள் சிறப்பையும் காண்பது அரிது, அரிதேயாம்.

அவர்களது குணாகுணங்களையும், உபகார விருத்திகளையும் சீர்திருத்த வழிகளையும் நமது தேசத்தோர் 300 வருஷங்களாகப் பார்த்து வந்தும், கோழியைக் கண்ணாடி மேசையின் மீது விடுத்தும் தன் காலால் குப்பைத்தீக்கும் குணம் மாறாதது போல பி.ஏ. எம்.ஏ., முதலிய கௌரதா பட்டம் பெற்றும், எங்கள் சாதியோர் எங்கள் மட்டிலும் ஓர் கூட்டம் கூடிக் கொள்ளல்வேண்டும், உங்கள் சாதியார் உங்கள் மட்டிலும் ஓர் கூட்டம் கூடிக் கொள்ளல் வேண்டும். எங்கள் சமையத்தார் எங்கள் சாமிகளுக்கு கோவில்கள் கட்டிவிடவேண்டும், உங்கள் சமையத்தோர் உங்கள் சாமிகளுக்கு கோவில்கள் கட்டிவிட வேண்டும் என்னும் ஒற்றுமெக் கேட்டிற்கும் விரோத சிந்தைக்கும் வேரூன்றி வைக்கின்றார்களேயன்றி, தேச சீர்திருத்தத்தையும் மக்கள் சீர்திருத்தத்தையும் சிந்திப்பதே கிடையாது. கவர்ன்மெண்டார் செய்து வரும் செயல்களைக் கண்டேனும் செய்வது கிடையாது. கண்டு செய்வது யாதெனில் கவர்ன்மென்டை தங்களிடம் ஒப்படைத்துவிவேண்டும் என்பதும், படித்து பட்டம் பெற்றவர்களுக்குத்தான் பெரிய உத்தியோகங்களைக் கொடுக்கவேண்டும் என்பதுமாகிய இவைகள் தான் இத்தேசத்தோர் கண்டுள்ள சீர்திருத்தமும் முயற்சியுமேயன்றி தங்களுக்குத் தாங்களே முயன்று மனிதர்களை மனிதர்களாக பாவித்து தாங்கள் வீணில்சேர்த்து புதைத்து வைத்துள்ள தனங்களை இத்தேசத்து ஏழைமக்களின் கல்வி விருத்திக்கும், கைத்தொழில் விருத்திக்கும் செலவிட்டு சீர்திருத்த மாட்டார்கள். தங்கள் சாதியின் சிறப்பைப் பேசிக் கொண்டு திண்ணை மீது சார்ந்திருப்பதும், தங்கள் சமயச் சிறப்பைப் பேசிக் கொண்டு தெரு உலாவி வருவதுமே பெருஞ் சீர்திருத்த மென்றெண்ணி சாதிச் சண்டையிலும் சமயச் சண்டையிலுமே காலங்கழித்து திரிவார்கள்.

காரணமோவென்னில், இத்தேசத்துள் வித்தையிலும் புத்தியிலும் ஈகையிலும் சன்மார்க்கத்திலும் நிறைந்திருந்த பௌத்தர்களை பலவகையாலும் தாழ்த்தி சீர்குலைத்து விட்டு பெரியசாதி, சின்னசாதி என்னும் பொய்க் கட்டுப்பாட்டுக்களை ஏற்படுத்திக் கொண்டும்; பெரியசாமி, சின்னச்சாமியென்னும் மதபேத பொய்க் கதைகளை ஏற்படுத்திக் கொண்டும் அவைகளின் ஏதுவால் பேதை மக்களை ஏய்த்துப் பொருள் சம்பாதித்துப் பெண்டு பிள்ளைகளைக் காப்பாற்றி வந்த சோம்பேறிகளாதலின் எத்தகைய சீர்திருத்தங்களையும் நோக்காது தங்கள் தங்கள் தந்தரத்திலும் சோம்பலிலும் இருந்து கொண்டு யாரேனும் தயாள புருஷர் இலவசத்திற் பள்ளிக்கூடம் வைத்தால் கற்றுச் கொள்ளவும். இலவசத்தில் கிராமத்தைவிட்டுவிட்டால் அக்கிராமத்தாருக்கு மரத்தாலி கட்டிவிட்டு சகலத்தையும் தாங்களனுபவித்துக் கொள்ளும்படியான முயற்சியில் துடைதட்டி நிற்பார்கள். தயாள குணத்தால் தங்கள் பொருட்களைச் செலவிட்டு தேசத்தையும் தேச மக்களையும் சீர்திருத்த முயலவே மாட்டார்கள். கவர்ன்மெண்டாரேனும், ஏனைய தயாள புருஷர்களேனும் ஓர் சீர்திருத்த சுகாதார வழியை ஏற்படுத்துவார்களாயின் அதனிற் சொந்தம் பாராட்டி, சுகமனுபவித்து கொள்ளுவார்கள். அங்ஙனம் மயிலைக் கண்டு வான் கோழி நடிப்பது போல பிரிட்டிஷார் வியாபாரச் சங்கங்களையும், கைத்தொழிற் சங்கங்களையும் கண்டு ஓர்க் கம்பெனியை ஏற்படுத்த முயலினும் அவன் அன்னசாதி அவனை நம்பப்படாது, இவன் இன்னசாதி இவனை நம்பப்படாதென்னும் ஒற்றுமெய்க் கேட்டால் பாழ்படுத்திவிடுவார்கள். தங்கள் சொத்தை அனுபவிக்க பெண்டு பிள்ளைகளும் பந்துக்களும் இல்லாவிடினும் மேலும் மேலும் பணத்தைச் சேர்த்து பெட்டியிலிட்டு பூட்டி அதன்மீது படுத்திருப்பார்கள். இத்தகைய கனவான்களின் பெருமுயற்சிகள் யாதெனில் கவர்ன்மென்டாரே கலாசாலைகள் வைக்க வேண்டு மென்று கேட்டு தற்சுகமடைய ஆரம்பிப்பார்களன்றி தங்களுக்குள் முயன்று தங்கள் பணங்களை செலவிட்டு தங்கள் தேசப்யிற்சியை முன்னிட்டு கலாசாலைகளின் விருத்தியையேனும் கைத் தொழில்சாலைகளின் விருத்தியை யேனும் செய்யவே மாட்டார்கள். இத்தகைய சீர்கேடுகளுக்கெல்லாம் காரணம் சாதிபேத மதபேதமென்னும் பொய்க் கட்டுப்பாடுகளே யாதலின் சீர்த்திருத்தக்காரரென வெளிவந்து டிப்ரஸ் கிளாசை சீர்திருத்தப் போகின்றோமென்பவர்கள் தங்களுக்குள்ள சாதிகர்வத்தையும், மதகர்வத்தையும் வித்தியாகர்வத்தையும் தன கர்வத்தையும் போக்கி சகோதர ஐக்கியத்தால் ஒற்றுமெய் பெறும் வழியில் நடத்தல் வேண்டும். அத்தகைய நடத்தலே சகல சீர்திருத்தங்களுக்கும் பீடமாகும். நமக்கு நாமே முயன்று முன்னேறுவோமாயின் கவர்ன்மென்டார் முயன்று பின்னேற்றிவைப்பார்கள். நம்முடைய முயற்சிகளும் செய் தொழிலும் யாதுமின்றி வாதிடுவது வீணேயாம்.

- 4:51: மே 31, 1911 -