அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/250-383
246. இந்தியக் கூலியாட்களின் மீது இருவகையோருக்கும் இதக்கமில்லை போலும்
நமது கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தோர் தன்னவரன்னியர் என்னும் பட்சபாதமற்றவர்களாயினும் சாதிபேதமற்ற எழியக் குடிகளின்மீது இதக்கத்தைக் காணோம். மனுக்களை மனுக்களாகக் பாவிக்காத சாதித்தலைவர்களோ, பூர்வக்குடிகளைத் தாழ்ந்த சாதிகளெனக் கூறிப் பல வகையாலும் நசித்துப் பாழ்படுத்திவருவதும் போதாது அன்னிய தேசங்களுக்குச் சென்று சுகம்பெறுவதையுங் கெடுக்க ஆரம்பித்துக்கொண்டார்கள்.
அதாவது கிராமங்களில் வசிக்கும் சாதிபேதமற்ற ஏழைக்குடிகள் சாதிபேதமுள்ளவர்களது கொடூரச்செயல்களை சயிக்கமுடியாது அன்னிய தேசங்களில் ஒன்றாகும் நெட்டாலென்னும் சவுத்தாபிரிக்காவுக்குச் சென்று தகுந்த சம்பாத்தியத்துடனும் சுகச்சீருடனும் சென்னை வந்து சேர்ந்தவர்களைக் கண்டுள்ளோம். அவ்வகை சேர்ந்தவர்கள் பூமிகளை வாங்கிக் கொண்டும் தக்கவீடுகளைக் கட்டிக்கொண்டும் சுகமாகவே இருக்கின்றார்கள். அவர்களது சுகச்சீரைக்கண்டு சயிக்காத சாதித்தலைவர்கள், ஆ ஆ நம்மால் தாழ்த்தப்பட்ட சாதியோர்கள் அன்னியதேசங்களுக்குச் சென்று பணங்களை சம்பாதித்துக் கொண்டுவந்து நமக்கு சமமாக பூமிகளை வாங்கவும், வீடுகளைக் கட்டிக் கொண்டும் சுகிக்க ஆரம்பித்துவிடுகின்றபடியால் நமது பண்ணை பூமிகளை சொற்பக்கூலிகளைக் கொண்டு உழுது பாடுபடுவதற்கு ஏது இல்லாமற் போய்விடுகிறதென்றும் வஞ்சினத்தாலும், பொறாமெயினாலும் ஆடுகள் நனையுதெனக் புலிகள் குந்தியழுவது போல அன்னியதேசங்களுக்குப் போகும் கூலியாட்கள் யாவரும் மெத்தக் கஷ்டப்படுகின்றார்கள் இந்தியாவிலிருந்து அவர்களை அநுப்பப்படாதென்று பத்திரிகைகளின் வாயலாகவும், விண்ணப்பங்களின் மூலமாகவும் வீண் படாடம்பமடித்ததை நமது கருணைதங்கிய ராஜாங்கத்தார் விசாரிணைக்குக் கொண்டுவராமலும் அன்னியதேசஞ் சென்று வந்திருக்கும் எழியக்குடிகளெல்லவரையும் நேரில் தருவித்து சுகாசுகங்களை விசாரியாமலும் இத்தேசத்து சாதித்தலைவர்களிடம் பண்ணைவேலை செய்திருந்த காலத்தில் இவ்வேழைக் குடிகள் என்ன சீர்கேட்டை அடைந்திருந்தார்களென்பதையும் அன்னியதேசங்களுக்குச் சென்று இவ்விடம் வந்திருப்பவர்கள் என்ன சுகச்சீரிலிருக்கின்றார்களென்பதையும் கண்டறியாமல் பெரியசாதிகளென்போர் வார்த்தைகளையே பெரிதென்றேற்றுக் கொண்டு சாதிபேதமற்ற ஏழைக்குடிகள் அன்னியதேசங்களுக்குச் சென்று