உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/221-383

விக்கிமூலம் இலிருந்து

217. கிராம பஞ்சாயத்து கேழ்க்குங் கனவான்களே

சற்று நோக்குவீர்களாக. அறக்கோணத்தைச் சார்ந்த ஓர் கிராமத்தில் சாதிபேதம் வைத்துள்ள சிலக்குடிகளும், சாதிபேதமில்லா ஏழைக்குடிகளுஞ் சேர்ந்து அம்மன் கோவில் உற்சவஞ் செய்தார்களாம்.

அவ்வுச்சவத்தில் சாதிபேதமுள்ளவர்கள் யாவரும் ஒன்றுசேர்ந்துக் கொண்டு சாதிபேதமில்லா ஏழைக்குடிகளுக்குத் தங்கள் மனம்போன சில உத்திரவளிக்கவும் அதை அவர்கள் ஒப்புக்கொள்ளாத விஷயத்தினால் அவர்கள் அம்மன்கோவிலண்டை வைத்த பொங்கல் பானைகளை உடைத்தெரிந்தும், அதிக வுபத்திரவம் உண்டாக வடித்தும், குடியிருக்கும் வீடுகளைப் பாழ்படுத்தியும், அவர்கள் கஷ்டம் பொருக்கமுடியாது அதிகாரிகளிடம் பிரையாது கொண்டு போனதும் சாட்சிகளை சொல்லவிடாமல் பயமுறுத்தியும் பலவகையானக்கொடூரத் துன்பங்களெல்லாஞ் செய்துவருவதாகத் தெரிய வருகின்றது. கலைக்ட்டர்கள் அதிகாரம், டெப்டிகலைக்ட்டர்கள் அதிகாரமும், தாசில்தாரர்கள் அதிகாரமும் மேற்பார்வையும் இருக்கும்போதே சாதிபேதமுள்ள கிராமவாசிகளின் அதிகாரத்தை சாதிபேதமில்லா ஏழைக்குடிகளின் மீது செலுத்துவதானால் கிராமவாசிகளுக்கு பஞ்சாயத்து அதிகாரங் கொடுத்துவிட்டால் சாதிபேதமில்லா ஏழைக்குடிகளை இன்னும் என்ன அக்கிரமங்களைச் செய்து பாழ்படுத்துவார்கள் என்பதை கிராம பஞ்சாயத்தைக் கேழ்க்குங் கனவான்களே கவனிக்கவேண்டியதுதான்.

சாதிபேதமில்லா ஏழைக்குடிகளை அடித்துப் பாழ்படுத்தி அவர்கள் பொங்கற்பானையும் உடைத்து அவர்கள் குடியிருந்த வீடுகளையும் நாசப்படுத்திவிட்டு அவர்கள் படும் கஷ்டங்களை சகிக்கமுடியாது அதிகாரிகளிடம் தங்களுக்கு நேரிட்ட கஷ்டங்களை தெரிவித்தபோது அவர்களுக்காகப் பரிந்துவந்து கண்ட சங்கதிகளை சாட்சி சொல்ல முயலும் சாதிபேதமில்லா ஏழை மக்களையும் பயமுறுத்தி சாட்சி சொல்லாதிருக்கும் வழிகளெல்லாம் செய்துவருகின்றார்களாமே.

அந்தோ! கருணையும், நீதியும், நெறியும் அமைந்துள்ள இந்த பிரிட்டிஷ் துரைத்தனத்திலேயே சாதிபேதமில்லா ஏழைக்குடிகளை துன்பஞ்செய்யும் சாதிபேதமுள்ளோர் தங்களது சுயவாட்சியில் இன்னும் என்னென்னத் துன்பங்களைச் செய்து பாழ்படுத்தியிருப்பார்கள் என்பது சொல்லாமலே விளங்கும்.

தன கர்வத்தினாலும், சாதிகர்வத்தினாலும், உத்தியோக கர்வத்தினாலும் சாதிபேதமில்லா ஏழைமக்களை வாதித்துத் துன்பப்படுத்துத் தீவினைகளானது ஒருவரையும் விடமாட்டாது. ஏழை மக்கள் அழுதகண்ணீர் கூரியவாளுக்கு ஒக்கும் என்னும் முதுமொழியுந் தவிரமாட்டாது.

அறக்கோணத்தைச்சார்ந்த ஏழை கிராமக் குடிகளின் பிரையாது அதிகாரிகளிடம் விசாரிணையிலிருக்கின்றது. அவை முடிந்தபின்னர் அக்கிராமப் பெயரையும், கிராமக் குடிகளின் பெயரையும், அவர்கள் அடைந்த துன்பங்களையும், அவற்றை நடத்தியவர்களின் பெயர்களையும் நமது பத்திரிகையில் விவரமாக வெளியிடுவோம்.

- 5:2; சூன் 21, 1911 -