அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/237-383

விக்கிமூலம் இலிருந்து

233. மிஸ்டர் பிப்பின் சந்திரபால்

இவரோர் வடநாட்டுப் பிரபுவின் பிள்ளையும் நன்கு வாசித்தவருமேயாம். அங்ஙனம் வாசித்தும் இராஜநீதி இத்தகையது குடிகளின் நிலை இத்தகையதென்று உணராது சீர்திருத்தத்தைநோக்கி வெளிதோன்றியது மிக்க பரிதாபமே.

அங்ஙனந் தோன்றியவர் “சுயராஜ் “ என்னுமோர் பத்திரிகையைப் பரவச்செய்தது என்ன கருத்தோ விளங்கவில்லை. பத்திரிகையைப் பரவச்செய்தவர் இராஜதுரோகச் சிந்தைக்குள்ளாயது ஏது கருத்தோ அதுவும் விளங்கவில்லை. அதாவது கற்றவரென்று மற்றவர்களால் நன்கு மதிக்கத் தோன்றியவர் கல்லாரென்னும் செயலே பெற்றுள்ளார். காரணம் ‘சுயராஜ்’ என்னும் பத்திரிகையைப் பிரசுரித்தவர், எத் தேசத்தை சுயராஜ்யமெனக் குறிப்பிட்டுள்ளார். சுயராஜ்யம் என்பதே நிலையற்ற தேசமாயினும், சுயசாதி இன்னதென்பதையேனுங் குறிப்பிட்டுள்ளரா, அதுவுங்கிடையாது. சுயபாஷை யாது என்பதையேனுங் குறிப்பிட்டுள்ளாரா, அதுவுங் கிடையாது. சுயமதம் ஈதென்பதையேனுங் குறிப்பிட்டுள்ளாரா, அதுவும் கிடையாது. பலதேசம், பலசாதி, பலபாஷை, பலமதமென ரூபிக்கும்பாங்குற்று வெறுமனே சுயராஜ்யமென்னு வீண்டம்ப மடித்ததுடன் நீதிநெறியடைந்த ராஜாங்கத்தையும் எதிர்த்து எழுதி தண்டனைக்குள்ளாயது மிக்க விசனமேயாம்.

இவரது சீர்திருத்தச் செயல்களானது இராஜாங்க சீர்திருத்தங்களைப் பற்றியும் குடிகளின் சீர்திருத்தங்களைப் பற்றியும், இராஜாங்கத்தோருடன் ஒத்துழைத்து அவர்களன்பையும் ஆறுதலையும் பெற்றுக் கொள்ளுவாராயின் சகல சுகமும் பெற்று ஆனந்த வாழ்விலிருக்கலாமன்றோ. அத்தகைய சுகவாழ்க்கையையே சுயராஜ்யமென்று எண்ணப்போகாதோ.

இவருக்குள் சுயராஜ்யமென்றால் பிரிட்டிஷ் ஆட்சியோர் யாவரையும் அவர்கள் தேசத்திற்கு ஓட்டிவிட்டு தாங்களே ராட்சியபாரந் தாங்கிக்கொள்ள வேண்டுமென்று எண்ணினரோ. அத்தகைய எண்ணம் எண்ணெய்க்காரன் எண்ணியக்கதையை ஒவ்வுமேயன்றி பண்ணைக்காரன் முயற்சிக்கதைக்கு ஒவ்வாவாம். இவரது தேசம் எதுவென்பதையும் தேசமக்களின் ஒற்றுமெய்க் கேட்டையும் தேசமக்களுக்குள்ள வல்லபக் குறைவையும், விவேகக்குறைவையும், வித்தியாக் குறைவையும் உற்று நோக்காது, வித்தையும், புத்தியும், ஈகையும், வல்லபமும் நிறைந்த பிரிட்டிஷ் ஆட்சியோரை அகற்றிவிட்டு தாங்களே சுயராஜ்யம் செய்யலாமென்று எண்ணித் துணிந்தது தங்கள் வல்லபத்தையும் எதிரியின் வல்லபத்தையும் உற்றாராயாத எண்ணாத் துணிபே இழுக்கிற்குள்ளாக்கிவிட்டது.

பிரிட்டிஷ் ஆட்சியின் ஆதிபத்தியத்தோர் தங்களது துவஜத்தைக் கரத்திலேந்தி வங்காளத்தில் விசிறுவார்களாயின், பாம்பே, சென்னை முதலிய இடங்கள் யாவையும் ஆட்டிவைக்கக்கூடிய வல்லபமிகுத்தோர் முன்னிலையில் அண்டை வீட்டோனை அடக்கியாள வல்லபமற்றோர் எழுந்து சுயராஜ்யங் கூறுவதும், சோம்பேறிகள் கூட்டங்கூடுவதுமாய வீண் புரளிக்கு பிரிட்டிஷ் சிம்மங்கள் அஞ்சுமோ. எத்தனையோ புரளிக்காரர் கூட்டங்களையும், எத்தனையோ வன்னெஞ்சர் கூட்டங்களையும் அங்கங்கு அடக்கி அவர்களையுஞ் சீர்திருத்தி விவேகம் பெறுவார்களாயின் தங்கள் அரசவங்கத்திலும் ஒருவராகச் சேர்த்து கனஞ் செய்தேவருகின்றார்கள்.

அத்தகையோர் கனத்தையும் வித்தியாவிருத்தி கல்வி விருத்தியின் செயலையுங் கொண்டே முன்வந்துள்ளவர்கள் அந்நோருக்கு நன்றியறிந்த வந்தனஞ்செய்ய வேண்டியதை விடுத்து இராஜதுரோகசிந்தையைப் பெருக்குவதினால் செய் நன்றியை மறந்து தீங்குபுரிவோரை தீங்கே அழிப்பது திண்ணமாதலின் தான் செய்த தீவினையின் பயனைத் தானே அநுபவிக்கனேர்ந்து விட்டது. விவேகக் குறைவால் தண்டனையுற்றோர் தனது தீவினையின் பயனையுணர்ந்து இனி அத்தகைய ராஜதுரோக சிந்தனைத் தனக்குள் எழவிடாமல் தடுப்பதுடன் தன்னை அடுத்தவர்களுக்கும் அத்தகைய ராஜதுரோக சிந்தனையில்லாமல் அகற்றும் நன்முயற்சியில் இருப்பார்களென்று நம்புகிறோம்.

ஒவ்வோர் குடிகளும் இராஜவிசுவாசத்தில் நிலைத்து வித்தை, புத்தி ஈகை சன்மார்க்கத்தைப் பெருக்கிவருவார்களாயின் இராஜவிசுவாசத்தின் பயனே சுயராஜ்ய சுகத்தை விளக்கும். அங்ஙனமிராது பேராசையின் பெருக்கத்தால் இராஜதுரோகத்திற்குள்ளாகி இராகத் துவேஷ மோகத்தால் உள்ள சீருங்கெட்டு சீரழியவேண்டியதேயாம்.

- 5:19; அக்டோபர் 16, 1911 -