அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/236-383
232. இந்து ! இந்து !! இந்து !!!
என்போர் யார் என்னும் வினாவிற்கு ஒருவர் முகத்தை ஒருவர் உற்றுப்பார்ப்பதே அதற்கு விடையன்றி வேறு மறுமொழி ஒன்றும் கிடையாவாம். இவற்றை நெடுநாள் அநுபவத்திற் கண்டுவந்த ஆனரேபில் கிருஷ்ணசாமி ஐயரவர்களும் இந்து என்னும் மொழிக்குத் தக்க பொருளும் கிடையாதென்று உள்ளதைத் தெள்ளறக் கூறிவிட்டார்.
அவரது யதார்த்தமொழி அறியா சிலர் (Hindu) என்னும் ஆங்கில மொழியிலுள்ள எச் என்னும் அட்சரம், சூரியனைக் குறிப்பிப்பதென்றும், (indu) என்பது சந்திரனையும் நட்சத்திரங்களையும் குறிப்பிப்பதென்றும் பொருள் கூறியுள்ளது விந்தையிலும் மிக்க விந்தையாகவே விளங்குகின்றது. எவ்வகையிலென்பரேல், (Hindu) என்னும் ஆங்கில மொழியும், H என்னும் ஆங்கில அட்சரமும் பிரிட்டீஷ் ஆட்சியார் வந்து தோன்றிய பின்னரே தோன்றிய மொழியே அன்றி முன்னர் அன்றாம். அவ்வகை H என்னும் ஆங்கில அட்சரத்தை சூரியனெனப் பொருட்கூறுவதாயின், மகமதியர் துரைத்தன காலத்தில் இந்து லோகா இந்து லோகாவெனக் கூறிவந்த மொழிக்கு எப்பொருட் கூறுவரோ அறியேம்! புத்தரென்னும் ஓர் மநுபுத்திரன் தோன்றியிருந்தார். அவரது போதனையைப் பின்பற்றியவர்கள் பெளத்தர்களென்றும், கிறிஸ்து என்னும் ஓர் மனுபுத்திரன் தோன்றியிருந்தார் அவரது போதனையைப் பின்பற்றியவர்கள் கிறிஸ்த்தவர்களென்றும், மகமதென்னும் ஓர் மனுபுத்திரன் தோன்றியிருந்தார், அவரது போதனையைப் பின்பற்றியவர்கள் முகமதியர்களென்றும் பூர்வந்தொட்டு நாளது வரையில் வழங்கி வருகின்றார்கள். அதுபோல் இவ்விந்து என்னும் மநுபுத்திரன் எவனேனும் இருந்ததுண்டா அவனால் போதிக்கப்பட்ட போதகங்களேனு முண்டா, யாதொன்றுங் கிடையாது. இந்து மதமென்றால் என்னை எனத்தட்டிக் கேட்போர்களுக்கு அதை மறுத்துத் துள்ளித் துடித்து ஆரியமதத்தோ ரென்பார்கள். ஆரியனென்றால் யார், அவன் எங்குதித்தவன், அவனால் போதித்த நூலெவை. ஆரியனென்பதற்குப் பொருள் திவாகரத்திலும் நிகண்டிலும் மிலேச்சரென்று கூறியிருக்கின்றதே, அவர்கள் தான் நீங்களோ வென்றால் அவற்றிற்கு மறுமொழி கூறாது, நாங்கள் சைவம் வைணவமென்னும் உள்மதத்தோரென்பார்கள். அங்ஙனம் சைவனென்றேனும் வைணவனென்றேனும் ஓர் மனிதன் தோன்றியிருந்தது உண்டாவென்றால் எங்களுடையது அனாதிமதமென்பார்கள். அத்தகைய அனாதி மதத்திற்கு சைவமென்றும் வைணவமென்றும் பெயர்கள் தோன்றியக் காரணம் என்னையெனில், அவற்றை விடுத்து வேதாந்தமதம், விசிட்டாத்துவித மதமென வேறுவேறு மாறுமதங்களைக் கூறி வினாவுவோரை மயக்குறச் செய்வதுடன் தாங்களும் மயக்குற்று திகைத்து நிற்பர்.
இத்தியாதி திகைப்பிற்குக் காரணம், இந்து மதமென்னும் ஆகாயக்கோட்டையும் அந்தரப் புட்பமுமேயாம். அதாவது ஆகாயத்திற் கோட்டையபுள தென்பதுங் கற்பனை, ஆகாயத்திற் புட்பம் பூர்த்துள தென்பதுங் கற்பனையென முகிவதுபோல் இந்து வென்னும் மொழியும், இந்துவென்னும் மதமும் மொழிமாற்று கற்பனாமதங்களைத்தழுவியுற்றலால், வினாவுக்கு விடையற்று மயங்குகின்றது.
இந்து மொழியின் முதல் மொழி ஏதெனில், புத்தபிரான் பஞ்சவிந்திரியங்களை வென்று இந்திரரென்னும் பெயர்பெற்றதும், அவ்விந்திரரை பூசித்துவந்த இத்தேசக் குடிகளை இந்தியர்களென்று வழங்கிவந்ததும், இந்தியர்க ளென்னுங் குடிகள் வாசஞ்செய்துவந்த தேசத்தை, இந்தியமென்றும், இந்தியாவென்றும் வழங்கிவந்தார்கள். இத்தகைய இந்திரரென்றும், இந்தியரென்றும், இந்தியாவென்றும் வழங்கிவந்த மொழியானது மகமதியா துரைத்தனத்தில் இந்து, இந்துவென குறுக்கல் விகாரப்பட்டு மொழிமயங்கியவை. பொய்வேதத்தோர்களுக்கும், பொய் வேதாந்திகளுக்கும் பொய்க்குருக்களுக்கும், புத்தராம் இந்திரரென்னும் பெயர் மாறி, இந்து இந்துவென மொழிமயங்கி நிற்பது மேலெனக் கருதித் தங்களை இந்துக்கள், இந்துமதத்தோரெனச் சொல்லும்படி ஆரம்பித்துக்கொண்டார்கள். தற்காலமுள்ள விசாரிணைப்புருஷர்கள் அவற்றை ஊன்றி கேட்க ஆரம்பித்துக்கொண்டதின் பேரில் நிலைகெட்டு உடைந்த மூங்கிற் கொம்புக்கு முருங்கைக் கொம்பை முட்டுக்கொடுப்பதுபோல் தங்கள் கற்பனை மதங்களுக்கும், பொருளற்ற கற்பனை மொழிகளுக்கும், சொற்பனா உதாரணங் கூறி திருப்தி செய்யப் பார்க்கின்றார்கள். அத்தகையத் திருப்தியை கல்லாரேற்பாரன்றி கற்றோர் ஏற்காரென்பது துணிபு.
- 5:16: அக்டோபர் 11, 1911 -