அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/241-383
237. ஹானரேபில் ஜஸ்டிஸ் சங்கர நாயரும் இந்து யூனிவர்சிட்டியும்
இந்து யூனிவர்சிட்டியின் ஏற்பாட்டினால் சிலப் பிரிவினைகளை உண்டுசெய்யும் என்று ஜஸ்டிஸ் சங்கரநாயரவர்கள் கூறிய விஷயத்தை சிலர் மறுத்து அவற்றைப் பிசகென்று கூறுவது தப்பரையேயாம். காரணம் கருணைதங்கிய பிரிட்டிஷ் இராஜாங்கத்தோர் நடத்திவரும் யூனிவர்சிட்டி ஒன்றிருக்கும்போது அவற்றிற்கு மாறாக இந்து யூனிவர்சிட்டி என ஒன்றேற்பட்டதே பிரிவினைக்கு ஆதாரமென்னப்படும். அதற்குப் பகரமாகவே மகமதியர் யூனிவர்சிட்டி தோன்றியதே போதுஞ்சான்றாம்.
இனி கிறிஸ்ட்டியன் யூனிவர்சிட்டி, புட்டிஸ்ட் யூனிவர்சிட்டி தோன்றவேண்டியதுதான் குறை. இங்ஙனமிருக்க இந்து யூனிவர்சிட்டியால் பிரிவினை உண்டாகாதென்று கூறுவது சமயயுக்த்தமாகப் பூசிமொழுவுதலேயன்றி யதார்த்த மொழிகளாகமாட்டா, இந்துவென்னும் பெயர் தோன்றியபோதே அதனுள் சாதி வித்தியாசமும், மதவித்தியாசமும் இருந்தே தீரவேண்டுமென்பது பிரத்தியட்ச அனுபவமாயிருக்க இந்து யூனிவர்சிட்டியில் சாதிபேதங் கிடையாதென்பது விந்தைமொழியாம். ஈதன்றி பஞ்சாபி தேசத்திலுள்ளவர்களில் சிலர் வருணாசிரம தன்மம் இருத்தல் வேண்டுமென்று கூறியிருப்பதும் கனந்தங்கிய ஆனிபீசென்டம்மாள் சாதிபேதம் இருந்தே தீரவேண்டுமென்று கூறியுள்ளதும் ஜஸ்டிஸ் சங்கரநாயரவர்கள் அறியாததல்லவே. சுதேசமித்திரன் பத்திராதிபர் சீனதேசத்தோர் சீர்திருத்தம் யாவும் சரியேயாயினும் அவர்களது அடிமைகளையும், பேடிகளையும் வீட்டு வேலைக்காரர்களாக வைத்துக் கொள்ளுகின்றார்கள். அவ்வகை அடிமைகளை வீட்டுவேலைக்காரர்களாக வைத்துக்கொள்ளும் வரையில் அவர்களது சீர்திருத்தம் பயன்படாதென்று கூறிய மொழி மனிதனை மனிதனாகப் பாவிக்காத சாதி வித்தியாச மொழியென்பது யாவருக்குத் தெரியாததோ. சின்னசாதி பெரியசாதி என்னும் மூட்டையை வலுவாகக் கட்டிக்கொண்டுள்ள பத்திராதிபரும் ஜஸ்டிஸ் சங்கரநாயரவர்கள் மொழிக்கு மறுப்புக் கூறப்போமோ இல்லை. சகல சாதிகளுக்கும் நாங்களே பெரியசாதிகளென்று கூறித்திரியும் சாதிகர்வமும் சகல மதங்களுக்கும் எங்கள் மதமே பெரியமதமெனக் கூறித்திரியும் மதகர்வமுமே எதேச்சையில் இராஜாங்கத்தையே எதிர்க்கும் இராஜத்துரோக கர்வத்தை உண்டு செய்துவருவது அநுபவக்காட்சியாயிருக்க அதை உணராது ஜஸ்டிஸ் சங்கரநாயரை வெறுப்பது அவலமேயாம். “யதார்த்தவாதி வெகுஜனவிரோதி” எனும் பழமொழிக்கிணங்க சாதிவித்தியாசங் கூடாதென்னும் சீர்திருத்தக்காரர் சொற்பமும் சாதிவித்தியாசம் இருந்தே தீர வேண்டுமென்போர் கூட்டம் பெருகியும் இருக்கின்ற படியால் அவர் கூறியுள்ள யதார்த்த மொழி பெருங்கூட்டத்தோருக்கு விரோதமாகவே விளங்கும். நீதி நெறி வாய்மெயும் இராஜவிசுவாசமும் உள்ளக் குடிகள் யாவருக்கும் அவர் கூறியுள்ள மொழிகள் யாவும் நீதி மொழிகளென்றும், யதார்த்த மொழிகளென்றும் சீர்திருத்தங்களுக்கும் ஒற்றுமெய்க்குமாய ஏதுமொழிகளென்றே விளங்கும். கனந்தங்கிய ஆனிபீசென்ட் அம்மைக்கு இத்தேசத்து சாதித்தலைவர்களின் மேம்பாடுகளும், தங்களைத் தாங்களே உயர்த்திக் கொள்ளும் மாறுபாடுகளுந் தெரியாது தனது நல்லெண்ணத்துடன் ஜஸ்டிஸ் சங்கரநாயரைத் தங்களுடன் சேர்ந்துழைக்கும்படிக் கேட்டுக்கொண்ட சங்கதிக்கு சங்கரநாயர் தனக்குள்ள நல்லெண்ணத்தால் பின்னிட்டு நேரிடுங் குறைகளை முன்னிட்டே தெள்ளற விளங்குந் தேசோபகாரியாக விளங்காநின்றார்.
இத்தகைய தேசோபகாரியும், நடுநிலையவாதியும், களங்கமற்ற கியாதியுமானோரை பத்திரிகைகளில் வீண்குறைகூறுவது விருதாவேயாம்.
புட்டிஸ்ட் யூனிவர்சிட்டி என்பதற்கு ஆதார மூலபுருஷனுண்டு. கிறிஸ்டியன் யூனிவர்சிட்டி என்பதற்கு ஆதார மூலபுருஷனுண்டு. மகமதிய யூனிவர்சிட்டி என்பதற்கு ஆதார மூலபுருஷனுண்டு. இந்துவென்னும் யூனிவர்சிட்டிக்கு ஓர் கால் அந்தரத்தில் நின்று அல்லலடைந்து போமென்னும் அச்சங்கொண்டே அதில் சேராது அம்மனுக்கு அத்தியந்த கடிதம் எழுதிவிட்டார் போலும். காரணம் இந்துவென்னும் மொழிக்கு யதார்த்தப் பொருளற்றிருப்பினும் இந்துவென்பதை ஓர் பேழையாக்கி அதிலடங்கியுள்ளது சாதிவித்தியாச மூட்டைகளும், மதவித்தியாச மூட்டைகளென்றுங் கருதியேயாம்.
- 5:24; நவம்பர் 22, 1911 -