உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/267-383

விக்கிமூலம் இலிருந்து

263. ஐரோப்பிய ஜர்ஜுகளும் மாஜிஸ்டிரேட்டுகளுந் தெண்டிப்பது அதிக தண்டனையென்று அலக்கழிக்கப்போமோ

ஆகாவாம். இந்துக்களென்போர் தங்கள் சட்டதிட்டங்களையும், ஐரோப்பியர் சட்டதிட்டங்களையும் உய்த்துணர்வார்களாயின் செவ்வனே விளங்கும். அங்ஙனம் உணராது பத்திரிகைகளில் வரைவது வீணேயாம். ரெயில் வண்டியில் கல்லெறிந்த பனிரண்டு வருடப் பிராயமுடையப் பையனை ஏழுவருடம் கலாசாலை தண்டனை விதித்தது கொடிது என்று கூறுவது விந்தையேயாம். 7 வருடகாலவரையில் அவன் புசிப்புக்கும் அவன் கற்கும் கல்விக்குங் கைத்தொழிலுக்கும் அவன் உடுக்கும் ஆடைக்கும் நேருஞ் செலவை நிதானிக்காது ஏழுவருடம் என்னுங் காலக்கணக்கை மட்டிலுங் கண்டு குறைக்கூற ஆகாவாம். அத்தகைய தண்டனையானது மற்றுமுள்ள துஷ்டப் பிள்ளைகளுக்கு பயமுண்டாகவும் ஏழுவருட தண்டனையடைந்த சிறுவன் கல்வியுங் கைத்தொழிலுங் கற்று நல்லொழுக்கத்தில் நிலைத்து சுகச்சீர் பெருவதற்கேயாம். அத்தகைய தண்டனையின் பயனானது இரயில் பிரயாணிகளுக்கும், உத்தியோகஸ்தர்களுக்குத் துன்பம் நேரிடாமலும், சிறுவர்களுக்கு துஷ்ட குணம் எடுபடவுமே யன்றி வேறன்றாம்.

ஓர் பிராமணன் திருடிவிட்டால் அப்பொருளுடன் அவனை ஊரைவிட்டகற்றி விடல் வேண்டும். மற்றசாதியான் திருடினால் அவனை தண்டிக்க வேண்டுமென்னும் அநீதியும், பிராமணன் ஆசனத்தில் மற்றொருவன் உழ்க்காருவானாயின் அவன் புட்டத்தை அறுத்துவிட வேண்டுமென்னுஞ் கொறூரச் செயலுமன்று. ஐரோப்பியர்களால் செய்துவரும் சட்டங்களும், செயல்களும் மக்களது சீர்திருத்தத்தைப் பொருந்தியே நிற்குமன்றி கெடுக்கமாட்டாது. பெரும்பாலும் அவர்களுடைய நோக்கம் மனித வகுப்போரை மனித வகுப்பாராகவும், மிருக வகுப்பை மிருகங்களாகவுங்கண்டு நடத்தும் மேன்மக்களேயாவர்.

அவர்கள் நடத்துஞ் செங்கோலோ தன்னவர் அன்னியரென்னும் பாரபட்சமற்றது. ஏழைகள் கனவான்கள் என்னும் நிறை குறையற்றது. அத்தகையோர் விதிக்குத் தண்டனைகளைக் குறைக் கூறுவோர் தங்களது குறைகளை நோக்காதவர்கள் என்றே கூறல் வேண்டும்.

