உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/235-383

விக்கிமூலம் இலிருந்து

231. தென்னிந்திய விவசாயப் பண்ணை வேலைசெய்யும் கூலியாட்களின் கூலியும் கூலியாமோ

பண்ணைவேலைசெய்யும் ஆண் ஆட்களுக்கு சராசரி நாள் ஒன்றுக்கு முக்காலணா தேறும். பெண் ஆள்களுக்கோ அரை அணா தேறும். பதினாறு வயதிற்குட்பட்ட பையன்களுக்கோ காலணா தேறும். இதுவும் பணமாகக் காண்பார்களோ அதுவுமில்லை நெல்லாயின் ஆண் ஆளுக்கு மூன்றாழுக்கு, பெண் ஆளுக்கு இரண்டாழுக்கு, கேழ்வரகு அல்லது சோளமாயின் ஆண் ஆளுக்கு உழக்கு, பெண் ஆளுக்கு ஆழாக்கு, மற்றும் உப்புப் புளி மிளகாய்க்கு ஏதேனும் கேட்டாலோ அடடா உருசியுடன் கடித்துக் கொள்ள உங்களுக்குக் குழம்புகூட வேண்டுமோ என்பார்களாம். தாங்கள் கொடுக்குந் தானியம் போதவில்லையே பூமியில் நாளெல்லாம் எவ்வகையால் கஷ்டப்படுவோமென்றாலோ அடடா உங்கள் எஜமாட்டியண்டைப் போனால் ஏதேனுங் கொடுப்பாள் பெற்றுக்கொள்ளுங்கோள் என்பார்களாம், எஜமாட்டியண்டை போனாலோ அவ்வம்மையோ நாலுநாளையக் கூழ்பானையில் ஆற்றுநீரைக் கொட்டி சுரண்டி அக்காந்தலைக் கலையங்களில் வார்க்க அதை உப்பின்றி குடிக்கும் ஆற்றுச்சேற்று நீரென்றெண்ணி வயலில் ஊற்றிவிட்டு வயிறு காயக்காய வயல்வேலை செய்வது வழக்கமாம்.

அதனினும் மீறி எஜமானனை அடுத்து எங்கள் பசியாறக் கூலிகொடுத்தால் வேணபடி உழைப்போமென்றாலோ அடடா உங்கள் பாட்டன் கலியாணத்திற்கு எங்கள் பாட்டன் கொடுத்தக்கடன் ஐந்து ரூபா இன்னுஞ் சொல்லாகவில்லை, உன் அப்பனுக்கு என் அப்பன் கொடுத்த ஒருவராகன் கடன் இன்னும் சரிவரச் செல்லாகவில்லை, அப்படியிருக்க இன்னும் எந்த இழிவுக்குக் கொடுக்கச்சொல்லுகிறீர்கள் என்றவுடன் ஆள்கள் ஒடுங்கி வயலுக்குப் போய் உழைக்கவேண்டியதேயாம் அங்ஙனந் தங்களுக்குள்ள ஆயாசத்தாலும் மெலிவினாலும் வேலைக்குப் போகாமல் நின்றுவிட்டாலோ மணியத்தைக் கூப்பிடும், முநிஷிப்பைக் கூப்பிடும் என்று பயமுறுத்தி ஏவல் வாங்கி எலும்புத் தோலுமாக வதைத்துக் கொன்றுவருகின்றார்களாம். இத்தியாதி கொடூரங்களும் பெரிய பெரிய ஜமீன்களிடம் நடந்தேவருமாயின் மற்றுமுள்ள சிறிய ஜமீன்கள், மிட்டாதார்கள், மிராசுதார்கள், சுரோத்திரதாரர்களிடமுள்ளக் கூலியாட்கள் என்ன கஷ்டத்தை அநுபவித்து வருகின்றார்கள் என்பது அவர்களுள்ள நிற்பாக்கியமே போதுஞ்சான்றாம்.

இத்தகையப் பெருங் கஷ்டங்களை அநுபவித்து வரும் சில கூலியாட்கள் நம்பால் வந்து தாங்கள் யாவரும் அநுபவித்துவருங் கஷ்டநஷ்டங்கள் யாவற்றையும் விளக்கி சீர்மையில் ஏதோ சிலக் கூட்டத்தோர் கூடியிருக்கின்றார்களாம் அவர்கள் இந்தக் கூலியாட்களின் விஷயங்களையே நன்கு விசாரித்து இராஜாங்கத்தோருக்கு விளக்கி ஏழைகளுக்குக் கூலிகளை உயர்த்திக் காப்பாற்றிவருவதாகக் கேழ்விப்படுகிறோம். அக்கூட்டத்தோருட் சிலரை தென்னிந்தியாவுக்கு வரவழைத்து இந்த ஏழைப்பண்ணையாட்களின் கூலிகளை உயர்த்தி உயிர்பிச்சை அளிக்கும்படி செய்யவேண்டுமெனக் கேட்டார்கள்.

அத்தகையக் கடிதம் யாமெழுதி அக்கூட்டத்தோரை தருவிக்க வேண்டுமானால் நாலைந்து ஜமீன்தாரர்கள் கூலியாட்களும், நாலைந்து மிட்டாதார்கள் கூலியாட்களும், நாலைந்து மிராசுதார்கள் கூலியாட்களும் தனித்தனியாகக் கூடி தங்கள் கூலியின் விவரங்களை சரிவரக் கண்டெழுதி எல்லோர் கையெழுத்துமிட்டு அநுப்புவீர்களானால் அதை சீர்மையிலுள்ள சங்கத்திற்கெழுதி வரவழைக்கின்றோமென வாக்களித்து விட்டோம், அவர்களும் போயிருக்கின்றார்கள் மற்றும் ஏழைகளுக்கு உபகாரிகளாயுள்ள கனவான்கள் தாங்கள் வாசிக்குமிடங்களிலுள்ள ஏழைகளிடமுங் கையெழுத்துக்கள் வாங்கி அனுப்புவதுடன் அவரவர்கள் கூலிகளையுங் தெரிவிக்கும்படி வேண்டுகிறோம்.

- 5:17; அக்டோபர் 4, 1911 -