உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/234-383

விக்கிமூலம் இலிருந்து

230. பஞ்சமும் பெருவாரிக்காச்சலும் பிளேக்கும் உண்டாவதற்குக் காரணம் என்ன?

இராஜத்துரோகிகளும், குருத்துரோகிகளும், குடித்துரோகிகளும் மென்மேலும் பெருகிக்கொண்டுவருகின்றபடியால் பஞ்சமும், பெருவாரிக் காச்சலும், பிளேக்கும், நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகின்றது. இவற்றை நாம் நோக்காது மழையில்லையென்று வானத்தை நோக்குவதால் யாதுபயன். இதற்குப் பகரமாய் தீபேத்தியரையும், ஜப்பானியரையும், சீனரையும், பிர்ம்மரையும் நோக்குவோமானால் அவர்களுக்குள்ள இராஜவிசுவாசத்தாலும் குரு விசுவாசத்தாலும் குடிகள் ஒவ்வொருவருக்குள்ள அன்பின் விசுவாசத்தாலும் காலமழை பெய்து பயிறுகளோங்கி குடிகளுங் குணவாழ்க்கையிலிருப்பதுடன் நாளுக்குநாள் வித்தை, புத்தி, ஈகை சன்மார்க்கம் இவைகள் பெருகி நாகரீகமும் சிறப்பும் பெற்று வருகின்றார்கள்.

நமது தேசத்தோர்களோ கரும்பினை வேரோடு பிடுங்குவதற்கு ஒப்பாக பிரிட்டிஷ் அரசாட்சியின் கருணையால் கல்வியற்றவர்களெல்லாங் கனவான்களாகவும், பிச்சையிரந்துண்டவர்களெல்லாம் பிரபுக்களாகவும், சோம்பேறிகளெல்லாம் சொத்துடையவர்களாகவும் ஆகிவிட்டபடியால் பிரிட்டிஷ் அரசாட்சியை வேரோடு பெயர்த்தொட்டிவிட்டு ஒவ்வொருவரும் தனித்தனி ராஜாக்களாகிவிடலா மென்னும் பேராசையிலிருக்கின்றபடியால் பஞ்சமும், பெருவாரிக் காச்சலும், பிளேக்குந்தோன்றி பேதைமக்களை வருத்திவருகின்றது.

இந்தியாவை வந்து கைப்பற்றியபோதே நமது கருணைதங்கியராஜாங்கத்தார் இத்தேசத்தோரை நோக்கி தங்கள் தங்கள் சாதியாசாரங்களும் சமயாசாரங்களும் தங்கடங்கள் வீடுகளுக்குள்ளும் வாசல்களுக்குள்ளும் தங்களுக்குள்ளும் இருக்கவேண்டு மேயன்றி பிரிட்டிஷ் இராஜாங்க சாலைகளிலும், இராஜாங்க உத்தியோகங்களிலுங் காட்டலாகாதென்னும் பொதுச் சட்டத்தை ஏற்படுத்திவிடுவதுடன் அவர்கள் சொந்தப்பணங் கொண்டே வாசித்து முன்னேறவேண்டுமென்னும் உத்திரவையும் அளித்திருப்பார்களாயின் இத்தகைய ராஜத்துரோகிகள் ஒருவருந்தோன்றியிருக்க மாட்டார்கள்.

அங்ஙனஞ்செய்யாது பெரியசாதியாயிருப்பவர்கள் பெரியசாதிகள் தான். சிறிய சாதியாயிருப்பவர்கள் சிறியசாதியார்கள்தானென்னும் ஏற்பாட்டை ஒத்துக் கொண்டே சிலக் காரியாதிகளை நடத்திக் கொண்டே வந்துவிட்டபடியால் யதார்த்தத்தில் தங்களைப் பெரியசாதியென்றே எண்ணிக் கொண்டு மற்றும் ஏழை எளியோர் யாவரைந் தங்கள் சாதியதிகாரத்தால் அடக்கி யாண்டுவந்ததுடன் இராஜாங்க உத்தியோக அதிகாரத்தையும் கைப்பற்றிக் கொண்டு மற்றுமுள்ளக் குடிகளையும் தங்கள் சாதி அதிகாரத்தாலும் உத்தியோக அதிகாரத்தாலும் மேலுமேலும் மிரட்டி பெரியசாதி வேஷத்தை இன்னும் பலப்படுத்திக்கொண்டார்கள்.

