அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/218-383
214. சுதேசியும் பரதேசியும் வினாவிடை
ப. ஐயா கதேசியாரே சுகந்தானோ.
சு. ஆ! ஆ! என்ன சுகங்காணும் சகல சுகங்களையும் அன்னியதேசத்தார் அநுபவித்துக்கொண்டு போகின்றார்கள் நமக்கு சுகமேது.
ப. அன்னியதேசத்தார் தங்கள் தேகத்தை வருத்தியும், கஷ்டத்தை அநுபவித்தும், அறிவை விருத்திசெய்தும், பொருளை சம்பாதித்து தாங்கள் சுகமனுபவிப்பதுடன் தங்களை அடுத்தவர்களையும் நல்ல சுகத்தில் விட்டிருக்கின்றார்கள். நீங்கள் கஷ்டமின்றி சுகங் கேட்டால் வருமோ.
சு. நாங்கள் மிக்க கஷ்டப்பட்டு படிக்கவில்லையே.
ப. கஷ்டப்பட்டு படிப்பதிலும் இருவகைப் படிப்புண்டு. அதாவது, கண்டுபடிக்கும் படிப்பொன்று, தெண்ட படிப்பொன்று. இவற்றுள் கலை நூற்களைக் கற்று கைத்தொழிலில் விருத்திப்பெற்று உலகோபகாரமாக விளங்கும் படிப்பு கண்டுபடிக்கும் படிப்பாம். ஒருவர் கொடுக்கும் பாடங்களை உருபோட்டு ஒப்படைத்துவிட்டு சுயப்பிரயோசனத்தை நாடி தங்கள் பெண்டு பிள்ளைகளைக் காப்பாற்றிக்கொள்ளுவதற்கும் சக்த்தியற்றலைவது தெண்டபடிப்பென்றும் கூறப்படும். இத்தகைய தெண்டப்படிப்பை நீர் படித்துவிட்டு நாங்கள் கஷ்டப்பட்டுப் படிக்கவில்லையோவென்றால் யாது பயன்,
சு. பரதேசியாரே, பயனில்லாமல்தான் படித்துக்கொண்டோமோ.
ப. அவற்றை சுதேசியாரே சிந்திக்கவேண்டியதுதான். அவை யாதெனில், தாங் கண்டு படிக்குங் கலைநூலையுங் கைத்தொழிலையுங் கற்றிருப்பீராயின் சகல சுகங்களையும் அன்னிய தேசத்தோரனுபவித்துப்போகின்றார்களென்னும் பொறாமெ மொழி கூறமாட்டீர். தெண்டப்படிப்பாதலின் மற்றவர்கள் சுகத்தைக் கண்டு சகியாது வீண்மொழி கூறிவிட்டீர்.
சு. பரதேசியாரே, கடைசியில் எந்தப் படிப்பிலும் சுகத்தைக் காணோமென்றே எமக்கு விளங்குகின்றது.
ப. சுதேசியாரே, சொந்தப்படிப்பே உங்களுக்குள் இராமல் பாழ்படுத்திக்கொண்டவர்களுக்கு எந்தப்படிப்பில்தான் சுகமுண்டாகும். இதுகாரும் பிரிட்டிஷ் ஆளுகை இவ்விடம் வந்து தோன்றாமலிருக்குமாயின் பூர்வக் கல்வியும் பாழடைந்து, கைத்தொழிலும் பாழடைந்து, மக்களும் பாழடைந்து, மாடமாளிகைகளும் பாழடைந்து, தேசமும் பாழடைந்து போயிருக்கும் என்பது தற்கால சுதேசிகளின் செயலால் சொல்லாமல் விளங்குமே.
சு. ஏதுகாணும் பரதேசியாரே தற்கால சுதேசிகள்வேறு முற்கால சுதேசிகள்வேறோ.
ப. இந்திரர் தேசத்தில் முற்காலம் இருந்ததோர் சாதிபேதம் மதபேதமற்ற பெளத்த சுதேசிகள். தற்காலமுள்ளவர்களோ, சாதிபேதமும் வேண்டும் மதபேதமும் வேண்டுமென்னும் பொருளற்ற இந்து சுதேசிகளேயாவர்.
சு. பரதேசியாரே பொருளற்ற இந்து சுதேசியார் என்றாலென்னை. அவற்றை விளக்க மாட்டீரோ.
ப. ஆ! ஆ! உள்ளபடி விளக்குவாம். அதாவது புத்தரென்னும் ஒருவர் தோன்றியிருந்தார் அவரது சீர்திருத்தத்தைப்பின்பற்றியவர்கள் பௌத்தர்கள் என்றழைக்கப் பெற்றார்கள். கிறீஸ்தவரென்னும் ஒருவர் தோன்றியிருந்தார் அவரது சீர்திருத்தத்தைப் பின்பற்றியவர்கள் கிறிஸ்தவர்க ளென் றழைக்கப்பெற்றார்கள். மகம்மது வென்னும் ஒருவர் தோன்றியிருந்தார் அவரது சீர் திருத்தத்தைப் பின்பற்றியவர்கள் மகம்மதியரென்று அழைக்கப்பெற்றார்கள். ஆனால் இந்து வென்னும் ஒருவருமில்லை, பெயருமில்லை, செயலுமில்லை, சீர்திருத்தங்களும் இல்லாததால் யாதொரு பொருளுமற்ற இந்து சுதேசியரென்று கூறினோம்.
சு. பரதேசியாரே, பொருளற்ற இந்து சுதேசிகளால் இத்தேசத்தோருக்குக் கல்விவிருத்தி இல்லையென்று கூறுவீரோ.
ப. சுதேசியாரே, பொருளற்ற இந்துக்களுக்கு பெயரற்ற கலாசாலைகள்தான் இருந்திருக்கவேண்டுமன்றி பௌத்தர்களாலழைக்கப் பெற்றப் பள்ளிக் கூடங்கள் அறப்பள்ளிகளென்னும் பெயரும் கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தோரால் வகுத்துள்ள இஸ்கூல்கள், காலேஜுகள் என்னும் பெயர்களைப்போல நிலையானப் பெயர்கள் ஒன்றுங் கிடையாததினால் இந்துக்களென்போர் கல்விசாலைகள் வைத்து சகலருக்கும் கல்விவிருத்தி செய்து வைத்தார்களென்று கனவிலும் நம்புவதற்கிடமில்லை. கல்வியைக் கற்கவிடாது கெடுத்ததற்கு சாட்சிகள் மட்டும் அனந்தமுண்டு.
சு. பரதேசியாரே, ஆனால் இப்போது வகுத்துள்ளக் கலாசாலைகள் யாவும் பிரிட்டிஷ் ஆட்சியின் நிலையோ.
