அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/270-383
266. நமது இந்தியதேசச் சக்கிரவர்த்தியார் ஐந்தாவது ஜார்ஜ் அரசரவர்களும் ஜப்பான்தேசச் சக்கிரவர்த்தியார் மிக்காடோ பூமானவர்களும்
நீதிநெறி வாய்மெ நிறைந்த மேன்மக்களாக விளங்க நின்றார்கள் என்பதும் நமது சக்கிரவர்த்தியார் நிற்கின்றார் என்பதும் உலகப் பிரசித்தமேயாம்.
இவ்விரு சக்கிரவர்த்திகளுக்குள் மிக்காடோ சக்கிரவர்த்தியார் ஆளுகைக்கு உட்பட்டக் குடிகள் யாவரும் ஏகமதம், ஏகசாதி, ஏக்குணம் பொருந்தியுள்ளவர்களாதலின் அவரது நீதிநெறி வாய்மெய் அமைந்த நிலைமெயிற் கட்டுப்பட்டு இராஜ விசுவாசம் நிறைந்து வாழ்ந்தும் வந்தார்கள். இனிவாழ்ந்தும் வரப் போகின்றார்கள். நமது இந்திய தேசச் சக்கிரவர்த்தியார் நீதி நெறி வாய்மெயும் அன்பும் சீவகாருண்யமும் நிறைந்தவராயிருந்து அவரது ஆளுகைக்குள் பலமதம், பலசாதி, பலகுணம் அமைந்தவர்களாயிருக்கின்றபடியால் அவரது மேலாய அன்பினையும் சீவகாருண்யத்தையும் மாறுபடச் செய்வோர் தற்கால இந்தியர்களென்றே பரக்க விளங்குகின்றது. காரணமோவென்னில் இந்திய சக்கிரவர்த்தியார் கருணைகொண்டளிக்கும் உத்தியோகங்களிலும் பட்டங்களிலும் அவன் சிறியசாதியான் அவனுக்குப் பெரிய உத்தியோகங்கள் அளிக்கலாகாது. இவன் பெரியசாதியான் இவனுக்குச் சிறிய உத்தியோகம் அளிக்கலாகாதென்றும், அவன் சிறிய சாதியான் அவனுக்குப் பெரிய பட்டமளிக்கலாகாது, இவன் பெரியசாதியான் இவனுக்கு சிறிய பட்டமளிக்கலாகா தென்னும் சாதிபேத முறுமுறுப்பும் சமயபேத குறுகுறுப்புங் கொண்டு மாறுபடுத்துவதுமன்றி சாதித்தலைவர்கள் நிறைந்துள்ள இடங்களில் சாதிபேதமில்லாக் குடிகளை பலவிதங்களிலும் தாழ்த்தி முன்னேறவிடாமற் செய்து ஆறுகோடி மக்களை அலக்கழிப்பது சகல் ஆங்கிலேய துரைமக்களும் அறியாததன்று.