நாளுக்குநாள் சாதியதிகாரமும் உத்தியோக அதிகாரமும் பிலப்பட்டுக் கொண்டே வரவும் சாதியதிகாரத்தாலும் உத்தியோக அதிகாரத்தாலும் ஏழைக்குடிகள் யாவரும் ஒடுங்கிக்கொண்டேவரவுங் கண்ட சாதித்தலைவர்கள் குடிகள் யாவரும் நமக்கு அடங்கியவர்களாயிருக்கிறபடியால் தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது போலும், அன்னமிடுவோர் வீட்டில் கன்னமிடுவதுபோலும் வித்தையும் புத்தியும் அளித்து உத்தியோக மீய்ந்து கார்த்துவரும் பிரிட்டிஷ் ஆட்சியின்மீதே துவேஷங்கொள்ளும் தைரியசாலிகளாகிவிட்டார்கள்.

அத்தகைய சாதித்தலைமெயாலும், உத்தியோகத் தலைமெயாலுந் தங்கள் சாதியாலோசினைக் கூட்டங்களைக் கூடவும், இராஜதுரோக சிந்தனைகளைப் பெருக்கவுமாய மூடவீரர்களாகி தாங்கள் கெட்டு நாசமடைவதுடன் தங்கள் சாதிக் கட்டுக்குள் அடங்கி தங்களையே சாமிகளென்றும், தங்களையே குருக்களென்றும். தங்களையே மேலோரென்று தங்கள் வாக்கியங்களையே நீதிவாக்கியங்களென்று எண்ணித்திரியும் பேதைமக்களும் பிழைப்பட்டுப்போம் வழியைத் தேடிக்கொள்ளுகின்றார்கள்.

யாங்கள் பெரியசாதியோர், பெரியசாதியோரென மகமதியர்கள்பால் சாதித்தலைவர்களென்போர் கூறியும் அம்மொழிகளை செவிகளில் ஏற்காது தங்கள் காரியாதிகளை நடாத்திக்கொண்டுபோனது போலவே பிரிட்டிஷ் ஆட்சியாரும் நடாத்தி வந்திருப்பார்களாயின் சாதித்தலைவர்களென்னும் அகம்பாவமும் பெரியசாதிகளென்னும் பெருமெயும் அன்றே ஒழிந்து சமரசக்குடிகளாகி என்றென்றும் இராஜவிசுவாசத்தில் நிலைத்திருப்பார்கள்.

அங்ஙனமிராது அவர்கள் பொய்ச்சாதிக் கட்டுக்குப் போகுமிடங்களுக்கெல்லாம் வழிவிட்டுக்கொண்டுபோனபடியால் தங்கள் பொய்ச்சாதிக் கட்டுப்பாடுகள் யாவையும் மெய்ச்சாதிக் கட்டுப்பாடுகளென்றெண்ணி தங்களைத் தாங்களே உயர்த்திக் கொண்டதைப் போலவே இராஜரீகத்திலும் உயர்த்திக்கொள்ளவேண்டும் என்றெண்ணிய வஞ்சகர்கள் பெருக்கத்தால் பெருந் துக்கத்திற்கு ஆளாவதுடன் மற்றயப் பேதைக்குடிகளும் பஞ்சம், பெருவாரிக் காச்சல், பிளேக்கென்னும் நோய்களால் வாதைப்படவும் ஆளாகின்றார்கள். ஆதலின் இனியேனும் இத்தகைய ராஜதுரோக சிந்தனைகளை ஒழித்து இராஜவிசுவாசத்தில் நிலைத்து பிரிட்டிஷ் ஆட்சியைக்கொண்டே சுகச்சீர் பெறுவார்களென்று நம்புகிறோம்.

- 5:17; அக்டோபர் 4, 1911 -