- 4:42; மார்ச் 29, 1911 -
ப. சுதேசியாரே இஸ்கூலென்றும், காலேஜென்றும் வழங்கும்படியானக் கூடங்களில் வாசிக்கின்றீர்களன்றி வேறில்லாததால் இந்தியக் குடிகள் கற்றுத்தெளிவது பிரிட்டிஷ் ஆட்சியாலமைந்துள்ளக் கலாசாலைகளென்றே கூறல்வேண்டும்.
சு. பரதேசியாரே, அங்ஙனமாயின் தற்கால சுதேசிகளால் இந்தியக் குடிகளுக்கு யாதொரு சுகமுமில்லையென்று கூறுவீரோ.
ப. சுதேசியாரே, அவற்றைத் தங்களனுபவத்தால் தாங்களே தெரிந்துக் கொள்ளலாம். அதாவது இதுகாரும் இத்தேசத்தை பிரிட்டிஷ் ஆட்சியார் வந்து கைப்பற்றாவிடின் உங்களுக்குள் நீங்களே ஏற்படுத்திக்கொண்டுள்ள சாதிப்பிரிவினைகளினாலும், மதப் பிரிவினைகளினாலும் மநுக்களின் ஒற்றுமெய்க் கெட்டு சீரழிந்து சிந்தைநைந்து பாழடைவதுடன் தேச சீர்திருத்த ஆட்சியின்றி வீதிகளின் வசதி, நீர்வசதி, நிலவசதியற்று முற்றுங் கேடடைந்திருக்குமென்பதைத் தாங்களே தெரிந்துக்கொள்ளலாமே.
சு. பரதேசியாரே, வீதிகளின் வசதியென்பதென்னை.
ப. சுதேசியாரே, இப்போது நாம் வாசஞ்செய்யும் வீதிகளை ஒருநாள் இரண்டு நாள் சுத்திகரிக்காமல் விட்டுவிடுவோமாயின் வீதிகளில் குப்பை அடர்ந்து பாழ்பட்டிருப்பது பிரத்தியட்சமாகும். இவ்வகை ஒரு கிராமத்தை விட்டு மறு கிராமங்களுக்குப் போகும் வழியில்லாமலேயிருக்குமாயின் வண்டிகளுக்கும், மாடுகளுக்கும், மக்களுக்கும் என்ன சுகமிருக்கும் என்பதைத் தாங்களே தெரிந்துக்கொள்ளவேண்டியது தான்.
சு. பரதேசியாரே, பிரிட்டிஷ் ஆட்சியார் இவ்விடம் வருவதற்கு முன்பு வீதி வசதி கிடையாவோ.
ப. சுதேசியாரே, அதிக தூரதேசம் போகவேண்டியதில்லை. சென்னைக்கும் செங்கற்பட்டிற்கும் போக்குவருத்துப் பாதைகளில்லாமல் தானியங்கொண்டுவரும் வண்டிகளும் கொண்டுபோகும் வண்டிகளும் சரியான பாதைகளில்லாது வண்டிகளின் இருசுகள் முறிந்து விழுந்து கிடப்பதும் மாடுகள் கால் முறிந்தும், கழுத்து முறிந்துங்கிடப்பதும் சரியற்ற பாதையில் கஷ்டத்துடன் கொண்டுபோகவும் கொண்டுவரவுமுள்ள சரக்குகளை கள்ளர்கள் அபகரிக்கவுமாகியக் கஷ்டங்களை சொல்லவும் போமோ. இத்தகையக் கஷ்டநஷ்டங்களைக் கண்டே வீதிகளின் வசதி இல்லையென்றே கூறுவாம்.
சு. பரதேசியாரே, செங்கற்பட்டிற்கும் சென்னைக்குந்தான் பிரிட்டிஷ் ஆட்சியார் வீதி சுகமளித்து கள்ளர்பயங்களை அகற்றியதுடன் வண்டிகளுக்கும், மாடுகளுக்கும், வியாபாரிகளுக்கும் சுகமளித்த போதினும் மற்றய தேசத்தோர்களுக்கும் வீதிசுகமளித்தவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியார்கள் தானோ.
ப. சுதேசியாரே. அசோகச் சக்கிரவர்த்தியார் ஆளுகை ஒழிந்து பௌத்தர்களின் வியாரங்களழிந்து பொய்க்குருக்களாம் வேஷப் பிராமணர்கள் வந்து தோன்றிய பின்னர் உள்ள வீதிகளும் பாழடைந்து இன்னதேசத்திற்கு இன்னவீதியே பாதையென்பதற்றுப் போயதை அக்காலங்களில் உண்டாய பஞ்சங்களே போதுஞ் சான்றாம்.
சு. பரதேசியாரே, பஞ்சங்களே சான்றென்று கூறியவை விளங்கவில்லையே.
ப. சுதேசியாரே, பெளத்த, சக்கிரவர்த்திகள் காலங்களுக்குப் பின்பு வீதி சுத்திகரிப்போரும், மக்களைத் தேடி நீதிபோதங் கூறுவோருமில்லாமற் போய்விட்டபடியால் வீதிகளின் போக்குகளும் வசதிகளுமற்று சென்னையில் பஞ்சமுண்டாமாயின் செங்கற்பட்டிலுள்ளவர்களுக்குத் தெரியாமலும் செங்கற்பட்டிற் பஞ்சமுண்டாமாயின் சித்தூரிலுள்ளவர்களுக்குத் தெரியாமலும், சித்தூரிற் பஞ்சமுண்டாமாயின் வேலாரிலுள்ளவர்களுக்குத் தெரியாமலும் அங்கங்குள்ளவர்கள் வேறுதேசஞ் சென்றுப் பிழைப்பதற்கும், வேறு தேசங்களினின்று தானியங்களைத் தருவித்து சீவர்களைக் காப்பதற்கும் வழியற்று அந்தந்த தேசமக்களும் அவரவர்களின் ஆடுமாடுகளும் அங்கங்கு மடிந்து தேசங்கள் பாழடைந்து வந்தது அநுபவமாகும். அதன்பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியார் வந்து தோன்றி இந்தியாவிலுள்ள தேசங்கள் யாவற்றிற்கும் சிறுபாதைகளும், பெரும் பாதைகளுமுண்டு செய்து கள்ளர் பயங்களை அகற்றி வண்டிகளுக்கும் மாடுகளுக்கும் சுகமளித்துவருவதுடன் நீராவி மரக்கலப் பாதைகளையும், இருப்புப் பாதைகளையும் தேசங்களெங்கும் பின்னலிட் டோடச்செய்து அந்தந்த தேசங்களிலுண்டாகும் பஞ்சங்களை அப்போதைக்கப்போதே நிவர்த்தித்து அவ்விடமுள்ள மக்களுக்கும் ஆடுமாடுகளுக்கும் மற்றும் சீவராசிகளுக்கும் உயிர்பிச்சையளித்துவருவது பிரிட்டிஷ் ஆட்சியால் உண்டாய பாதைகளின் சுகமன்றோ.
