உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/252-383

விக்கிமூலம் இலிருந்து

248. சென்னை முநிசபில் பிரசிடென்டவர்களும் கமிஷனரவர்களும் ஏழைக்குடிகளின் இடுக்கங்களை நோக்கல் வேண்டும்

சென்னை முநிசபில் எல்லைக்குட்பட்டுள்ளக் குடிகள் யாவருக்கும் சுகாதாரத்தை அளித்துக் காக்குங் கூட்டத்தோருக்கு கார்ப்பரேஷன் கமிட்டியார் என்றும், முநிசபில் சங்கத்தோரென்றும் பெயர் பெற்றக் கூட்டத்தோரைக் குடிகளே நியமித்துக்கொள்ளுவதாகும். அவ்வகை நியமித்துக்கொள்ளினும் அவர்களும் இராஜாங்கத்தோரைச் சேர்ந்தவர்களே யாவர். இத்தகையக் கூட்டத்தோரை குடிகள் யாவரும் ஒன்றுகூடி தங்கள் தங்கள் சுகாதாரத்திற்காக ஏற்படுத்திக் கொண்டார்களன்றி தங்களைத் தீரா சஞ்சலத்தில் உள்ளாக்கிக் கொள்ளுவதற்கன்று. சுகாதாரமாவது யாதெனில், வீதிகளின் சுகம், நீர்சுகம், தீபசுகம், பற்பல தொத்துரோகங்கள் அணுகா சுகம், துட்டர்களை அடக்கிக் காக்குஞ் சுகம், கள்ளர்கள் பயமில்லாமல் வாழ்க்கை சுகங்களாகிய பேரானந்தத்தை அளித்துவரும் சிறந்த கூட்டத்தோருக்கே சுகாதாரக் கூட்டத்தோரென வழங்கிவருகின்றார்கள்.

அவ்வகை வழங்கிவருங் கூட்டத்தோருள் ஒரு பிரசிடென்டும், ஒரு வைஸ் பிரசிடென்டும், அந்தந்த டிவிஷன்களிலுள்ளக் குறைகளை எடுத்துப்பேசி சுகச்சீரளிப்பதற்கு ஒவ்வோர் கமிஷனர்களும் சேரும் தொகைகளை பத்திரப்படுத்திவைப்பதற்கும் ஒரு ரெவினியூ ஆபீசருடமிருந்து காரியாதிகளை நடத்தி வருகின்றார்கள். இவர்கள் யாவரையும் குடிகளுக்கு சுகாதாரம் அளித்துக்காக்கும் தாய்தந்தையர்களுக்கு ஒப்பானவர்களென்றே கூறத்தகும். குடிகளின் சுகத்தைக் கருதியே ஏற்பட்டக் கூட்டத்தோர்களாதலின் குடிகளின் தாய் தந்தையர்களுக்கு ஒப்பானவர்களாகும். இத்தகைய சிறந்த கூட்டத்தோர் தாங்கள் நடாத்திவரும் சுகாதாரச் செயல்களுக்கென்று குடிகளிடம் வசூல் செய்யும் வரித்தொகைகளை மட்டிலும் பெரிய உத்தியோகஸ்தர்கள் அந்தந்த வீடுகடோரும் நேரில்வந்து அவரவர்கள் இவ்வளவு தொகை செலுத்தலாமென்னுங் காருண்யத்தொகையை மதிப்பிட்டுப் பின்னர் வசூல் செய்து காரியாதிகளை நடத்துவதாயின் தாய் தந்தையர்கள் பிள்ளைகளை சீர்திருத்தி ஆதரிப்பதற்கு ஒப்பதாகும்.

அங்ஙனம் பெரிய உத்தியோகஸ்தர்களே நேரில் வந்து பார்வையிட்டு வரிகளை நியமிக்காது மற்றுமுள்ள உத்தியோகஸ்தர்களை அநுப்பி வரிகளை நியமிக்கும்படிவிடுவதினால் அவரவர்கள் மனம்போனவாறு வரிகளை நியமித்து சொந்த வீட்டுக்காரர்களும், குடிக்கூலி கொடுப்பவர்களுங் குய்யோ முறையோ என்னுங் கூச்சலிட்டுத் திரிகின்றார்கள்.

