உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/217-383

விக்கிமூலம் இலிருந்து

213. வடஇந்திய பஞ்சாயத்து நியமனம்போல் தென்னிந்திய பஞ்சாயத்து நியமனம் சுகம்தருமோ?

ஒருக்காலும் தராவாம், காரணமோவென்னில் வடஇந்தியாவில் சாதிபேதமென்னும் கொடூரச் செயல்கள் அதிகம் கிடையாது. அதனினும் அங்குள்ள சிலர் முன்கோபிகளாக இருப்பினும் நியாயமும் கருணையும் அவர்களிடமுண்டு. அதனால் தங்களுக்குக் கொடுக்கும் பஞ்சாயத்தின் அதிகாரத்தை ஏழைக்குடியானவர்கள் மீதும் ஏழைக்கூலியாட்கள் மீதும் கருணைவைத்து பஞ்சாயத்தார் நடத்தவேண்டிய காரியங்களை நீதியின் வழியிலும் நெறியின் நிலையிலும் நின்று நடத்தி இராஜாங்கத்தோருக்குத் திருப்தியாக நடந்து கொள்வதுடன் குடிகளுக்கும் யாதொரு அன்னியாயமுமின்றி பஞ்சாயத்தின் தீர்மானங்களை முடிவு செய்து வருவார்கள். அதனால் குடிகளுக்குள்ள குறைகள் அப்போதைக்கப்போது நீங்கி ஏழை மக்களுக்கு அதிகச் செலவும் நேரிடாமல் சுகவாழ்க்கை பெறுவார்கள்.

அத்தகைய பஞ்சாயத்தை இத்தென்னிந்தியாவில் ஏற்படுத்துவதாயின் மூன்று பேர் ஓர் சாதியும் இரண்டுபேர் ஓர் சாதியுமாயிருப்பர், அல்லது நாலுபேர் ஒரு சாதியும் ஒருவர் ஒரு சாதியுமாயிருக்க நேரிடும். அதனால் சாதியாருக்கு சாதியார் ஒன்று கூடிக் கொண்டு பெருந் தொகையார் சம்மதப்படியே தங்கள் நியாயங்களை முடிவு செய்து ஏழைகளை அல்லோகல்லலடையச் செய்து மேலும் மேலும் செலவுகளை உண்டு செய்து விடுவார்கள். பட்டணவாசிகளும் தக்க பொருள் உள்ளவர்களுமானோர்களுக்கு ஒரு ரூபாய் கை நட்பு கிடைக்குமாயின் பொய்யைச் சொல்லி இரண்டு குடிகளைக் கெடுத்துப்பாழாக்கும் வித்தை சகஜமாயிருக்கின்றது.

நாகரிகமும் பணப்பெருக்கமுமில்லா நாட்டுப்புறங்களில் பெரியசாதியென்னும் பெயரை வைத்துக் கொண்டுள்ளவர்களிடத்தும் பத்து குடிகளைப் பாழ்படுத்தி தாங்கள் ஒருகுடிபிழைத்தால் போதும் என்னும் சீவகாருண்யமில்லாரிடத்தும் பஞ்சாயத்தை ஒப்படைப்பதாயின் நாட்டுப்புறங்களில் உள்ள ஏழைக் குடிகள் தற்காலம் படும் கஷ்டங்களினும் முப்பங்கு கஷ்டங்கள் அதிகரித்து முழுக் கேட்டிற்குள்ளாகிவிடுவார்கள்.

ஏழைக்குடிகளோ பஞ்சாயத்தார் செய்யும் அக்கிரமச் செயல்கள் எதையேனும் வெளிக்கு கொண்டு வந்து இராஜாங்கத்தோருக்கு விளக்கி விடுவார்களாயின் அக்குடிகள் அன்றே பாழடைய வேண்டியதேயாம். அவ்வகை விளக்காது அவர்களது துன்பத்தில் அழுந்திக் கொண்டே இருப்பதாயின் நாளுக்கு நாள் அவர்கள் நசிவதுடன் அந்தந்த கிராமங்களும் பாழடைவதுடன் விவசாயங்களும் விருத்தி கெட்டு பூமிகளும் பாழடைந்து போமென்பது திண்ணம்.

ஆதலின் தற்காலமுள்ள முனிஷிப் கோர்ட்டுகளும், தாசில்தார் கோர்ட்டுகளும் மாஜிஸ்டிரேட்டின் அதிகாரத்தை வேறாகப் பிரித்தது முதல் யாதாமொரு பயமுமின்றி குடிகள் யாவரும் சுகவாழ்க்கையில் இருக்கின்றார்கள். அதே நடையில் கிராமதிகாரங்களை நடாத்திவருவதாயின் கிராமக்குடிகள் யாவரும் களங்கமற்ற சுகவாழ்க்கை பெறுவதுடன் உத்தியோகஸ்தர்களும் பயந்து தங்கள் காரியாதிகளை செவ்வனே நடாத்தி இராஜ விசுவாசத்தில் நிலைபெற்று குடிகளுடன் ஆனந்த வாழ்க்கையிலிருப்பார்கள்.

அங்ஙனமிராது நடந்துவரும் கிராமதிகார செயல்களை மாற்றி பஞ்சாயத்தார் கையில் விடுவதாயின் அதையே ஓர் இராஜவதிகாரம் என்றெண்ணி மேலும் மேலும் இராஜவதிகாரத்தை விரும்பி குடிகளுக்கும் தற்கால உத்தியோகஸ்தர்களுக்கும் உள்ள இராஜவிசுவாசங்களை கலைத்து குடிகளைப் பாழ்படுத்தி தேசத்தையும் சீர்கெடச் செய்துவிடுவார்கள். இவைகளை கருணை தங்கிய ராஜாங்கத்தார் கண்ணோக்கம் வைத்து சாதிபேதம் நிறைந்துள்ளவிடங்களில் பஞ்சாயத்தின் நியமனம் கொடாது உள்ள நிலையில் விடுவார்களென்று நம்புகிறோம்.

- 4:52; மே 24, 1911 -