இத்தகையக் கருணையற்றவர்களும் நீதியற்றவர்களும் பேராசை உள்ளவர்களும் பொறாமெ மிகுத்தவர்களும் பிறர்சுகங்கருதாது சுயநலங்கருதுவோருமாகிய சாதித்தலைவர்களின் செயல்களினால் நமது இந்தியச் சக்கிரவர்த்தியாரின் நீதியும், நெறியும், அன்பும், சீவகாருண்யமும் சேற்றில் விழுந்த மாணிக்கம்போல் மறைந்திருக்கின்றது. கட்குடியன் கட்குடியனையே சிறப்பிப்பான். கள்ளன் கள்ளனையே சிறப்பிப்பான். வேசிகாந்தன் வேசிகாந்தனையே சிறப்பிப்பான். அவைபோல் அநீதிமானை அநீதிமான் சிறப்பிப்பான் நீதிமானைக்காணில் விரோதிப்பான். நெறியற்றவனை நெறியற்றவனே சிறப்பிப்பான். நெறியுள்ளோனைக்காணில் நிந்திப்பான். கருணையற்றோனை, கருணையற்றோனே சிறப்பிப்பான், கருணை உள்ளோனைக் காணில் அவமதிப்பான். ஆதலின் நீதியும், நெறியும், கருணையும் அமைந்த இந்திய தேசச் சக்கிரவர்த்தியார் செயலை சகலரும் அறியார்களென்பது அவர்களின் சாதிவேஷத் தற்காலச் செயல்களாலேயே நன்கு விளங்கும். இத்தகைய சாதிவேஷமில்லா ஜப்பானியரின் நன்றியறிதலையும் இராஜ விசுவாசத்தையும் நோக்கல்வேண்டும். அதாவது ஜப்பான் சக்கிரவர்த்தியார் இறந்தாரென்று கேழ்விப்பட்டவுடன் ஓர் ஜப்பானியன் மனஞ்சகியாது தன் பிராணனை விட்டான். குடிகள் யாவரும் அத்தகைய ராஜவிசுவாசமும் நன்றியறிதலும் உள்ளவர்களாயிருக்கின்ற படியால் அத்தேசத்தில் காலமழை பெய்யவும் தானியங்கள் விருத்தியுண்டாகவும், சீவராசிகள் சுகவாழ்க்கையடையவும், மக்கள் யாவரும் பட்டாடைகள் உடுத்தவுமாகிய நற்காட்சிகளே விளங்குகின்றது. அத்தேசத்தோர்களும் நாளுக்குநாள் கல்விவிருத்தி, கைத்தொழில் விருத்தி, விவசாயவிருத்தியும் பெற்று தாங்கள் சுகச்சீரடைவதுடன் தங்கள் அரசாங்கத்தோரையும் ஆனந்திக்கச் செய்து வருகின்றார்கள். இந்திய தேசத்திற்கு சகல நற்குணமும் மேன்மேயுமமைந்த சக்கிரவர்த்தியார் தோன்றியும் குடிகள் சகலருக்கும் அத்தகைய குணந்தோன்றாது அவன் சின்ன சாதி, நான் பெரியசாதி, அவன் சின்னசாதி சிறிய வேலைகளைச் செய்ய வேண்டும், நான் பெரியசாதிப் பெரிய வேலைகளைப் பெறவேண்டுமென்னும் பொறாமெயும் பற்கடிப்பும் பெருகுகின்றபடியால் சீவகாருண்யமென்னும் நற்செயலற்று கல்வியுங் குறைந்து கைத்தொழிலும் சிதைந்து விவசாயமுங்கெட்டு ரூபாயிற்குப் பத்துபடி விற்றுவந்த அரிசி, ரூபாயிற்கு நான்கு படிக்கு வந்து விட்டது. இன்னும் இத்தேசத்தில் சாதிபேத பொறாாமெயும் சமபேதப் பற்கடிப்பும் பெருசி சீவகாருண்ணியமே அற்று, மனிதர்களை, மனிதர்களாக பாவிக்காது மிருகங்களிலுந் தாழ்ச்சியாக பாவிக்குங் கருணையற்ற மிருககுணங்களிலேயே நிலைப்பதாயின் ரூபாயிற்கு நாலுபடி விற்கும் அரிசி இன்னும் இரண்டுபடிக்கு வந்துவிடுவதற்கு ஆட்சேபம் இராவாதலின் சகல மக்களும் நமது சக்கிரவர்த்தியார் நீதியையும், நெறியையும், அன்பையும், சீவகாருண்யத்தையும் பின்பற்றி நடப்பதாயின் தேசத்தோர் சகலசுகமும் பெற்று வாழ்வதுடன் இராசாங்கமும் ஆனந்த சுகநிலைபெறும்.
- 6:10; ஆகஸ்டு 24, 1912 -