- 4:43; ஏப்ரல் 5, 1911 -
சு. பரதேசியாரே, தாம் கூறியபடி பிரிட்டிஷ் ஆட்சியார் இவ்விடம் வந்து தோன்றாவிடில் தேசங்களுக்குப் பாதைகளின்றி பலவகை இடுக்கங்களுக்கு ஏதுக்களுண்டாமோ.
ப. சுதேசியாரே, பிரிட்டிஷார் வந்து தோன்றி பலதேச பாதைகளை சீர்திருத்தியும் நகரங்களுக்குப் புறம்பாயுள்ள நாடுகளில் ஒரு கிராமத்தைவிட்டு மறு கிராமத்திற்குப் போவதற்கு வழி செய்துக் கொள்ள வகையற்று மாடு சேதமடைவதும் வண்டிகள் சேதமடைவதும் விவசாயிகள் கஷ்டமடைவதுமாகியச் செயல்களை நாளதுரையிற் காணலாமே.
சு. பரதேசியாரே, பிரிட்டிஷ் ஆட்சியார் செய்துவரும் பாதைகளின் வசதிகளைப் பார்த்திருந்தும் அவைபோல் செய்துக்கொள்ளலாகாதோ.
ப. சுதேசியாரே, சுயப் பிரயோசனத்தை நாடுவோருக்குப் பொதுப் பிரயோசனங்களில் மனம் நாடாதன்றோ.
சு. பரதேசியாரே, சுயப் பிரயோசனம் பொதுப்பிரயோசனமென்றா லென்னை.
ப. சுதேசியாரே, தற்காலம் இத்தேசத்தில் நூதனமாக உண்டாக்கிக்கொண்ட சாதி வித்தியாசங்களென்னும் பொய்வேஷங்களினால் ஒருவருக்கொருவரை உயர்த்திக்கொண்டும் ஒருவருக்கொருவரைத் தாழ்த்திக் கொண்டும் விரோதச்சிந்தையையே மென் மேலும் பெருக்கிக்கொண்டுள்ளவர் களாதலின் தங்கள் தங்கள் சுயப்பிரயோசனங்களை மட்டிலும் பார்த்துக் கொண்டு ஏனையசாதியோர் யாதுசுகங்கெட்டு பாழடைந்தாலும் பார்த்துக் கொண்டேயிருப்பது இவர்களது சுவாசகுணமாதலின் பொதுப்பிரயோசனங்களைக் கனவிலுங் கருதமாட்டார்கள்.
சு. பரதேசியாரே, பொதுப் பிரயோசனத்தை நாடாதவர்களென்பீராயின் காங்கிரசென்றும், மகாஜன சபையென்றும் பெருங்கூட்டங்கள் கூடி ஏதேதோ காரியங்களை நடத்திவருகின்றார்களே அவைகள் யாவும் பொதுப் பிரயோசனங்களில் இல்லையோ.
ப. சுதேசியாரே, அதன் செயல்களை அநுபவத்தாலறிந்துக்கொள்ள வேண்டுமேயன்றி கூடுங் கூட்டங்களாலறிந்துக்கொள்ளப்போகாது. காரணமோவென்னில், இந்த நாஷனல் காங்கிரஸ் கமிட்டியோரென்பவர் இத்தனை வருஷகாலமாக நடத்திவருங் கூட்டங்களில் அறுபது லட்சத்திற்கும் மேற்பட்டக் குடிகள் அல்லலடைந்து சாதிபேதமென்னும் பொய்க்கட்டுப் பாட்டினால் அலக்கழிக்கப்பட்டு சீரழிந்துபோகின்றார்களே அவர்களது குறைகளைப்பற்றி ஏதேனும் இராஜாங்கத்தோருக்கு விளக்கி தங்களைப்போல் சுகம்பெறச் செய்திருக்கின்றார்களா இல்லையே. அதனால் தாங்கள் கூறியக்கூட்டங்களும் சுயப்பிரயோசனங்களை நாடியக் கூட்டங்களேயாகும்.
சு. பரதேசியாரே, அந்த அறுபது லட்ச மக்களும் தங்களுக்கத்தாங்களே ஏன் சீர்படலாகாது.
ப. சுதேசியாரே, இந்த கருணைதங்கிய பிரிட்டிஷ் ஆட்சியில் சகல சாதியோர்களைவிட அவர்கள்தான் முன்னுக்குவந்திருப்பார்கள். அவர்கள் மீதே கண்ணோக்கமாயிருந்து அவர்களை எவ்வகையாலும் மேனோக்க விடாமல் தடுத்துவருவதனால் எவ்வகையால் சீர்பெறுவார்கள்.
சு. பரதேசியாரே, அவர் சீரையும் மேலேற்றத்தையும் யார் தடுத்து தடுத்து கெடுத்துவருகின்றவர்கள்.
ப. சுதேசியாரே, அவர்களுக்குள் சாதிபேதமில்லா பெருந்தண்மெயிருக்கின்றபடியால் சாதிபேதமுள்ளோர் அவர்களை சீர்கெடுத்து வருகின்றார்கள்.
- 4:45; ஏப்ரல் 19, 1911 -
சு. பரதேசியாரே, சாதிபேதமுள்ளவர்களை சாதிபேதமில்லாதவர்கள் மேற்கொள்ளலாகாதோ.
ப. சுதேசியாரே, நாட்டு கிராமவாசிகளாயுள்ளவர்கள் நேட்டால், சிங்கப்பூர், மற்றுமுள்ளயிடங்களுக்குச் சென்று கஷ்டப்பட்டு பொருள் சம்பாதித்து இந்திய தேசம் வந்து பூமிகளை வாங்கிக்கொண்டு இருப்பதுடன் நகரவாசிகளாயுள்ளவர்கள் அன்பு நிறைந்த ஆங்கிலேய அருளினால் கல்விகற்றும், தக்கவுத்தியோகங்கள் பெற்றும் முன்னுக்கு வருகின்றார்கள். சாதிபேதமில்லா நாட்டுவாசிகளும், நகரவாசிகளும் இன்னும் சற்று முயற்சியெடுத்து முன்னுக்கு வந்துவிடுவார்களாயின் சாதிபேதமுள்ளோரை மேற்கொள்ளுவதுமட்டுமல்ல நாளெல்லாம் அவர்களுக்குச் செய்துவரும் இடுக்கங்களையும், துன்பங்களையும் மனதில்வைத்துக்கொண்டு இவர்களுக்கே எதிர் சத்துருக்களாக எழுவினும் எழுவர்.
சு. பரதேசியாரே, அவரவர்கள் செய்த தீவினைகளை அவரவர்களே அநுபவிப்பார்களென்னும் முதுமொழிபோல் அஃதெவ்வகையாகினுமாகட்டும் இந்த பிரிட்டிஷ் கவர்ன்மெண்டார் அதிக வரிகளைப் போட்டு வாதிக்கின்றார்களே அது மிக்க கஷ்டமல்லவோ.
