அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/282-383

விக்கிமூலம் இலிருந்து

278. கருணைதங்கிய பிரிட்டிஷ் ஆட்சியில் பாலவிவாஹமும் பெண்களை மொட்டை அடித்தலும் வேண்டுமோ?

நமது இந்திய தேசத்தின் பூர்வ மநுக்களது செய்கைகள் யாதெனில்:- பெண்களுக்கு மங்கைபருவமென்னும் பனிரண்டு வயதிற்கு மேற்பட்டே விவாகஞ்செய்வார்களன்றி சிறு பெண்களுக்கு விவாகஞ்செய்ததுங் கிடையாது அவ்வகை செய்துவந்தார்களென்னுஞ் சரித்திரமுங் கிடையாது. சகல பூர்வ சரித்திரங்களிலும் மங்கைபருவ விவாகத்தையே குறிப்பிட்டிருக்கின்றார்கள். எட்டுவகை விவாகங்களிலும் மங்கைபருவச் செயல்களே விளங்குகின்றது.

மங்கைபருவ விவாகமுற்றப் பெண்களின் கணவர்கள் சிறுவயதில் இறந்துவிடுவார்களாயின் அவர்களை மறந்துவிடுவதற்கும் மறுவிவாகம் செய்துக்கொள்ளுவதற்கும் அவனாற் கழுத்திற் கட்டியுள்ள மாங்கல்ய சரடை எடுத்து விடுவது அநுபவமாகும். புருஷனார் கட்டிய மாங்கல்ய சரடு கழுத்திலிருக்குமாயின் வேறொருவர் விவாகஞ்செய்துக்கொள்ள இயலாதென்றே உடனுக்குடன் அம்மங்கல்யத்தை எடுத்துவிட்டு மறுவிவாகத்திற்கு எதிர்பார்த்திருப்பது இயல்பாகும். அரசர்களுக்குள்ளும் விதவா சுயம்வரங்களும் நிறைவேற்றிவந்ததாகவும் சரித்திரமுண்டு. அரசரெவ்வழியோ குடிகளும் அவ்வழி என்பதற்குப் பொருந்த மங்கைபருவமாம் சுக வயதில் விதவையானப் பெண்களை மங்கல்யத்தை மட்டிலும் எடுத்து விட்டு மறுவிவாகத்திற்குக் கார்த்திருப்பவர்கள் ஆதலின் பெண்களின் சிரோமயிர்களை சிரைத்து மொட்டையடித்து சீரழிப்பது கிடையாது. சுகச்சீரிலேயே வைத்திருப்பது இயல்பாம்.

இத்தகைய மங்கைபருவச் சீரும் மங்கைபருவ விவாகமும் மாறுபட்டு சிறுவயது விவாகமும் விதவையான பெண்களை மொட்டையடித்தலுமாகியச் சீர்கேடுகள் தற்காலத் தோன்றி மக்களை சீரழித்துவருகின்றதேயன்றி வேறில்லை.

இத்தேசத்துப்பெண்களில் மொட்டையடிப்பது யாருக்கென்னில் புருஷபோகத்தை வெறுத்து ஞானபோகத்தை விரும்பியப் பெண்கள் புத்தசங்கத்தைச்சார்ந்தபோது பிக்க்ஷூக்களைப்போல் தாங்களும் சிரமயிர் கழித்து மொட்டைத்தலையுடன் இருப்பது இயல்பாம். அதுவும் யாதுக்கென்னில் மடங்களிற்றங்கி வாசிக்கவேண்டிய விஷயங்களுக்கும் ஞானசாதனச் செயல்களுக்கும் சிரமயிரிருப்பது தொல்லையென்றும் மற்றும் புருஷர்கள் பார்வைக்கு தங்களழகைக் குறைத்துக்கொள்ள வேண்டுமென்றுங் கருதி பிக்குணிகள் மட்டிலும் பெண்களில் மொட்டைத்தலையுடனிருப்பார்களின்றி குடும்பத்தைச்சார்ந்தப் பெண்களை மொட்டையடித்து அழகைக்குலைப்பதும் சிறுபெண்களுக்கு விவாகஞ்செய்து சீரழிப்பதுங் கிடையாவாம்.

