அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/283-383
279. இராஜாங்க பெண் வைத்தியசாலையோர் கருணை வைத்தல் வேண்டும்
அதாவது நீதியும் நெறியுங் கருணையும் அமைந்த நமது பிரிட்டிஷ் ராஜாங்கத்தோர் மக்கள்மீதும் மிருகங்களின்மீதுங் கருணை வைத்து வைத்தியசாலைகளை கட்டிவைத்து மாதம் ஒன்றுக்கு ஐன்பதினாயிரம் இலட்சமென்னும் செலவிட்டு டாக்ட்டர்களையும், அப்பாத்தகரிகளையும், டிரசர்களையும், கம்பவுண்டர்களையும், பெண்வேலைக்காரர் நர்சுகளையும், மற்றுஞ் சிப்பந்தி, வேலைக்காரர்களையும் நிறுமித்து ஏழைகள் முதல் கனவான்கள் வரையில் பேதமில்லாமலும் பெரியசாதி சின்னசாதி என்னும் பாரபட்சமில்லாமலும் அந்தந்த வியாதியஸ்தர்களுக்குத் தகுந்த அவுஷதங்களைக் கொடுத்து அவர்களுக்கு வேண்டிய உணவுகளைக் காலந்தவிராமல் ஈய்ந்து உத்தியோகஸ்தர் இரவும் பகலும் விழித்து பாதுகாத்துவருஞ்செயல்களையும் ஐரோப்பிய டாக்ட்டர் நர்ஸ் இவர்களின் பராமரிப்பையும் நோக்குங்கால், வியாதியஸ்தர்கள் தங்கள் தங்கள் வீடுகளில் எவ்வளவு பணமும் எத்தகைய யேவலர்கள் இருப்பினும் அத்தகைய சுகமும் பராமரிப்பும் நடவாதென்பதே திண்ணம். சிற்சில கருணையற்றக் குறைகள் இருந்தபோதினும் அவைகள் யாவும் சாதியாசாரத்தை செத்தாலும் மறக்கேன் என்னும் பிடிவாதம் உற்றுள்ளவர் பாலிருக்குமே அன்றி ஐரோப்பியர்கள் பாலிருக்கவேமாட்டாது.
மநுக்களுக்கு உண்டாகிவரும் இத்தியாதி சுகங்களில் பெண்கள் பாலர் ஓர் குறைவை மட்டிலும் மனத்தாங்கலுடன் கூறிவருகின்றார்கள். அவையாதெனில், கற்பஸ்திரீகள் வைத்தியசாலைக்குச் சென்றவுடன் பாலிய புருஷர்கள் தங்கள் உடலைப் பார்ப்பதும் தொடுவதையுமே மிக்க மனத்தாங்கலுடன் பேசிக்கொள்ளுகின்றார்கள். இத்தேசத்துள்ளப் பெண்களுக்குள் நாணமும் பயிர்ப்பும் உள்ளவர்கள் மிகுத்தேயிருக்கின்றார்கள். அத்தகையோர்களுக்கு அன்னிய பாலிய புருஷர்கள் அருகில் வருவதும் அவயவங்களை சோதிப்பதும் தொடுவதும் அறுவெறுப்பாகவே காணப்படும். ஆதலால் புருஷர்கள் பார்வையிலுள்ள வைத்தியசாலைக்குப்போய்ப் பிரசவித்துவரும் பெண்கள் ஒவ்வொருவர் நாவிலும் இம்மனத்தாங்கலான வார்த்தையையே பேசிக்கொண்டு வருகின்றார்கள். இவ்வகையான வார்த்தையைக் கேட்டுள்ள சில பெண்கள் யாதுவருத்தம் உண்டாய போதினும் வைத்திய சாலைகளுக்குப் போகவேமாட்டோமென்னும் பிடிவாதத்துடன் வீட்டிலேயே அதிக கஷ்டத்துடன் பிள்ளைப் பெறுகின்றார்கள். சிலருக்கு அதிக கஷ்டம் நேரிட்டு இஸ்மரணைக் கெட்டப்பின் வைத்தியசாலைக்கு எடுத்துப் போகின்றார்கள். சிலரோ பிரசவ வேதனை அதிகரித்தும் வைத்திய சாலைக்குப் போகாமல் பிராணனையே விடுகின்றார்கள். கருணைதங்கிய பிரிட்டிஷ் ஆட்சியில் நடத்திவரும் வைத்தியசாலைகளில் சகலமான சுகங்களும் ஆனந்தமாக அனுபவித்து வந்தும் பாலியப்பெண்களை அன்னிய பாலிய புருஷாள் அவயவங்களைப் பார்ப்பதுந் தொடுவதையுமே மிக்க மனத்தாங்கலாகப் பேசிக்கொள்ளுவதை அறியும் கருப்பிணிப் பெண்களின் புருஷர்களும் ஆயாசத்தில் ஆழ்கின்றார்கள். இத்தியாதி குறைகளையும் நமது கருணைதங்கிய வரசாட்சியார் நோக்குற்று அந்தந்தப் பிரசவ வைத்தியசாலைகளில் பெரும்பாலும் ஐரோப்பியப்பெண் நர்ஸுகளேயிருந்து பார்வையிடவும் அவர்களாலுங் கூடாதப் பிரசவ வேதனை நேரிட்டுப்போகுமாயின் அக்காலத்தில் மட்டும் புருஷ டாக்ட்டராயுள்ளப் பெரியோர்களைக் கொண்டு காப்பாற்றும்படியான உத்திரவை அளிப்பார்களாயின் வைத்தியசாலைகளை நிறுமித்துச் செய்துவரும் பேருபகாரங்களில் பெண்களின் நாணத்தை நிலைபெறச்செய்யும் இதுவுமோர் உபகாரமாக விளங்கும். ஐரோப்பிய பெண் டாக்ட்டர்களும் பெண் நர்சுகளும் இருந்து பிரசவேதனைகளைத் தீர்க்கின்றார்கள், புருஷ டாக்ட்டர்களிருந்து பார்வையிடுவதுகிடையாதென்று தேசப்பெண்களுக்குத் தெரிந்துவிடுமாயின் கருப்பிணிப்பெண்கள் ஆனந்தமாக வைத்தியசாலைக்கு வருவதுடன் தங்கள் தங்கட் புருஷர்களும் யாதோர் ஆயாசமுமின்றி வைத்தியசாலைக்கு அனுப்பி சுகாதாரத் தேடிக்கொள்ளுவார்கள். கருணைதங்கிய ராஜாங்கத்தார் செய்துவரும் உபகாரங்களில் கருபிணிகளுக்காய இவ்வுபகாரத்தையுஞ் செய்து விடுவார்களாயின் வீடுகள் தோரும் ராஜாங்கக் கருணையையும் சிறப்பையுங் கொண்டாடுவதுடன் வந்தனவாழ்த்தலுங் கூறிக்கொண்டாடுவார்கள்.
கருப்பிணியாயுள்ளப் பெண்களின் வீடுகள் தோரும் பாலியப்பெண்களை அன்னிய பாலிய புருஷர் அவயவங்களைப் பார்ப்பதையும் தொடுவதையுமே மிக்க மனத்தாங்கலுடன் பேசுவதுடன் வருவதற்கும் பயந்து நிற்கின்றார்கள். இப்பயத்தை நீக்கி அன்பையும் ஆனந்தத்தையும் பெருகச் செய்ய வேண்டுகிறோம்.
- 6:28; டிசம்பர் 18, 1912 -