ப. ஆ! ஆ! சுதேசியாரே, உங்களது பயனற்றதும், தலைக்கால் தெரியாததுமாய் வரிகளைவிட பிரிட்டிஷ் கவர்ன்மெண்டார் போட்டுள்ள வரிப் பெருக்கமாமோ; இல்லையே! கவர்ன்மெண்டார் வாங்கும் வரிகள் யாவும் தேசச்சீரையும், மக்கள் சுகத்தையுங் கருதி வாங்குவதாகும் சுதேசிகளாகியத் தாங்கள் வாங்கும் வரிகளோ, தேசச்சீரை நாடாமலும், மக்கள் சுகத்தைக் கருதாமலும் தங்கள் தங்கள் சுயநலத்தையும், சுய சுகத்தையுங் கருதுவதாகும்.
சு. பரதேசியாரே, சுயநலத்தைக் கருதும் வரியென்றும், பொதுநலத்தைக் கருதும் வரியென்றும் இருவகை வரிகளுண்டோ.
ப. சுதேசியாரே, அவற்றைத் தங்களனுபவத்திலுங் காட்சியிலும் அறிந்திருந்தும் வினவுவது வீண்வாதன்றோ.
சு. பரதேசியாரே, அது நமக்கு நன்குவிளங்கவில்லையே.
ப. சுதேசியாரே, அமாவாசிக்கு வாங்கும் வரி, யாருக்குப் பிரயோசனம். ஆவணியவிட்ட வரி யாருக்குப் பிரயோசனம். வருஷப்பிறப்பு வரி யாருக்கு பிரயோசனம். நோன்பின் வரி யாருக்குப் பிரயோசனம். பிள்ளைபெற்ற புண்ணியதான வரி யாருக்குப் பிரயோசனம். பிணம்விழுந்த வீட்டுப் புண்ணியதான வரி யாருக்குப் பிரயோசனம். கருமாதி வீட்டிற் கட்டியழும் வரி யாருக்குப் பிரயோசனம். புதுவீட்டிற்குக் குடிபோகும் புண்ணியதானவரி யாருக்குப் பிரயோசனம். உபநயனவரி யாருக்குப் பிரயோசனம். ருதுசாந்திவரி யாருக்குப் பிரயோசனம். கலியாணப் பெரும் வரி யாருக்குப் பிரயோசனம். கைம்பெண்களின் திதிவரி யாருக்குப்பிரயோசனம். கோவில்களின் உற்சவதட்சணை வரி யாருக்குப்பிரயோசனம்.
சு. பரதேசியாரே, தாங்கள் சொல்லிவந்தவைகள் யாவும், குரு தட்சணமேயன்றி வரிகளல்லவே.
ப. சுதேசியாரே, யாதொரு பயனுமற்ற குருக்களுக்கு இத்தியாதி தட்சணங்கள் வெறுமனே செலுத்திவருகின்றவர்கள் தேசத்தையும் தேகத்தையும் ரட்சிக்கும் அதிகாரிகளுக்கு செலுத்தும் வரியை அரசர் தட்சணை என்று ஆனந்திக்கலாகாதோ.
சு. பரதேசியாரே, குருக்களுக்கு ஈயும் தட்சணையால் ஒரு பயனுமில்லையோ
ப. சுதேசியாரே அவ்வாறு பயனுண்டாயின் குருக்களால் உண்டாம் பயன்களை விரலைவிட்டுச் சொல்லும் பார்ப்போம்.
- 4:46, ஏப்ரல் 26, 1911 -
சு. பரதேசியாரே, குருக்களுக் கீயுந் தட்சணைகளின் பலனை மறு ஜெநநத்தில் அநுபவிப்பார்கள்.
ப. சுதேசியாரே, அக்கதையானது இருட்டறையுள் ஒருவனிருந்து என்னைக் கண்சாடைக் காட்டினான் கைசாடை காட்டினானென்னும் இருட் செயலேயன்றி வெளிச்சத்தின் செயலல்லவே.
சு. பரதேசியாரே, இருட்டின் செயலென்றும், வெளிச்சத்தின் செயலென்று மிருவகையுண்டோ.
ப. சுதேசியாரே, தான் யதார்த்தத்தில் காணாததையும் தனக்கே தெரியாததையும் கண்டதைப்போலும், தெரிந்ததைப்போலும் பேசுவது இருட்டின் செயலாகும். தனக்குத் தெரிந்த வரையிலும், தான் கண்டவரையிலும் ஒளியாது பேசுதல் வெளிச்சத்தின் செயலாகும்.
சு. பரதேசியாரே, குருக்களுக்கு அளிக்கும் தட்சணைகள் யாவும் இருட்டின் செயலும், அரசாங்கத்தோருக்களிக்கும் வரிகள் வெளிச்சத்தின் செயலாமோ.
ப. சுதேசியாரே, அரசாங்கத்தோருக்கு அளிக்கும் வரிகள் யாவும் அநுபவத்திற்குங் காட்சிக்கும் பொருந்தி வெளிச்சத்தின் செயலாச்சுதே.
சு. பரதேசியாரே, அதைமட்டிலும் வெளிச்சத்தின் செயலென்று எவ்வாறு கண்டறிவது.
ப. சுதேசியாரே, ரோடு அல்லது பாதைகளின் வரியை எடுத்துப் பேசுவாம். வண்டிபாதை நடை பாதையாகிய பெரும் வீதி, சிறும் வீதிகளை சீர்திருத்தி மட்டஞ்செய்யுஞ் செலவு, அவைகளுக்கு கற்கள் போடவேண்டிசெலவு, அதன்மேல் மண்பரப்ப வேண்டிய செலவு, நீர் துளிக்கவேண்டிய செலவு, கற்களை கெட்டித்து பூமியில் பதிவுசெய்யவேண்டிய இயந்திரத்தின் செலவு, அவற்றை எப்போதும் பார்வையிட்டுவரும் இஞ்சினியர்களின் செலவு, ஒவர்சியர்களின் செலவு, பியூன்களின் செலவு, குப்பைவண்டிகளின் செலவு, மாடுகளின் செலவு, அந்தந்த ஆட்களின் செலவுகளாகிய யாவும் ரோட்டுவரி என்று சொல்லி வாங்கும் பணத்திலிருந்தே செலவு செய்யல்வேண்டும். இத்தகையாக வாங்கும் வரிகளின் மொத்தமும் அதைக்கொண்டே செய்துவரும் செலவின் மொத்தமும் அநுபவத்திற்கும் காட்சிக்கும் பொருந்த விளங்குகின்றபடியால் இராஜாங்கத்தோர் வரி வெளிச்சத்தின் செயலென்றே கண்டறியல்வேண்டும்.
