அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/251-383
247. ஏழைக்குடிகளின் இடுக்கங்களைத் தீர்க்கும் ஓர் சட்டசபை மெம்பர் இல்லையே
தற்காலம் நமது சென்னை ராஜதானியில் எக்ஸிகியூட்டிவ் மெம்பர்களென்னும் இராஜாங்கக் கூட்டத்தோர் நீங்கலாக, லெஜிஸ்லேட்டிவ் மெம்பர்களென்னுங் குடிகளின் ஆதரிணை சட்டசபைக் கூட்டத்தோர்களை அதிகமாக்கி அவரவர்களைச்சார்ந்த காரியங்களை ராஜாங்கத்தோர் முன்பு கொண்டுவந்து வேண்டிய வாதுகளிட்டு தங்கள் தங்கள் காரியங்களைப் பார்த்துக் கொள்ளுகிறார்களன்றி ஏழைக்குடிகளின் கஷ்டங்களை அறிந்து பேசுவோரில்லை. இத்தகைய சட்டசபையோர் பெரும்பாலும் தேசச்சீரையும் குடிகளின் சுகத்தையுங்கண்டு சீர்திருத்த முயல்வது யதார்த்தமாயின் கிராமக் குடிகளின் சீரையும் பண்ணை பூமிகளின் விருத்தியையுமே முக்கியமாகக் கவனித்தல் வேண்டும். பண்ணை பூமிகள் திருந்தி விவசாயம் செழிக்குமாயின் தானியவிருத்திப்பெற்று நகரக்குடிகளும் நாட்டுக் குடிகளும் சுகச்சீர் பெறுவார்கள். குடிகள் சுகச்சீரில் இருப்பார்களாயின் அரசும் ஆனந்த நிலையினிற்கும் இதுவே சட்ட சீர்திருத்த சபையார் செய்யவேண்டிய முதல் சீர்திருத்தங்களாகும்.
இத்தகைய தேசசிறப்பையுங் குடிகளின் சிறப்பையுங் கண்ணோக்காது அந்த கல்விசாலைப் பணங்களை நிறுத்திவிடல்வேண்டும். இந்த கல்விசாலைப் பணங்களைக் குறைத்துவிடல் வேண்டுமென்னும் வீண்சட்டங்களை நோக்குதலால் யாது பயன். சாதாரணமாக நிறைவேறிவரும் கலாசாலை விருத்திகளைக் கெடுப்பதுவும் ஓர் சீர்திருத்தமாமோ.
இவைகள் தானோ குடிகளை சீர்திருத்துமோர் கூட்டம், இல்லவே. இத்தேசத்து ஏழைப் பூர்வக்குடிகள் நூதனமாகக் குடியேறியுள்ள சாதி பேதமுள்ளக் கூட்டத்தோர்களால் சுத்தநீரை மொண்டு குடிக்கவிடாதப் பொறாமெய்ச் செயல்களைக் கண்ட சிலர் ஏழைக் குடிகளுக்கென்று பிரத்தியேக கிணறுகள் வெட்டுவதற்காக விண்ணப்பங்கள் அனுப்பியுள்ளதும் பத்திரிகைகளின் கூச்சலால் எங்கும் பரவியிருப்பதும் இச்சட்டசபையோர்களுக்குத் தெரியாததோ. ஏழைக்குடிகளை சுத்தநீரை மொண்டு குடிக்கவிடாத சீவகாருண்யம் அற்றவர்களால் இத்தேசம் சீர்கெடுமா சீர்பெறுமாவென்பதறியாததோ. தாழ்ந்த சாதியோர் என்பவர்களால் வெட்டப்பட்டக் குளங்களிலுங் கிணறுகளிலும் அவர்களையே நீர்மொண்டுக் குடிக்கவேண்டுமென்பது நீதியாமோ. சுத்த நீராயிருப்பதை பெரியசாதியோர் மொண்டுகுடிக்கவேண்டும் அசுத்த நீராயிருப்பதை சிறிய சாதியோர் மொண்டுகுடிக்க வேண்டுமென்பதும் வேஷசாதிகளின் சட்டமோ, மனிதவகுப்போரை மனிதவகுப்பாக பாவிக்காத மக்களும் ஓர் மக்களாமோ. தற்கால சட்டசபையோர் இத்தகையக் கொடூரச்செயல்களை அறியார்களோ, ஏழைக்குடிகள் அசுத்தநீரை மொண்டுகுடித்து அல்லலடைவதும் அனந்த வியாதிகளால் மடிவதும் சுகாதாரத்திற்கும் சுகாதாரச் சட்டங்களுக்கும் பொருந்துமோ ஒருக்காலும் பொருந்தாவாம். கருணையென்பதே கனவிலுமில்லா மக்கள் ஏழைக்குடிகளை சுத்தநீரை மொண்டுகுடிக்கவிடாமல் துறத்திவந்தபோதினும் அவர்களுக்கென்று சொந்தபூமிப் பெற்றுக்கொண்டு அவைகளிலேனும் சுகம்பெறவிடுகின்றார்களா, அதுவுங்கிடையாது. திண்டிவனம், பாஞ்சாலம் முதலிய கிராமங்களில் 1,000 ஏக்கர் காலியாயுள்ள பூமிகளுக்கு ஏழைக்குடிகள் தற்காஸ்து கொடுத்தும் சாதிபேதமுள்ள