உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/253-383

விக்கிமூலம் இலிருந்து

249. சென்னை இராஜதானியின் ஆக்டிங் கவர்னர்

நமது சென்னை ராஜதானிக்கு நிலையாக வரவேண்டிய கவர்னரது வருகை ஏதோ சில அசந்தர்ப்பத்தால் தாமதப்பட்டிருக்கின்றபடியால் அவர் வருமளவும் நமது ஆனரேபில் ஆமக் பெருமானவர்கள் ஆக்ட் செய்வாரென்பதைக் கேழ்வியுற்று அனந்தானந்தம் அடைகின்றோம். அதாவது இச்சென்னை ராஜதானியில் அனந்தவருடமாக இருந்து இத் தேசத்தோரது நூதன சாதி வித்தியாசங்கள் நாளுக்குநாள் பெருகிவருவதும், மதவித்தியாசங்கள் நாளுக்குநாள் பெருகிவருவதும், விவசாய உழைப்பாளிகள் ஊரைவிட்டோடுவதும், அதனால் பண்ணை பூமிகளின் விருத்தி குறைந்து வருவதுமாகிய கஷ்ட நஷ்டங்கள் யாவும் அவருக்கு நன்றே தெரிந்தவிஷயங்களாகும்.

அவ்வகை தெரிந்துள்ள காருண்யருக்கு ஏழைக்குடிகள் யாவரும் ஒன்றுகூடி சாதிபேதமுள்ளக் குடிகளாலும், சாதிபேதமுள்ள உத்தியோகஸ்தர்களாலும் சாதிபேதமில்லா ஏழைக்குடிகளுக்கு என்னென்ன இடுக்கங்கள் இருக்கின்றனவென்றும் கருணைதங்கிய ராஜாங்கத்தில் ஏழைக்குடிகள் முன்னேறும் வகைகளில் ஏதேது தடைகளுண்டாகிக்கொண்டுவருகிறதென்றும். தன்னவரன்னியரென்னும் பட்சபாதமற்ற அரசாட்சியில் சாதிபேதம் வைத்துள்ளக் கூட்டத்தோர் மட்டிலும் சகல சுதந்தரிகளாக சுகசீவனம் பெற்று வாழ்வதும், சாதிபேதமில்லா ஆறுகோடி மக்கள் ஏதொரு சுதந்திரமுமின்றி அல்லலடைந்து கெடுவதுமாகிய சீர்கேடுகள் யாவையும் விளக்கி விண்ணப்பங்கள் அநுப்புவதாயின் இத்தேசத்தின் நெடுநாளய அநுபவமுடைய மகான் அவற்றை சுருக்கத்தில் உணர்ந்து வேண்டிய சுகங்களை அளித்து ஆதரிப்பாரென்று நம்புகிறோம்.

ஏழைக்குடிகளின் அதிர்ஷ்ட பாக்கியங்களுமே எல்லாமறிந்த மகான் கவர்னராக ஆக்ட்டிங் செய்கின்றார். குடிகளின் குறைகள் யாவையும் நன்கறிவார். குறைகளை நீக்கும் வழிகளையும் தெரிந்து செய்வார். இத்தகையத்தெரிந்த கவர்னரைக் காணுவது மிக்க அரிதேயாம். ஏழைக்குடிகளின் கஷ்டநஷ்டங்களை கவர்னரது சங்கத்திலெடுத்துப்பேசி சுகச்சிரளிப்பதற்கோர் லெஜிஸ்லேட்டிவ் மெம்பரொருவர் இருப்பாராயின் ஏழைக்குடிகள் யாதுமுயற்சியுஞ் செய்ய வேண்டியதில்லை. அத்தகையமெம்பரொருவரும் இல்லாதபடியால் ஏழைக்குடிகளே முயன்று தங்கடங்கட் குறைகளை இராஜாங்கத்தோருக்கு விளக்கி குறைகளை நீக்கிக்கொள்ள வேண்டியதாயிருக்கின்றது. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டுமென்னும் பழமொழிக்கிணங்க, ஏழைக் குடிகளின் இடுக்கங்களெல்லாந்தெரிந்தவரும், கருணை நிறைந்தவரும் கவர்னராக ஆக்டிங் செய்யும்போதே ஏழைக்குடிகளாம் பாஞ்சால கிறாமவாசிகளும் திண்டிவனம் ஏழைக்குடிகளும் மற்றும் கிராம ஏழைமக்களும் தங்கடங்கட் குறைகளை மேலுமேலும் எழுதித் தெரிவிப்பதே அழகாம். அழுதப்பிள்ளைகள்தான் பால்குடிக்குமென்பது அனுபவமாதலின் முயற்சி திருவினையாக்குமென்னு முதுமொழிக்கிணங்கி ஏழைக்குடிகள் யாவருந் தங்கடங்கள் இடுக்கங்களை நீக்கிக் கொள்ளுவதே சுகம். கருணை தங்கிய கவர்னரவர்களும் ஆலோசினை சங்கத்தவர்களும் ஏழைக்குடிகளின்மீது இதக்கம் வைக்க வேண்டுகிறோம்.

- 5:43; ஏப்ரல் 3, 1912 -