சு. பரதேசியாரே, மற்றுமுண்டாய இராஜாங்கத்தோர்களின் வரிகள் யாவும் வெளிச்சச்செயல்களாமோ.
ப. சுதேசியாரே, இராஜாங்கத்தோருக்கு அளித்துவரும் வரிகள் யாவும் குடிகளின் சுகத்தைக் கருதியே செய்துவரும் செலவுகளாதலின் அதனதன் வரவுசெலவுகளைக் கண்டே அதன் வெளிச்சத்தா லறிந்துக்கொள்ளலாமே.
சு. பரதேசியாரே, வரிவாங்கும் பணங்கள் யாவையும் செலவு செய்துவிடுகின்றார்களென்று எவ்வகையாற் கண்டறிவது.
ப. சுதேசியாரே, பொதுநலம் கருதாது சுயநலங் கருதுவோருக்கும், பொதுப் பிரயோசனங் கருதாது சுயப்பிரயோசனங் கருதுவோருக்கும் இந்த கருணை நிறைந்த பிரிட்டிஷ் ஆட்சியார் செய்துவரும் பொதுநலமும், பொதுப்பிரயோசனமும் விளங்கவேமாட்டாது. எவ்வகையி லென்பீரேல், லோபிக்கு யீகையாளன் குணம் விளங்கமாட்டாது. பாபிக்கு புண்ணிய புருஷன் செயல் விளங்க மாட்டாது. ஆதலின் பத்துக் குடிகளைக் கெடுத்து தங்கள் குடிகள் மட்டிலும் சுகமடைய வேண்டுமென விரும்பும் சுயப்பிரயோசன செயலையுள்ளார்க்கு பொதுப் பிரயோசனங்களின் செயலும் அதன் பயன்களும் விளங்கவேமாட்டாது, காமாலைக் கண்ணனுக்கு சூரியன் மஞ்சள் நிறமாகத் தோற்றுவதுபோல் லோபிக்குப் புண்ணியபுருஷர் செயல் லோபமாகவே விளங்கும்.
- 4:47; மே 3, 1911 -
சு. பரதேசியாரே, வரிவாங்கும் சகல தொகைளையுங் குடிகளுக்கென்றே செலவிடுகின்றார்களோ.
ப. சுதேசியாரே, அதன் விவரங்களைத் தங்கள் ஆயத்துரை வருமானத்தைப்போல் எண்ணிக்கொண்டீர் போலும்.
சு. பரதேசியாரே, ஆயத்துரை என்பதெது. அதன் வருமானங்களெவை, சற்று விவரிக்கவேண்டியது,
ப. சுதேசியாரே, தற்காலம் சுங்கச்சாவடியென்று வைத்திருக்கின்றார்களே அதுபோல் சிலகாலங்களுக்குமுன் ஆயத்துரையென்றும் அங்கு உழ்க்கார்ந்து பணம் வசூல் செய்வோன் தேச ஆயச்செட்டியொன்றும் வழங்கி வசூல் செய்யும் பணங்களை அரசர்களுக்கு அளிப்பதும் தாங்கள் சுகிப்பதுமாகியச் செயலில் இருந்ததுண்டு. அதைக் குடிகளுக்குரிய பொதுநலங்களுக்கு உபயோகிப்பதே கிடையாது. தற்கால பிரிட்டிஷ் ஆட்சியார் வாங்கும் சுங்கத்தைக் கொண்டு முநிசபில் எல்லைக்கு அப்புறப்பட்ட ரோடுகள் போடுவதற்கும், அப்போதைக்கப்போது பழுதுபார்ப்பதற்கும், தங்கும் சத்திரங்களை வழிகளில் கட்டுவதற்கும், அவைகளைப் பழுது பார்ப்பதற்கும் லோகல்பண்டென வகுத்து அனந்த சீர்திருத்தங்களுக்கு உபயோகப்படுத்தி வருகின்றார்கள்.
சு. பரதேசியாரே, பிரிட்டிஷ் ராஜாங்கத்தோர் பெற்றுவரும் வரிகளைக்கொண்டு குடிகளுக்கு என்ன உதவி புரிகின்றார்கள்.
ப. சுதேசியாரே, அவர்கள் வாங்கும் வரிகளை விட ஒவ்வோர் காலங்களில் அதிக செலவு நேரிட்டிருக்கலாமென்பது திண்ணம்.
எவ்வகையிலென்பீரேல், நமது கருணைதங்கிய ராஜாங்கத்தார் குடிகளுக்குண்டாம் வியாதிகளையும் அபாயச்செயல்களையுங் காப்பதற்கு ஓர் வைத்தியசாலைக் கட்டவேண்டுமானால் எவ்வளவோ பணவிரயஞ் செய்கின்றார்கள். குடிகளுக்குக் கள்ளர் பயம், கொடியர் பயம் நேராது காப்பதற்கு போலீசார்களையும் நியமித்துக் குடிகளுக்குத் துன்பம் நேரிடுங்கால் அவற்றை நீக்கி ஆதரிப்பதற்கும் எவ்வளவோ பணவிரயஞ் செய்து வருகின்றார்கள். ஈதன்றி பஞ்சங்கள் நேரிடுமாயின் அதற்கு இவர்கள் வசூலித்துள்ள வரிகளைக் கொண்டு உதவிபுரிவதுடன், தங்கள்தேயக் கனவான்களைக்கொண்டும் உதவி பெற்று பஞ்சத்தில் நசியும் குடிகளை சீர்தூக்கி ஆதரித்து வருகின்றார்கள்.
சு. பரதேசியாரே, தாங்கள் சொல்லிய வண்ணம் நமது ராஜாங்கத்தார் சில பேரானந்தசுகங்களை அளித்துவருகின்றார்களாயினும் பிளேக் வியாதிகளை நீக்கும் உத்தியோகஸ்தர்களையாயினும், துஷ்டர் பயங்களை அடக்கும் போலீசார்களையாயினும், ஏழைக்குடிகளும் ஏழை நாட்டுப்புறத்து வண்டிக்காரர்களுங் காணுவார்களாயின் நம்மெய் காக்கும் உத்தியோகஸ்தர்களாச்சுதே என்னும் ஆனந்தங்கொள்ளாமல் அவர்களைக் கண்டவுடன் மிக்க பயப்படுகின்றார்களே, அதன் காரணமென்னை.
ப. சுதேசியாரே, கருணைதங்கிய ராஜாங்கத்தார் சுதேசிகளைக் கொண்டே சுதேசிகளைக் காக்கும் உத்தியோகங்களைக் கொடுப்பதாயின் தேசாபிமானத்தால் கருணை வைத்து குடிகளை சீர்திருத்திக் காப்பார்களென்னும் எண்ணத்தால் நியமித்திருக்கின்றார்கள். அத்தகையக் கருணை சாதிபேதமுள்ள இத்தேசத்தோருக்கில்லாது குடிகளை பயமுறுத்துவதாயின் அஃது சுதேசிகளின் கருணையற்றச் செயலும் தோஷமுமே யன்றி பிரிட்டிஷ் ஆட்சியார் மீது தினையளவு தோஷமேனும் சொல்லுதற்கிடமிராது.