கிறாம உத்தியோகஸ்தர்களால் கொடாது இன்னும் தலைப்பட்டுக்கொண்டேயிருக்கின்றது. நாற்பது வருடகாலமாக ஏழைக்குடிகள் அநுபவித்துக் கொண்டு வரியுஞ் செலுத்திவந்திருக்க அவைகள் யாவையும் சட்டைச்செய்யாமலும், இராஜாங்கத்துக்கும் அஞ்சாமலும் சாதி பேதமுள்ளோர் அனுபவித்துக் கொள்ள எத்தனித்து பத்திரம் பிறப்பித்துக் கொண்டதாக இராஜாங்கத்தோருக்கு விண்ணப்பம் அநுப்பியிருக்கிறார்கள். இவ்வகையாகப் பண்ணை பூமிகளை விருத்திச் செய்யும் ஏழைக்குடிகளை பாழடையச் செய்வதினால் விவசாயங் குன்றி குடிகள் கஷ்டமடைவார்களென்பதை நூதனச் சட்டச் சபையோர்களறியார்களோ, அறிவார்களே. அறிந்தும் ஏழைக்குடிகளின் கஷ்டங்களை ஏன் கவனிப்பதில்லை என்னில், பண்ணை வேலைச் செய்யும் ஏழைக்குடிகள் யாவரும் தாழ்ந்த சாதியோர்கள், இவர்கள் யாவரும் உயர்ந்த சாதியோர்களாதலால் உயர்ந்த சாதியோர்கள் வேண்டுகோட்களுக்கு உயர்ந்த சாதியோர்களே உதவி செய்துக்கொள்ளுவது வழக்கமாதலின் தாழ்ந்தசாதிகளென்று அவர்களாலேயே தாழ்த்தப்பட்டவர்கள் சுகச்சீர்பெற மனம் சகிக்குமோ. அவர்களது வாழ்க்கைநலம் இவர்களுக்கு பொறுக்குமோ ஒருக்காலும் பொறுக்காவாம். சாதிபேதமில்லார்க் கேடுபாடுகளை சாதிபேதமில்லா விவேக மிகுத்தோர் கவனிக்க வேண்டுமேயன்றி சாதிபேதமுள்ளார் கவனிப்பார்களென்பதைக் கனவிலும் நம்பப்படாது. சாதியாசாரமுள்ளவர்கள் வளர்க்கும் ஆடு, மாடு, குதிரை, கழுதை, நாய் முதலியவைகள் சுத்தநீரை வந்து குடிக்கலாம், இந்த ஏழை மனிதகுலத்தோர் சுத்தநீரை மொண்டுகுடிக்கக்கூடாதென்னுங் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் இவர்களது சுகத்தையும் சீரையுங் கருதுவார்களோ, ஒருக்காலுங் கருதார்களென்பது சத்தியம்.
ஆதலால் ஆறுகோடி மக்களின் அல்லலையும் அவர்களது கஷ்ட நிஷ்டூரங்களையும் எடுத்துப் பேசுவதற்கு சாதிபேதமற்ற ஏழைக்குடிகளில் ஒருவரைத் தெரிந்தெடுத்து அவர்களது குறைகளை தெரிவிக்கும்படி பிரிட்டிஷ் ஆட்சியார் கருணை புரிவார்களாயின் ஏழைக்குடிகள் யாவரும் ஈடேற்றம் பெறுவார்களென்பது சத்தியம் சத்தியமே.
சட்டச் சபையில் பெருந்தொகையான மெம்பர்களைச் சேர்த்தும் இவ்வேழைக்குடிகளின் கஷ்டங்களை ஒருவரேனும் எடுத்துப்பேசியது கிடையாது. காரணம் சாதிபேதமுள்ளோர்கள் மத்தியில் சாதிபேதமில்லார்கள் நாசமடையவேண்டுமென்பதே, அவர்களெண்ணமும் செயலுமாதலால் ஏழைமக்களின்மீது இதக்கமென்பதே வைக்கமாட்டார்கள். ஆடுகள் நனைகிறதென்று புலிகள் புறண்டழுவதுபோல் சில பெரியசாதிகளென்போர் கூட்டங்கூடி தாழ்ந்த சாதியோர்களை உயர்த்தப் போகின்றார்களே அஃது கருணையல்லையோ என்பாராயின் அஃது மறக்கருணையிலுஞ் சேராது அறக்கருணையிலுஞ் சேராது. காலமெல்லாம் தாழ்ந்த சாதியோரை உயர்த்தப்போகின்றோமென்று தங்களை உயர்ந்த சாதிகளெனப் படாடம்ப மடித்துக்கொள்ளுவதற்கும், அவர்களது மதத்தையும், அவர்களது செயலையும் தழுவியுள்ள ஏழைக்குடிகளை இவர்கள் தாழ்ந்த வகுப்பாரென சொல்லிக் கொண்டே தாழ்த்துவதற்கேயாம்.
ஏழைமக்களை சீர்திருத்துவோர் ஆங்கிலேய துரைமக்களும், சாதிபேதமற்றப் பெரியோர்களுமேயாவர். ஆதலின் கருணைதங்கிய ராஜாங்கத்தார் ஏழைமக்களின் இடுக்கங்களை நீக்கி ஆதரிக்கும் சட்ட சபை மெம்பர் ஒருவரை நியமிக்க வேண்டுகிறோம்.
- 5:41; மார்ச் 20, 1912 -