உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/271-383

விக்கிமூலம் இலிருந்து

267. இந்துக்களுக்கு சுயராட்சியம் வேண்டுமாமே

இத்தகைய சுயராட்சியம் வேண்டுமென முயற்சிக்கும் இந்துக்கள் தங்களது மநுதன்ம சாஸ்திரத்தை நீக்கிவிட்டு சுயராட்சியம் விரும்புகின்றாரா அன்றேல் மநுதன்ம சாஸ்திரத்தை சட்டமாக வகுத்துக்கொண்டே விரும்புகின்றாரா விளங்கவில்லை.

அஃதேனென்பரேல் மநுதன்ம சாஸ்திரத்தை அநுசரித்துக்கொண்டே சுயராட்சியம் பெறுவதாயின் தேசாதிபதியாகிய கவர்னரும், படைத்தலைவனாகிய கமாண்டான்சீபும் க்ஷத்திரியர்களாகவேயிருந்து தீரல்வேண்டும். அங்ஙனம் அவர்கள் கூறும் க்ஷத்திரியர்களும் பரசுராமனால் படுசூரணமாகிவிட்டார்கள் போலும். மற்றும் எச்க்ஷத்திரியர்பால் ஈவரோ அதுவும் விளங்கவில்லை.

இந்துக்களுக்குள் பிராமணர்களே முக்கியமானவர்களாதலின் சகல ஆளுகைகளையும் அவர்களே ஆளுவார்கள் என்பாராயின் இந்திய மகமதியர்கள் விடுவரோ, இந்தியக் கிறிஸ்தவர்கள் விடுவரோ, இந்திய பௌத்தர்கள் விடுவரோ ஒருக்காலும் விடமாட்டர்கள். காரணமோ வென்னில் இந்துக்களுக்கும், மகமதியர்களுக்கும் மசூதிகளண்டை உண்டாங் கலகங்களும், மகமதியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மதப்பிரசங்கங்களால் உண்டாங் கலகங்களும், பெருகுங்கால் அவற்றைத் தங்களுக்குள் தாங்களே அடக்கிக்கொள்ள சக்தியற்று பிரிட்டிஷ் ராணுவங்களே வந்து அடக்கியாளுவது பிரத்தியட்ச காட்சியாயிருக்க சுயராட்சியம் யாருக்குக் கொடுப்பார்கள். யார் அவற்றைப் பெறுவார்கள். பிரிட்டிஷ் ஆளுகையைப் பார்த்துக் கொண்ட படியால் அவைபோல் இந்துக்களும் ஆண்டுக்கொள்ளலா மென்னில் பிரிட்டிஷ் அரசாட்சியார் தன்னவர் அன்னியரென்னும் பேதமின்றி சகல சாதியோரையும், சகல மதத்தினரையும் ஆண்டு வருகின்றார்கள்.

அத்தகைய பேதமற்ற செயலாலும் நீதிபெற்றக் கோலாலும் ஆண்டு வருகின்றபடியால் சகலமதத்தினரும் சகல சாதியுள்ளோரும் சாதியில்லாரும் அவர்களுக்குள் அடங்கி ஆனந்தவாழ்க்கையில் இருக்கின்றார்கள். இத்தகைய வாழ்க்கையுள்ளோர் பொய்ச்சாதி வேஷத்தையும் பொய்மதகோஷத்தையும் பெருக்கிக்கொண்டுள்ள இந்துக்களென்போர் ஆட்சியில் அடங்கி நிற்பரோ ஒருக்காலும் அடங்கமாட்டார்கள். அடங்கி நிற்கினும் வேற்றரசர் படையெடுத்துவரின் எந்த சுத்தவீரர் எதிர்த்துப் போர்புரிந்து தேசத்தையும் தேசமக்களையும் பாதுகாப்பார்கள், மதசண்டைகள் நேரினும் பிரிட்டிஷ் படைகளே வரல் வேண்டும். மசூதி சண்டைகள் நடக்கினும் பிரிட்டிஷ் படைகளே வரல்வேண்டும். வேற்றரசர் வரினும் பிரிட்டிஷ் படைகளே உதவிபுரிய வேண்டுமென்பதாயின் பிரிட்டிஷ் ஆட்சியேயிருந்து ஆண்டுவருதே மேலன்றோ, தங்கள் தங்கள் சாதிவூழல்களால் உண்டாங் கேடுகளையும், மதவூழல்களால் உண்டாங் கேடுகளையும், பாஷையூழல்களால் உண்டாங் கேடுகளையும், பொதுவில் சீர்தூக்கிப்பாராது ஐந்து பேரது முயற்சியால் மகாஜனசபைக் கூச்சலிடுவதும் ஆறுபேரது முயற்சியால் காங்கிரஸ் சபைக் கூச்சலிடுவதுபோல் ஐந்தாறுபேர் முயற்சியால் சுயராட்சியம் வேண்டுமென்னும் முயற்சி எடுப்பதாயின் அஃதை இந்திய தேச சகலமக்களும் சம்மதிப்பரோ ஒருக்காலும் சம்மதிக்கமாட்டார்கள். இத்தகைய சம்மதமற்றக் கேடுபாட்டை சுருக்கமாக அறியவேண்டின் சென்னை ராஜதானிக்கடுத்த சிற்றூராகும் புதுச்சேரியே போதுஞ்சான்றாம்.

புதுச்சேரியென்னும் சிற்றூர் பிரான்சியருடைய ஆளுகைக்குட்பட்டுக் குடியரசைப் பெற்றுள்ளதால் வருடந்தோரும் (எலக்ஷன்) காலங்களில் எத்தனையோ பிணங்கள் விழுவதும் எத்தனை வீடுகள் சாத்தப்படுவதும், எத்தனையோ மக்கள் கால்ஒடிந்து கைஒடிந்து வைத்தியசாலையிற் கிடப்பதும் பிரத்தியட்சக் காட்சியாகும். ஓர் சிற்றூரையாளும் பிரஞ்சு தேசாதிபதியிருந்தும் குடியரசின் ஆளுகைச் சரிவராது சஞ்சலத்தில் ஆழ்கும்போது பெருந்தேசமாகிய இந்தியாவிற்கு சுயராட்சியங் கொடுப்பதாயின் என்னென்னக் கேடுகள் விளையுமோ வென்பதை அவரவர்களே யூகிக்கவேண்டியதேயாம்.

சுயராட்சியத்தை விரும்புவோர் சுயராட்சியத்தின் ஐக்கியத்தை முதலாவது விரும்ப வேண்டும். அவ்வகை விரும்புவோர் ஒவ்வோர் கவர்ன்மெண்டு ஆபீசுகளிலும் யூரோப்பியர் இத்தனைபேர், இந்துக்கள் இத்தனைபேர், மகமதியர்கள் இத்தனைபேர் கிறிஸ்தவர்கள் இத்தனைபேர் பௌத்தர்கள் இத்தனை பேர் இருக்கவேண்டுமென முடிவுக்குக் கொண்டுவந்துசகலரும் சகோதிரவாஞ்சையில் ஐக்கியம் பெற்று பேதமற முன்னேறுவார்களாயின் ஓர்கால் சுயராட்சியம் நிலைபெறுமேயன்றி வேறுவகையால் நிலைபெறாது என்பது திண்ணம். ஆதலின் சுயராட்சியம் விரும்புவோர் இராஜவிசுவாசத்தில் நிலைத்து சூழவிருக்கும் மக்களின் ஒற்றுமெயை விரும்பல்வேண்டும்.

- 6:11: ஆகஸ்டு 21, 1912 -