- 4:49; மே 17, 1911 -
சு. பரதேசியாரே, சுதேசிகளைக் கருணையற்றவர்களென்று கூறலாமோ.
ப. சுதேசியாரே, தங்களிடமிருக்குங் கருணையைத் தங்கள் மனைவி மக்களிடம் மட்டிலுங் காண்பிப்பார்களன்றி, ஏனையோரிடங் காண்பிக்க மாட்டார்கள். அதன் காரணமோவென்னில், சாதிபேத மதபேதமென்னும் பொய்ப் பிரிவினைகளேயாகும். என் சாதி பெரிது, அவன்சாதி சிறிதென்னும் சாதி கர்வமும், என்சாமி பெரிது, அவன்சாமி சிறிதென்னும் மதகர்வமும் ஒருவருக்கொருவர் மேலிட்டு சகோதர ஒற்றுமெயையும் அன்பையும் அகற்றி விரோதச் சிந்தனைகளே விரிந்து வருகின்றபடியால் பொதுவாய கருணையென்பதற்று தங்கள் சுயப்பிரயோசனங்களில் மட்டிலுங் கருணையைக் கையாடி காலங்கழித்து வருகின்றார்கள்.
சு. பரதேசியாரே, பொதுவாய கருணை எவ்வகையால் தோன்றும்.
ப. சுதேசியாரே, நம்மெயும், நமது தேசத்தையும் ஆண்டுவரும் கருணைதங்கிய பிரிட்டிஷாரின் செயலையும் அவர்களது குணாகுணங்களையும் நன்காராய்ந்து அம்மேறை நடப்போமாயின் சகலருக்கும் பிரயோசனமாகும் கருணையின் செயலும் அதன் சுகமும் நன்கு விளங்கும். அங்ஙனமிராது என்சாதி பெரிது, என் சுவாமி பெரிதென்னுங் கொள்கைகள் நிறைந்தவர்களிடத்து பொதுநலங் காண்பதே அரிதாதலின் தற்கால சுதேசிகளுக்குக் கருணையென்னுஞ் செயல் வாய்ப்பது கஷ்டம், கஷ்டமேயாம்.
சு. பரதேசியாரே, பிரிட்டிஷாரைமட்டிலும் கருணை நிறைந்தவர்களென்று எவ்வகையாய் கண்டறியலாம்,
ப. சுதேசியாரே, கருணை நிறைந்த ஆங்கிலேயரில் ஓரந்தஸ்துள்ள உத்தியோகஸ்தராயிருப்பினும், கனதனம் வாய்த்த பிரபுவாயிருப்பினும், கலைநூற் கற்ற வித்துவானாயிருப்பினும் வீதி உலாவி வருங்கால் சாக்கடை வாருங் கூலியாயினும், மலமெடுக்குமூழியனாயினுந் தவறி கீழே விழுந்துவிடுவானாயின் கருணையினால் அவனை மனிதனென்றெண்ணி வாரியெடுத்து அவனது காயங்களை தனது வஸ்திரங்கொண்டு துடைத்து ஆயாசந் தீர்த்து வைத்தியசாலைக்கு அனுப்பவேண்டியதாயின் வண்டிக்காரனுக்கேனும், கூலிக்காரனுக்கேனும் தனது பணத்தைக் கொடுத்து உதவி புரிந்தனுப்புவதுண்டு. சுதேசிகளில் சாதிபேதம் வைத்துள்ள ஓர் மூட்டைத் தூக்கியாயினும், குப்பைவாரியாயினும் வீதியிற் போகுங்கால் நாகரீகமுள்ள ஓர் மனிதன், தவறி கீழே விழுந்துவிடுவானாயின் தனது கருணையற்ற செயலால் விலகி நின்றுக் கொண்டு அவனென்ன சாதி மனிதன், என்ன பாஷை மனிதன், எங்கிருப்பவனெனச் சொல்லிக்கொண்டே போய்விடுவானன்றி நம்மெயொத்த மனிதனாச்சுதே என்று ஈவு, இதக்கம் உண்டாகி அருகிற்சென்று ஆதரிக்கவே மாட்டான். அத்தகைய இதக்கமற்ற செயல் தோன்றுவதற்குக் காரணம் சாதிகர்வச் செயலும், மதகர்வச் செயலுமே ஆகும். ஆங்கிலேயர்களுக்குள்ள வித்தை, புத்தி, ஈகை, கருணை முதலியப் பெருக்கங்களோவென்னில், அவர்களுக்குள்ள சாதிபேதமென்னும் பொறாமெ குணமற்ற பெருந்தகைமெயும் மனிதர்களை மனிதர்களாக பாவிக்கும் சிறந்த குணமும் ஏழையாயிருப்பினும், வியாதியஸ்தனாய் இருப்பினும் அவனைத் தன்னைப் போல் நேசித்து பாதுகாக்கும் அன்பு நிறைந்துள்ளவர்களாதலின் அவர்களைக் கருணை நிறைந்தவர்களென்றே செயல்கண்டுரைக்கத்தகும்.
- 4:50; மே 24, 1911 -
சு. பரதேசியாரே, எவ்வாறாயினும் சுதேசக் குடிகள் மீது சுதேசிகளுக்கு கருணையில்லாமற்போமா.
ப. சுதேசியாரே, தங்கள் சுதேசிகளின் செயலைக் கண்டறிய வேண்டுமாயின் சுதேச ஏழைக்குடிகளை சுதேச உத்தியோகஸ்தர்கள் தனித்து வேலை வாங்குவதையும் ஓர் ஐரோப்பியர் அருகிலிருக்குங்கால் வேலை வாங்குவதையும் நேரில் காண்பீராயின் நன்கு விளங்குமே.
சு. பரதேசியாரே, சுதேச உத்தியோகஸ்தர்கள் தனித்திருக்குங்கால் ஏழைகளை எவ்வித வேலை வாங்குகின்றார்கள். ஓர் ஐரோப்பியர் அருகிலிருந்தால் எவ்வகையான வேலை வாங்குகின்றார்கள், விளங்கவில்லை.