அத்தகைய நீதிநெறியற்றக் குறைகளையும் ஏழைக்குடிகள் அடைந்து வருங் கஷ்டங்களையுங் கண்ணாறக் காணவேண்டுமாயின் இந்துக்களுக்குள் ஒரே சாதியார் பெருந்தொகையினராக வாசஞ்செய்யும் கோர்ட்டுகளிலும் ஆபீசுகளிலும் குடிகள் அல்லலைக் காண நன்கு விளங்கும். அதாவது தங்களுக்குள்ள பூமிகளின் குறையோ வியாஜியக்குறையோ ஒன்றை நாடி ஏகசாதி பெருந்தொகையினருள்ளக் கூட்டத்தோர் உத்தியோகஞ் செய்பவரிடம் போவார்களாயின், ஐரோப்பிய துரைமகன் உத்தரவு உடனே கிடைக்க மற்ற உத்தியோகஸ்தர்களிடம் சற்று வெள்ளையும் சள்ளையுமாகப் போவானாயின், இங்குதானிரும் எனப் பொழுதைப்போக்கவைத்து நாளைக்கு வாரும் என அலக்கழித்து, அவன் வந்த வேலையுங் கெட்டு சொந்த வேலையையும் பாழடையச் செய்துவருகின்றார்கள். அதில் ஓர் கிறிஸ்தவனாயிருந்து விட்டாலோ ஏதுகாணும் எங்குவந்தீர் இன்று ஆகமாட்டாது. இரண்டுநாள் சென்று வாருமெனத் திருப்படிப்பார்கள். பறையனென்று அழைக்கப்படுவோனா யிருந்தாலோ அவனைக் கண்டும் பேசுவோருங் கிடையாது. ஐயா, ஐயா வெனப் பத்துசப்தமிடுவானாயின் என்னடா, தூரம் போயிருவெனச் சொல்லிவிட்டு நுழைந்தவன் மறுபடியும் அவனை வந்துபார்க்கவு மாட்டான். சங்கதி விசாரிக்கவுமாட்டான். இவ்வகை ஒருமாதமோ இரண்டுமாதமோ அவன் வேலைகளையெல்லாங் கெட்டலைந்தும் அவனுக்கு நல்லவேளை இருந்து ஓர் துரைமகன் கண்ணுக்கு அகப்படுவானாயின் அன்றுதான் அவனது குறைகள் நீங்கும். இத்தகையக் கருணையற்றவர்களிடம் முழு அதிகாரங்களையும் கொடுத்துவிடுவதாயின் முதற்கேடு பறையனுக்கு, இரண்டாங் கேடு கிறிஸ்தவனுக்கு, மூன்றாங்கேடு மகமதியனுக்கென்றே முடியும். அதாவது ஐரோப்பிய துரைமகன் மேலதிகாரியாயிருந்து மேற்பார்வையும் விசாரிணையுஞ் செய்துவரும்போதே சாதித்தலைவர்களின் அதிகாரம் உத்தியோக அதிகாரத்துடன் சேர்ந்துகொண்டு ஊர்க்குட்டிகளைப் பாழ்ப்படுத்துவதாயின் பூராவாக சாதியதிகாரத்துடன் உத்தியோக அதிகாரங்களையும் பெற்றுக்கொள்ளுவார்களாயின் தங்கள் சாதிக்கும் மதத்திற்கும் எதிரிகளாயுள்ளவர்கள் யாவரையும் பாழ்படுத்துவார்களென்பது திண்ணம். இத்தியாதி, அக்கிரமங்கள் யாவையும் கண்ணினால் பார்த்தும் காதினால் கேட்டும் உள்ளப் பத்திராதிபர்கள் ஐரோப்பிய மாஜிஸ்டிரேட்டுகள் மீதும் ஜர்ஜிகள்மீதுங் குறைகூறுவது உட்சுவர் ஒருபுரம் தகர்ந்திருக்க புறஞ்சுவற்றை பூசுவதற்கொக்கும். ஆதலின் பொதுநலசீர்திருத்தங்களைத் தேடும் பத்திராதிபர்கள் சுயநலம்பாரா சீர்திருத்தங்களைத் தங்கள் தங்கள் பத்திரிகைகளில் வெளியிடுவார்களென நம்புகிறோம்.

- 6:7: சூ லை 24, 1912 -