காரணமோவென்னில், இரண்டு ரூபாய் வரி செலுத்தி வந்தவர்களை ஐந்து ரூபா செலுத்த வேண்டுமென்றும், ஐந்து ரூபா வரி செலுத்தி வந்தவர்களை எட்டு ரூபா வரி செலுத்த வேண்டும் என்றும் எட்டு ரூபா வரி செலுத்தி உள்ளவர்களை பனிரெண்டு ரூபா வரி செலுத்த வேண்டுமென்றும் அவரவர்கள் மனம் போன்றவரிகளை விதித்து விட்டபடியினாலேயாம். மாதம் ஒன்றக்கு ஏழு ரூபாய் எட்டு ரூபாய் சம்பாதித்து சீவிக்கும்படியானக் குடும்பிகள் மாதம் ஒன்றுக்கு எட்டணா பத்தணா வீட்டிற்குக் குடிக்கூலிக்கொடுத்துத் தங்கள் காலங்களைக் கழித்து வந்தார்கள். அத்தகைய ஏழைக்குடிகளுக்கு வீட்டுக்குடையவர்கள் ஒருரூபா ஒன்றே கால் ரூபா வாடகை செலுத்த வேண்டுமென்றும், அவ்வகை செலுத்தாதோர் வீட்டை காலி செய்யவேண்டுமென்றும் உத்திரவு செய்துவிடுகின்றார்கள். முநிசபில் எல்லைக்குள்ளாகவே சற்று தூரமாக இருக்கும் வீடுகளுக்கு குடிக்கூலிக்கு யாரும் போவதே கிடையாது. சொந்தக்காரர்களே அநுபவித்து வருவதுண்டு.

அத்தகைய வீடுகளுக்கு ஏழைகள் செலுத்திவந்த இரண்டு மூன்று ரூபாயாய் இருந்த வரிகளை ஐந்து ரூபாய் ஏழு ரூபாயாக உயர்த்தியும் விட்டபடியால் சொற்ப சீவனமுள்ள ஏழைக்குடிகள் யாவரும் கண்கலங்கி தவிக்கின்றார்கள். குடிகளே ஏகோபித்து சுகாதாரத்திற்கென்று ஏற்படுத்திக் கொண்ட விஷயந் துக்கசாகரத்தை விருத்தி செய்துவருவதாக விளங்குகின்றபடியால் கருணைதங்கிய பிரசிடென்டவர்களும் முநிசபில் கமிஷனர் அவர்களும் ஏழைக்குடிகளின் மீது கிருபாநோக்கம் வைத்து தாங்களே வீடுகடோருஞ் சென்று பார்வையிட்டு சரியான வரிகள் விதித்து ஏழைகளின் கண்கலக்கங்களை நீக்குவார்கள் என்று நம்புகிறோம்.

ஈதன்றி (சன்தோம் அருகே) மயிலை மேட்டுச்சேரிப் பெரியச்சேரியென வழங்கும் ஏழைக்குடிகள் வாசஞ்செய்யுங் கிராமங்களின் அருகே மலக்குப்பைக் கொண்டுபோய்க் கொட்டும்படி ஆரம்பித்ததுமுதல் அவ்விடமுள்ளக் குடிகள் பற்பல வியாதிகளால் பீடிக்கப்பட்டு மடிவதுடன் சிலக் குடிகளும் வெளியேறிவிட்டார்கள். அத்தகைய இடங்களிலுள்ள வீடுகளுக்கும் வரிகளை அதிகரித்துவிட்டதாக முறையிடுகின்றார்கள். இத்தியாதி இடங்கள் யாவிலும் சென்று பெரிய உத்தியோகஸ்தர்களே நேரில் பார்வையிட்டு அந்தந்த வீடுகளுக்கும் அங்கங்குள்ள ஏழைக்குடிகளுக்குத் தக்கவாறு வரி அளித்து ஆதரிக்கும்படி வேண்டுகிறோம்.

- 5:42; மார்ச் 27, 1912 -