ப. சுதேசியாரே, சுதேச ஏழைக்குடிகளை சுதேச உத்தியோகஸ்தர் தனித்திருந்து வேலைவாங்குங்கால் பெரிய சாதியென்றும் சாதிகர்வம், ஒன்று பெரிய உத்தியோகமென்னும் உத்தியோக கர்வம் இரண்டு, இவ்விரண்டையும் ஒன்று சேர்த்துக் கொண்டு ஏழை ஊழியர்களை அடித்தும் வைதும் பலவகைத்துன்பஞ் செய்தும் ஏவல் வாங்குவார்கள். ஓர் ஐரோப்பியர் அருகிலிருப்பாராயின் சாதிகர்வம், உத்தியோக கர்வம் இரண்டையும் ஒடுக்கிக் கொண்டு தான் வாங்கவேண்டிய வேலைகளை மட்டிலும் சரிவர வாங்கிக்கொள்ளுவார். இதனால் சுதேசப் பெரிய உத்தியோகஸ்தர்களின் கருணை சுதேசக் குடிகள் மீதில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்குகின்றதே.
சு. பரதேசியாரே, சுதேச ஏழைகள் மீது சுதேச உத்தியோகங்களுக்குக் கருணை இல்லாவிடில் அனந்த கிராமங்களில் சுதேசப்பெரிய உத்தியோகஸ்தர்கள் காரியாதிகளை நடாத்திவருவார்களோ.
ப. சுதேசியாரே, சுதேச உத்தியோகஸ்தர்கள் கருணை வைத்து கிராமக் குடிகளை கார்த்து வருகின்றார்களா என்பதை கிராம சுதேசிகளைக் கேட்டறிவதுடன் உத்தியோகஸ்தரிடமுள்ளத் தொகையையும் கண்டு அறிந்து கொள்ளுவீராயின் சுதேச கிராம வாசிகள் மீது சுதேச உத்தியோகஸ்தர்கள் கருணை வைத்துள்ளார்களா இல்லையா என்பதை எளிதிலறிந்து கொள்ளலாமே.
சு. பரதேசியாரே, சுதேச கிராமவாசிகள் சுதேச உத்தியோகஸ்தர்களால் பலவகைத் துன்பங்களை அனுபவித்து வருகின்றார்கள் என்று கேழ்விப்படுகிறேனாயினும் உள்ளத் தொகையால் எவ்வகைக் கண்டறிவது.
ப. சுதேசியாரே, ஓர் சுதேசிப் பத்துரூபா சம்பளமுள்ள உத்தியோகஸ்தன் பத்து வருஷத்தில் பத்தாயிரரூபாய் சம்பளத்தையுடையவனாகக் காண்பானாயின் அத்தொகை பத்து ரூபாய் சம்பளத்தில் சேர்ந்ததா அன்றேல் குடிகளை வஞ்சித்தும் மிரட்டியுந் துன்பப்படுத்தியும் சம்பாதித்ததாவென கூர்ந்தறிவதாயின் சுதேச உத்தியோகஸ்தர்களால் சுதேசக் குடிகளுக்குள்ளத் துன்பங்கள் நன்கு விளங்குமே.
- 4:51; மே 31, 1911 -
சு. பரதேசியாரே, ஐரோப்பியராலேயே இச்சுதேசிகள் சுகமடைகின்றார்கள். சுதேசிகளாலேயே சுதேசிகள் சுகமடைகிறதில்லை என்று கூறலாமோ.
ப. சுதேசியாரே, தற்காலம் சுதேசம் சிறப்படைந்து வருவதற்கும், சுதேசிகள் சுகவாழ்க்கைப் பெற்று சீரடைவதற்கும், ஐரோப்பியர்களது கருணையும் செயலுமேயன்றி வேறொருவரது செயலும் இல்லை என்று துணிந்து கூறலாமே.
சு. பரதேசியாரே, சுதேசிகளுக்கு சுதேசிகளால் யாதொரு சுகமுமில்லையென்று எவ்வாறு கண்டறியலாம். ஐரோப்பியர்களால் சுதேசிகளுக்கு சுகமுண்டென்று எவ்வகையால் கண்டறியலாம்.
ப. சுதேசியாரே, அவரவர்கள் சுகத்திற்கு அவர்கள் முயற்சிகளே காரணமாயிருக்கின்றபடியால் சுதேசிகளின் முயற்சி எத்தகையது, ஐரோப்பியர்களது முயற்சி எத்தகையதென்று உணறுமிடத்து விளங்கும். அதாவது, பெளத்த தன்மம் இந்தியதேச முழுவதும் நிறைந்திருந்த காலத்தில் அவர்களால் கண்டுபிடித்து உலகோபகாரமாக எழுதிவைத்த நுாற்களும், செய்துகாட்டிய வித்தைகளுமே நாளதுவரையில் நிகழ்ந்துவருகின்றதன்றி தற்காலமுள்ள சுதேசிகளால் உலகோபகார நூற்களேனும், உலகோபகாரக் கைத்தொழில்களேனும், தேச சீர்திருத்தங்களேனும் செய்ததே கிடையாது. அதற்குப் பகரமாக பௌத்தர்களால் வரைந்துவைத்துள்ள இலக்கிய நூற்களுக்குமேல் வேறு நூல்கள் எழுதியது கிடையாது. அவர்கள் எழுதிவைத்துள்ள இலக்கண நூற்களுக்குமேல் வேறு நூற்கள் எழுதியது கிடையாது. அவர்கள் எழுதியுள்ள வைத்திய நூற்களுக்குமேல் வெவ்வேறு நூற்கள் எழுதியது கிடையாது. அவர்கள் கண்டுபிடித்துசெய்த சம்மாங்குடை, பிரம்புகுடை முதலிய குடைகளுக்குமேல் வேறு குடைகளுஞ் செய்தது கிடையாது. அவர்கள் கண்டுபிடித்த நீர் பாய்ச்சும் ஏற்றங்களுக்கு மேலாய் நீர்பாய்ச்சுங் கருவிகளை இவர்கள் கண்டுபிடித்ததுங் கிடையாது. அவர்கள் கண்டு பிடித்திருந்த பருத்தியின் நெசவுகளுக்கும் பட்டினது நெசவுகளுக்கும் மேலாய நெசவுகளை இவர்கள் கண்டுபிடித்ததும் கிடையாது. அவர்கள் கண்டுபிடித்து செய்துவந்த கட்டங்களுக்கு மேலாய விருத்தி இவர்கள் செய்தது கிடையாது. அவர்கள் கண்டுபிடித்த ஓடதிகளுக்கு மேலாய ஓடதிகளை இவர்கள் கண்டுபிடித்தது கிடையாது. அவர்கள் கண்டுபிடித்த லோகங்களுக்கு மேலாய லோகங்களை இவர்கள் கண்டுபிடித்தது கிடையாது. அவர்கள் கண்டுபிடித்த இரத்தினங்களுக்கு மேல் இவர்கள் கண்டுபிடித்த இரத்தினங்கள் கிடையாது. அவர்கள் கண்டுபிடித்த சித்துக்களுக்குமேல் இவர்கள் கண்டடைந்த சித்துக்கள் கிடையாது. அவர்கள் கண்டடைந்த ஞானசுகத்திற்குமேல் இவர்கள் கண்டடைந்த ஞானசுகம் கிடையாது.
