உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/226-383

விக்கிமூலம் இலிருந்து

222. கனந்தங்கிய கோகேல் அவர்களின் கூட்டமும் ஏதுமில்லா வாட்டமும்

கனந்தங்கிய கோகேலவர்கள் வடதேசத்திலிருக்குங்கால் இந்திய சிறுவர்களுக்குக் கல்வி கற்பிக்கும்படியான விஷயத்தில் மிக்க உழைக்கின்றா ரென்றும், கருணைதங்கிய ராஜாங்கத்தோரிடத்துங் கேட்டுவருகின்றா ரென்றுங்கேட்டு மிக்க ஆனந்தத்திலிருந்தோம். அத்தகைய கனவான் தென்னிந்தியாவை நாடி சென்னைக்கு வந்திருந்தபோது பகிரங்கமாய்க் கூட்டங்களை வைத்து யாதொன்றையும் பேசாது தங்களுக்குரியவர்களை மட்டிலும் சேர்த்துக்கொண்டு தங்களுக்குரியவற்றைப் பேசிவிட்டுப்போயதாக விளங்குகின்றது. சகல மனுக்களுக்கும் பொதுவாயக் கூட்டங்கூடி சகலருக்கும் பொதுவாகக் கலாசாலை வைக்க வேண்டுமென்னும் பொதுநல முயற்சியீதாமோ. நல்லெண்ண முயற்சியால் சகல மக்களுக்கும் கல்விகற்பிக்க வேண்டுமென்னுங் கருணை வைத்துள்ளவராயின் பயிரங்கக்கூட்டங்களை வைத்து தனது நன்னோக்க அபிப்பிராயத்தை செய்துவைப்பார். அங்ஙன மிராதபடியால் தங்களுக்கு உரித்தாயவைகளைப் பேசி முடிவு செய்து விட்டுப் போய்விட்டார்.

அதனால் இஃது பொதுநல சுகமன்று. சுயநலசுகமென்றே பகருகின்றார்கள். அத்தகையப் பகட்டிற்கு ஆதாரமாக நமது கனந்தங்கிய கோகேல் அவர்கள் இந்தியாவிலுள்ள சிறுவர்கள் யாவருக்கும் இலவசக் கல்வி கொடுக்க வேண்டுமென்று கவர்மென்டாரை கேட்கவும் தகுமோ. அங்ஙனம் அவர்களால் கொடுக்கவும் போமோ. யாதென்பரேல், இந்தியாவிலுள்ளக் குடிகளில் தங்கள் சொந்த பணங்களை செலவு செய்து சிறுவர்களுக்குக் கல்விகற்பிக்கக் கூடிய கனவான்கள் நூற்றிற்கு நாற்பது பெயரிருக்கின்றார்கள். இவர்கள் யாவருங் கருணைகொண்டு கலாசாலைகளை நிறுமிப்பார்களாயின் மற்றுமுள்ள எழியச் சிறுவர்களும் அவ்விடஞ்சென்று கல்வியைக் கற்றுக்கொள்ளுவார்கள். இத்தகைய முயற்சியைக் கனவான்களைக் கொண்டே நமது கோகேலவர்கள் முடிவுசெய்யாது இந்தியாவிலுள்ளக் கனவான்களின் பிள்ளைகளானாலுஞ் சரியே, ஏழைகளது பிள்ளைகளானாலுஞ் சரியே அவர்கள் யாவருக்கும் கவர்ன்மெண்டார் இலவசக்கல்வியளிக்க வேண்டுமென்று கேட்பதாயின் பொதுவாய ஆலோசனைக்குப் பொருந்துமோ, செலவும் சொற்பமாகுமோ. இப்போது கவர்ன்மெண்டாரால் கல்வி சாலைகளுக்கு அளித்துவருந் தொகையுடன் சகல சிறுவர்களுக்கும் இலவசக்கல்வி கற்பிப்பதாயின் எவ்வளவு பெருந்தொகை வேண்டுமென்னுங்கணக்கை கனந்தங்கிய கோகேல் அறியாதவரோ. எல்லாம் அறிந்திருந்தும் அவரது நோக்கத்தை ஆராயுங்கால் அனந்தம்பேர் இந்தியாவில் படித்துவிட்டு வேறுதொழில் செய்வதற்கும் கஷ்டப்படுவதற்கும் இல்லாமலிருக்கின்றபடியால் குறைந்தது கலாசாலையொன்றுக்கு மூன்று நான்கு உபாத்தியாயர்களை நியமிக்கினும் பலபெயர் சுகசீவனம் அடைவார்களென்னும் சுயநலக் கருத்தாகவே விளங்குகின்றது.

இத்தகையக் கருத்தால் இன்னுமுள்ளோரும் சோம்பலுற்றுக் குடி கெடுவார்களன்றி சீர்பெறமாட்டார்கள். சீர்பெறவேண்டுமாயின் அந்தந்த முநிசபில் எல்லைக்குட்பட்ட கனவான்கள் யாவரும் ஒன்றுகூடி சாதிபேதம் சமய பேதமென்னும் பொறாமெய் நாற்றங்களை அகற்றிவிட்டு கல்வி சாலை, கைத்தொழிற்சாலைகளை நிறுமித்து சகல மக்களுக்கும் பேதமின்றி சமரசக் கல்வியையுங் கைத்தொழிலையுங் கற்பிக்க ஆரம்பிப்பார்களாயின் கருணை தங்கிய ராஜாங்கத்தோரும் தங்களாற் கூடியவுதவி செய்வார்கள்.

இத்தகையப் பொதுவாயச் செயலை விட்டு குறித்தவர்கள் மட்டிலும் ஓர் கூட்டங்கூடி தங்கட்கு உரித்தாய செயலைப்பேசி பொதுநலங்காட்டி சுயநலம் விரும்புவதாயின் ஏழைகளுக்கு வாட்டமுண்டாவதுடன் இராஜாங்கத்தோர் திருவுளப் பொதுக் கருணையும் அம்மட்டு, அம்மட்டேயாம்.

- 5:9; ஆகஸ்டு 9, 1911 -