உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/227-383

விக்கிமூலம் இலிருந்து

223. கனந்தங்கிய கோகேல் அவர்களின் நோக்கம்

நமது கனந்தங்கிய கோகேலவர்கள் உலகமக்களின் விசாரிணைப் புருஷரும், பொதுநல சீர்திருத்தக்காரரும், இந்திய தேசம் சிறப்படைய வேண்டுமென்னும் நன்னோக்கமுடையவருமாய் இருப்பது யதார்த்தமாயின் இவ்விந்தியதேசத்தில் நூதனமாக ஏற்படுத்திக்கொண்ட சாதிபேதமென்னுங் கொறூரச் செயலினால் ஆறுகோடிக்கு மேற்பட்ட மக்கள் அன்னத்திற்கு அல்லலடைந்தும், ஆடைக்கு அவதியுற்றும் அலைவதுடன் முநிசபில் எல்லைக்கு அப்புறப்பட்டுள்ள கிராமங்களில் அம்மட்டர்களை சவரஞ் செய்யவிடாமலும், வண்ணார்களை வஸ்திரமெடுக்கவிடாமலும், சுத்தநீரை மொண்டு குடிக்கவிடாமலும் அவர்கள் தங்களுக்குத்தாங்களே பூமிகளை உழுது பயிரிட்டு சீவிக்கும்படி கருணைதங்கிய கவர்ன்மென்றாரை அணுகி பூமி கொடுக்கவேண்டுமென்று கேட்குங்கால் அதற்காய சாக்குபோக்குகளைச் சொல்லி கொடுக்கவிடாத ஏதுக்களை செய்துக்கொண்டும் பலவித இம்சைகளைச் செய்து ஈடேறவிடாமல் பாழ்படுத்துஞ் செயல்கள் சகலருக்குந் தெரிந்திருக்க கனந்தங்கிய கோகேலவர்களுக்குமட்டிலும் தெரியாமற்போயதோ.

ஏதேதோ சீர்திருத்தங்களை செய்யவேண்டுமென்று வெளிதோன்றுகிறவர்கள் சீர்கேடடைந்துள்ளவர்களை நோக்காமலும் அவர்கள்படுங் கஷ்டநிஷ்டூரங்களைக் கவனியாமலும் “கனத்தின்மீது வளை” வென்னும் பழமொழிக்கிணங்க முன்னுக்கு வந்துள்ளவர்களே சுகம்பெற வேண்டும் மற்றய ஏழைகள் யாவரும் சீர்கெட வேண்டுமென்னுங் கெட்ட எண்ணங்களைப் பதியவைத்துக்கொண்டு சீர்திருத்தக்காரரென வெளிதோன்றுவதாயின் எடுத்தவிஷயம் ஈடேறுமோ, ஒருக்காலும் ஈடேறாவாம். அங்ஙனம் இவை ஈடேற்றம்போல் தோற்றினும் அஃதிழிவடையுமேயன்றி புகழடைய மாட்டாவாம்.

காரணமோவென்னில், “ஏழைக ளழுதக் கண்ணீர் கூரியவாளுக் கொக்கும்” என்னும் பழமொழிக்கிணங்க பூர்வகாலத்தின் இத்தேசச் சிறந்த குடிகள் இரந்து தின்னவும், இத்தேசம்வந்து குடியேறி இரந்து தின்னவர்கள் சிறந்து நிற்கவுமானதேயாம்.

வஞ்சினத்தாலும் சூதினாலும் குடிகெடுப்பினாலும் சிறந்து நிற்பவர்கள் எக்காலும் சிறப்பைப் பெறமாட்டார்கள். நீதியினாலும், நெறியினாலும், அன்பின் மிகுந்த ஒழுக்கத்தினாலும் சிறந்து நிற்பவர்கள் எக்காலுஞ் சிறந்தேநிற்பார்கள் என்பது துணிபு.

ஆதலின் நமது கோகேலெனுங் கனவான் சகலசாதி சிறுவர்களுக்குங் கலாசாலைவைத்துக் கற்பிக்கவேண்டு மென்னும் நல்லெண்ண மிருக்குமாயின் ஆறுகோடி மக்கள் அல்லலடைந்துவரும் அவதிகளை நீக்கி அவர்களுக்கோர் சீர்திருத்த வழிகளை உண்டு செய்துவிட்டு அவர்களுடைய சிறுவர்களுக்குக் கல்விகற்பிக்க முயலுவராயின் யாதோரிடையூறுமின்றி முன்னேறுவார்கள்.

தாய்தந்தையர்களை ஆடைக்கும் அன்னத்திற்கும் அலையவிட்டு அவர்கள் மைந்தர்களுக்குக் கல்விகற்பிப்போமென்பது மந்தநிலையேயாம்.

ஆறுகோடி மக்கள் சாதிபேதப் பொறாமெ அறிவிலிச் செயலால் தாழ்த்தப்பட்டு நிலைகுலைந்திருப்பது உலகப்பிரசித்தமாயிருக்க சீர்திருத்தக்காரரென வெளிதோன்றிய கோகேலவர்களுக்கு மட்டிலுந் தெரியாததோ இல்லை. தெரிந்தும் தெரியாதது போல் தாங்கள் கொண்டுள்ள கருத்தை நிறைவேற்றுதற்குத் தாவிநிற்கின்றார்.

தென்னிந்தியாவிற் பிறந்து வளர்ந்து சீர்திருத்தக்காரரென வெளிவந்து நாஷனல் காங்கிரஸ் கமிட்டியாரென்னும் ஓர்கூட்டமுங் கூட்டிக்கொண்டு வருஷந்தோரும் பேசிவருகின்றவர்களாகியப் பெருங்கூட்டத்தோர்களே ஆறுகோடி மக்களின் அல்லலைத் தங்கள் செவிகளிற் போடாமலும் அவர்கள் கஷ்ட நஷ்டங்களை நோக்காமலும் தங்கடங்கள் சுயநலங்களைப் பார்த்திருக்கும்போது அச்சங்கத்திற் சேர்ந்துள்ள கோகேலென்னுங் கனவான்மட்டிலும் பேசவில்லையென்பது வீண்மொழியாதலின் இம்மட்டில் இவற்றை விடுக்கின்றோம்.

- 5:10; ஆகஸ்டு 16, 1911 -