அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/240-383
236. இலஞ்சமென்னும் பரிதானம் வாங்குதல் நீதிபக்தியாளரிடமுண்டா அன்றேல் சாமிபக்தியாளரிடமுண்டா
நீதிபக்தியாளனோ மறந்தும் இலஞ்சம் வாங்கமாட்டான். காரணமோவென்னில் நீதியின் பேரில் பசிதாகமுடையவனாகவும், நீதியையே பின்பற்றி நடப்பவனாகவும் உள்ளபடிப்பால் தான் சம்பாதிக்கக்கூடிய பொருளே தனக்குப் போதுமென்னுந் திருப்தியிலுள்ள வனாகிப் பேராசையை அகற்றி வாழ்வனாதலின் ஏழைகளை வஞ்சித்தும் துன்பப்படுத்தியும் பரிதானமென்னும் லஞ்சம் வாங்கிப் பாபமூட்டையைக் கட்டிக் கொள்ளமாட்டான்.
அங்ஙனம் அவர்கள் செய்துவரும் நன்றியை மறவாத சிலர் கேட்காமலே பரிதானஞ்செய்யினும் அவற்றை ஏழைகளுக்கு தானஞ்செய்துவிடுவார்களன்றி தங்கள் சுய உபயோகத்திற்கு வைக்கமாட்டார்கள். நீதி பக்தியாளராதலின் ஏழைகளுக்குத் தாங்களே உதவிசெய்து ஆதரிக்க வேண்டுமென்னும் ஈகையில் நின்று துற்கன்மங்களை அகற்றி நற்கன்மங்களில் நிற்பவர்களாதலின் ஏழைகளை வஞ்சித்தும், துன்பப்படுத்தியும், பயமுறுத்தியும் பரிதானம் வாங்கித் தனது பெண்சாதி பிள்ளைகளை போஷிக்கமாட்டார்கள். ஏனென்பீரேல், ஏழைகள் மனம் வருந்தியுந் துக்கித்தும் அளித்துவரும் இலஞ்சமே வாழைப்பழத்தில் ஊசி நுழைவதுபோல் துற்கன்மம் நுழைந்து பலவகைத் துன்பத்துக்காளாக்கி பழய நீரை புதுவெள்ளம் அடித்துப்போவதுபோல் தான் சம்பாதித்தப் பொருளையுந் தன்னையறியாது கொண்டுபோவதுடன் மாளாதுக்கத்தில் ஆழ்த்திவிடுமென்று அறிந்துள்ளபடியினாலேயாம்.
நீதிபக்தியுள்ளவன் சருவ சீவர்களையும் தன்னுயிர்போல் எண்ணுவோனாதலின் மநுமக்களைத் தன்னவராக மென்மேலும் பாவித்து தன்னாற் கூடிய உதவிபுரிந்து ஈடேற்றுவான். தன்னால் உதவிபுரியப் பொருளற்றிருப்பனேல் சகலருக்கும் நல்லவனாக நடந்துக்கொள்ளுவான். ஏழையாயினும் சீலப்பொருளே மேலைப்பொருளென்றெண்ணி எக்காலும் ஆனந்த சுகவாழ்க்கையிலிருப்பான்.
சாமிபக்தியாளரோ தாங்கள் செய்யுங் குற்றங்களுக்கு ஆட்டுக்கடா, கோழி, பணம், கண்ணைப்போல் வெள்ளியால் பொன்னினால் செய்த கண், காலைப்போல் வெள்ளியால் பொன்னினால் செய்தக்கால், உண்டிபணம் முதலியதைத் தாங்கள் தொழூவுஞ் சாமிகளுக்குக் கொண்டுபோய் இலஞ்சங் கொடுத்துவிட்டால் சகல குற்றங்களும் நீங்கிப்போமென்பது நம்பிக்கை. அத்தகைய நம்பிக்கைகளுக்கு மதக்கடை பரப்பி சீவிப்போர் பலசரக்குக் கடைக்காரர்கள் எங்கள் சரக்கே முதல் தர சரக்கு மற்ற சரக்கெல்லாம் மட்டச்சரக்கென்பதுபோல் எங்கள்சாமி பெரியசாமி, எங்கள்சாமியே நல்லசாமி, சகல ராஜாக்களையும் ஆளுகிற சாமியென்னும் பெரும் பொய்யைச்சொல்லி சாமிக்கென லஞ்சம் வாங்கி சீவிக்கும் மதக்கடைகள் பலவிடமும் பெருகிவிட்டபடியால் சாமிகளே ஆடு மாடுகளையுங் கோழிகளையும், வெள்ளி உருக்களையம், பொன்னுருக்களையும், உண்டிபெட்டி பணங்களையும் இலஞ்சம் வாங்கிக்கொண்டு வியாதிகளை நீக்குகிறதும், ஆபத்துகளைக் கார்க்கிறதுமாயிருக்கும்போது மநுக்களாகிய நாம் ஏழைமக்களிடம் இலஞ்சம் வாங்கிக்கொண்டு உத்தியோகங் கொடுப்பதினாலும் இலஞ்சம் வாங்கிக்கொண்டு முகபரிட்சை செய்விப்பதனாலும் யாது கெடுதி உண்டாமென்னுந் தைரியத்தினால் மக்களுக்கு மக்கள் உபகாரச்செயலென்பதற்று கூட்டுக்குலஞ்சம், பாட்டுக்கு லஞ்சம், ஏட்டுக்கு லஞ்சமென எடுக்குஞ் செயல்களுக்கெல்லாம் கொடுக்கல் இலஞ்சமென்றே ஏற்படுத்திக்கொண்டு ஏழைகளை வாதித்து வருகின்றார்கள். இத்தகைய வாதைகளுக்கெல்லாங் காரணம் மதக்கடைகளுக்குள் வைத்திருக்கும் சிலசாமிகளும் பொய்க்குருக்களுமே காரணமென்னப்படும். சாமிகள் மனுக்களுக்கு உபகாரஞ்செய்வதுபோக மநுக்களே சாமிகளுக்கு உபகாரமென்னும் இலஞ்சமீவதாயின் ஏழைகளெல்லோருங் கனவான்களுக்கு லஞ்சங்கொடுப்பதால் யாது குறையுண்டாமென்னும் உறுதியால் கொடு கொடு என்பதும், வாங்கு வாங்கென்பதும் சாமி பக்தியாளரிடமே உண்டென்பது உறுதியாயதால் தேசத்தில் லஞ்சமுண்டாயதற்குக் காரணம் சாமியும், சாமிபக்திகளுமேயாம்.
- 5:24: நவம்ப ர் 22, 1911 -