மெத்த நஷ்டப்படுகின்றார்கள் என்று எண்ணி நெட்டாலுக்குப் போகவிடாமல் தடுத்து விட்டார்கள். அவ்வகை, தடுக்கப்பட்டதினால் சாதிபேதமற்ற ஏழைக்குடிகள் சீர்கேடடையவும், சாதித்தலைவர்கள் சீர்பெறுவதுமேயாம். காரணமோவென்னில், சாதிபேதமற்ற ஏழைக்குடிகளுக்கு அம்மட்டர்களை சவரஞ்செய்யவிடாமலும், வண்ணார்களை வஸ்திரமெடுக்கவிடாமலும், சுத்த நீரை மொண்டுகுடிக்க விடாமலும் நாளொன்றுக்கு முக்காலணா கூலியேனும் சரிவரக் கொடுக்காமலும் கொல்லாமற்கொன்றுவரும் கருணையற்ற சாதித்தலைவர்கள் ஒன்றுகூடிக் கொண்டு மிக்கக் கருணையுள்ளவர்கள்போல் அபிநயங்காட்டி தங்கடங்கள் சாதியோர்கள் சுயப்பிரயோசனங்களுக்காக அன்னியதேசங்களுக்குஞ் சென்று சுகச்சீர் பெற்றுவரும் ஏழைக்குடிகளை நெட்டாலுக்குப் போகவிடாமல் தடுத்துவிட்டார்கள்.
அவ்வொரு தேசம் தடைப்பட்டவுடன் மற்றுமுள்ள தேசங்களுக்குச் சென்று சுகச்சீர் பெற்றுவரும் ஏழைக் குடிகளை அங்கும் செல்லவிடாமல் தடுக்கத்தக்க முயற்சிகளை செய்துவருகின்றார்கள், அவர்களது முயற்சிகள் யாவும் சாதிபேதமுள்ளக் குடிகள் நாளுக்குநாள் சுகச்சீர்பெறவும், சாதிபேதமில்லா ஏழைக்குடிகள் நாளுக்குநாள் நசிந்து பாழடைவதற்கேயாம். சாதிபேதமில்லாத ஏழை மநுக்களை மநுக்களாக பாவிக்காது சுத்தநீரை மொண்டு குடிக்கவிடாத கருணையற்றவர்கள் நெட்டாலுக்குச் சென்றுள்ள சாதிபேதமில்லா ஏழைக்குடிகள் மெத்தக் கஷ்டப்படுகின்றார்களென்றும், சாதிபேதமுள்ள கூட்டத்தோர் அவர்களுக்காக மிக்கப் பரிந்து பாடுபடுகின்றார்களென்றுங் கூறுவதாயின் இந்திய தேயத்திலுள்ள நீதிமான்களாம் மேன்மக்களும், சாதிபேதமுள்ளார் படாடம்பங்களையும், சாதிபேதமில்லார் கஷ்ட நஷ்டங்களையும் நெடுநாளாய் அநுபவத்திற் கண்டுவரும் ஆங்கில துரைமக்களும் நம்புவார்களோ, ஒருக்காலும் நம்பமாட்டார்கள்.
சீவகாருண்யமென்பதே கனவிலும் இல்லாமல் மனிதவகுப்போரை மனிதவகுப்பாக பாவிக்காதவர்களெல்லவரும் ஒன்று கூடிக்கொண்டு ஏழைகளுக்கெனப் பரிந்து பாடுபடுகின்றார்களென்று அவர்களைப் பின்பற்றுவது ஆடு கசாயிக்காரனை நம்புவதற்கொக்கும். ஆதலின் நமது கருணை மிகுத்த ராஜாங்கத்தோர் ஏழைக்குடிகள் சாதிபேதமுள்ளோர்பால் ஏதேது துன்பங்களை அநுபவித்துவருகின்றார்களென்பதை விசாரித்தும், நேரிற் கண்டும், அவர்களை நெட்டடாலுக்குப் போகவிடாமல் தடுத்திருக்குந் தடைகளைவிடுவித்து அவர்கள் மனம் நாடியவிடங்களுக்குச் சென்று சுகச்சீர் பெறும்படி செய்விக்க வேண்டுகிறோம்.
- 5:40; மார்ச் 13, 1912 -