காரணமோவென்னில் பௌத்தர்கள் யாவரும் தங்கடங்கள் முயற்சியால் கல்வியின் விருத்தியும், கைத்தொழில் விருத்தியும் பெறும்படியானச் செயல்களிலிலேயே முன்னேறியவர்களாதலின் சகல விருத்தியிலும் சிறப்புற்று உலகெங்கும் பிரகாசித்துவந்தார்கள். தற்கால சுதேசிகளோ கல்வி விருத்திகளையும், கைத்தொழில் விருத்திகளையும் சாதி வித்தியாசத்தால் பாழ்படுத்தி சாமி கொடுப்பார் சாமி கொடுப்பாரென்னும் பொய்ப்பிராந்தியாம் சோம்பலேறி நின்று விட்டபடியால் சகல விஷயக்கேடுகளுக்கும் ஆதாரமாகிவிட்டது.
இத்தகையக் கேடுண்ணும் நிலையில் இதுவரையிலும் இருக்குமாயின் தேசமும் இருளடைந்து மக்களும் பாழடைந்து சீர்குலைந்திருப்பார்கள். இவ்வகைக் கேடுண்டுவருங்கால் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கத்துடன் கருணைகொண்டு சகலசாதியோரையும் சகோதரர்களென பாவிக்கும் ஐரோப்பியர்கள் வந்து தோன்றி தேசத்தையும், தேசமக்களையும் சீர்திருத்தி சிறப்படையச் செய்துவருகின்றார்கள்.
- 5:1; சூன் 14, 1911 -
சு. இத்தகையக் கேடுண்ணும் நிலையென்று கூறியுள்ளவற்றை விவரிக்க வேண்டுகிறேன்.
ப. பெளத்த அரசர்களும், பௌத்தக் குடிகளும் இந்தியதேச முழுவதும் நிறைந்திருந்த காலத்தில் அவர்களால் அநுசரித்துவந்த வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்க மென்னும் சிறந்த செயல்களற்று பின்னர் தோன்றிய வேஷப் பிராமணர்களால் தங்களது சுயப்பிரயோசனங்களுக்கென்று ஏற்படுத்திக் கொண்ட சாதிபேதச் செயலும் சமயபேதச் செயலுமே இத்தேசத்தைக் கேடடையச்செய்ததாகும்.
சு. சாதிபேதச் செயலாலும், சமயபேதச் செயலாலும் தேசம் எவ்வகையாற் கேடடைந்துபோம்.
ப. சாதிபேதச்செயலும், சமயபேதச் செயலும் பொய்யாயக் கட்டுக்கதைகளாதலின் விவேகிகள் யாவரும் அவைகளை அருவறுப்பதோர் விரோதம். கீழ்ச்சாதி மேற்சாதியென்று மனிதவகுப்போரே மனிதவகுப்போரைத் தாழ்த்திவருவதோர் விரோதம். பெண் கொடுக்கல் வாங்கலில்லாததோர் விரோதம். ஒருவர்வீட்டில் ஒருவர் புசிப்பெடுக்காததோர் விரோதம் சாதிபேதப் பொறாமெய்ச்செயலால் தூஷித்துக்கொள்ளுவதோர் விரோதம்.
சாதி வித்தியாசப் பொய்க் கட்டுப்பாட்டினால் இத்தியாதி விரோதக் கிளைகள் விரிந்து வளர்ந்ததுடன் சமய பேதங்களினால் தங்களுக்குத் தாங்களே தாற்பரியம் அறியாது ஏற்படுத்திக்கொண்டவேதாந்தமே பெரிதென்று விசாரணையற்ற வாதுபுரிவதொன்று. விஷ்ணுவுக்கே பரத்துவம் சிவனுக்குப் பரத்துவமில்லை, சிவனுக்கே பரத்துவம் விஷ்ணுவுக்கு பரத்துவமில்லையென்று தங்களுக்குத்தாங்களே ஏற்படுத்திக் கொண்ட சாமிகளுக்கு தாங்களே பரத்துவங்கொடுத்து தாங்களே புகழ்ந்துக்கொள்ளுவதோர் விரோதம். பணம் சம்பாதிப்பதற்கு எங்கள் குருவேதான் ஜகத்குரு, மற்ற குருக்கள் எல்லாம் ஜகத்குருவல்லவென்பதோர் விரோதம். எங்கள் சாமிபெயராலேயே உண்டிகட்டவேண்டும், மற்ற சாமிகள் பெயரால் உண்டிகட்டலாகாது என்பதோர் விரோதம்.
இத்தியாதி சாதிவிரோதத்தினாலும், சமயவிரோதத்தினாலும் ஒருவருக்கொருவர் முகத்திருப்புண்டாகி, பூர்வத்திலிருந்த வித்தை புத்தி, ஈகை, சன்மார்க்கமாகியச் செயல்கள் யாவு மற்று சோம்பலென்னுந் தடிப்பேறி, வஞ்சினமென்னுங்கூடுகட்டி, பொறாமெய்ப் பொச்செறிப்பென்னும் மூடியிட்டும், சாதி சமயப் போராட்ட துவஜமிட்டு, பொய்க்குருக்களாகிய வேஷப்பிராமணர்கள் எக்குடி கெடினும் தங்கள்குடி சுகம் பெற்றால் போதுமென்றெண்ணி சுயப்பிரயோசனத்தை நாடிநிற்கவும் ஆடுகள் கசாயிக்காரனைப் பின்பற்றி செல்லுவது போலப் பொய்க்குருக்களைப் பேதைக் குடிகள் பின்பற்றி செல்லவுமாகியச் செயல்களால் சாதிகளே சீர்கொடுக்கும், சாமிகளே சோறு கொடுக்குமென்னும் அஞ்ஞானத்தால் மக்களின் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கமற்று சீருங்கெட்டு தேச்சிறப்பும் அழிந்து பாழடைந்து போமென்பதாம்.
சு. சாதிபேதத்தாலும் சமயபேதத்தாலுமே இத்தேசம் பாழடைந்துப் போயிற்றோ.
ப. இன்னும் சிலகாலமட்.டி-லும் இப்பிரிட்டிஷ் துரைத்தனத்தார் இவ்விடம் வந்து குடியேறாம லிருப்பார்களாயின் மக்கள் சீர்குலைந்து சிறப்பழிவதும், தேசம் நாகரீகம் குன்றி பாழ்படுவதும் பட்டம் பகல் போல் பரக்க விளங்குமே.
சு. மக்களுக்கு சீர்குலைவும், தேசப் பாழும் எவ்வகையா லுண்டாமென்பதை விளக்கக் கோருகிறேன்.
(இதற்குப் பின் இக்கட்டுரை தொடரப்படவில்லையெனத் தெரிகிறது)
- 5:7; சூலை 25, 1911 -