இச்சீர்கேடுகள் எக்காலத்திருந்து நிறைவேறிவருகின்றதென்று எம் மரபினராம் விவேகிகள் கூறுகின்றார்களென்னில், மகமதியர்களது துரைத்தனம் இவ்விடம் பரவியபோது தங்களுக்குத்தாங்களே பிராமணர்களென்று சொல்லிக்கொண்டுள்ளக் கூட்டத்தோர்களிற் சிலர் மகமதிய அரசர்களிடம் மந்திரிகளாகச் சேர்ந்து கொண்டு காரியாதிகளை நடத்திக்கொண்டு வந்ததாகவும் அக்காலத்தில் வந்துள்ள மகமதியபாலியர்கள் நீர்கரைகளுக்குப் போகும் பெண்களையும், கடைகளுக்குப் போகும் பெண்களையும், துராக்கிரமமா இழுத்துக்கொண்டுபோய்விடுவதும் பலவந்தஞ்செய்வதுமாக இருந்த செய்கைகளைக் கண்டுவந்த மந்திரிகள் மகமதிய அரசர்களை அணுகி இத்தேசப் பெண்களுள் மஞ்சள் சரடுடன் மாங்கல்லியம் அணிந்துள்ளப் பெண்கள் யாவரும் ஒவ்வொரு புருஷர்களுக்கு நியமித்துள்ளவர்கள் அவர்களைப்போய் மகமதிய பாலியர்கள் கைப்பற்றுவதும் துராக்கிரமம் செய்வதும் நியாயமல்ல. மற்ற வெறுமனேயிருக்கும் பெண்களைக் கைப்பற்றிக் கொண்டாலுங் குற்றமில்லை. ஒருவன் மனையாளைக் கெடுக்கலாகாது. ஆதலால் மங்கல்யங் கழுத்திலுள்ளப் பெண்களைப் பிடிக்கலாகாதென்று மகமதியர்கள் யாவரும் அறிவிக்கச்செய்துவிட்டு தங்களைச்சார்ந்தவர்கள் யாவருக்கும் சிறுவயதிலேயே பெண்களுக்கு விவாகஞ்செய்து மஞ்சட்சரடைக் கழுத்திலணைந்துவிடுங்கோள் அப்போதுதான் மகமதிய பாலியர்கள் நமது பெண்களை துராக்கிரமமாய் பிடிக்கமாட்டர்கள். மஞ்சள் சரடில்லாதோரைப் பிடித்துக்கொள்ளுவார்களென்று கூறியவுடன் அவர்களது மரபினர் சிறுவயதிலேயே விவாகஞ்செய்துவிட ஆரம்பித்துக்கொண்டதுடன் அவர்களது மதங்களைத் தழுவிய இத்தேசத்தோரும் சிறுவயதிலேயே பெண்களுக்கு விவாகஞ்செய்து விட ஆரம்பித்துக் கொண்டார்களாம். இத்தகைய விதிவழிகளை அநுசரித்து வருங்கால் விதவைகளாகிவிட்டப் பெண்களுக்கு மஞ்சட்சரடை எடுத்துவிட வேண்டியதானபடியால் அவர்களுள் ரூபவதியானவர்களை மகமதியர்கள் பிடித்துக்கொள்ள ஆரம்பித்து விட்டார்களாம்.

அதனால் கைம்பெண்களின் அழகைக் குறைத்துவிடவேண்டி அவர்களுக்கு நல்ல ஆடைகளும் ஆபரணங்களும் அணியாது சீரைக் கெடுத்ததுடன் தலைமயிரையுங் கழித்து மொட்டையடித்துவிடும் வழக்கத்தில் கொண்டுவந்துவிட்டார்களாம். இச்சிறுப்பெண்களை விவாகஞ் செய்து விடுவதும் குமரபருவ விதவைகளை மொட்டையடித்துவிடுவதும் சில மகமதிய பாலியர்களின் பயமே காரணமாகக்கொண்டு செய்து வந்ததாக விளங்குகின்றதேயன்றி வேறோர் சீர்திருத்தவாதாரங்களுங் கிடையாது சீர்கேட்டிற்கே மூலமாகிவிட்டது. அத்தகைய பயம் நீதியும் நெறியும் கருணையும் அமைந்த இப்பிரிட்டிஷ் அரசாங்கத்தில் இல்லாதபடியால் இக்காலத்திலும் அவற்றை அநுசரிப்பது வீண்செயலேயாதலின் சீர்திருத்தக்காரர்கள் அவற்றைக் கண்ணுற்று சிறுவயது விவாகத்தை அகற்றி விதவாவிவாகத்தை வழிக்குக் கொண்டு வருவார்களென்று நம்புகிறோம். “பழையன கழிதலும் புதிய புகுதலும், வழுவலகாலவ கையினானே” என்னும் சமணமுநிவர்கள் விதிப்படி காலத்தை அநுசரித்து தேசசீர்திருத்தத்தைச் செய்யவேண்டியதே அழகாம்.

- 6:27: டிசம்பர் 11, 1912 -