அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/284-383
280. நமது இந்தியதேசச் சக்கரவர்த்தியாரின் அன்பின்மிகுதி
நமது இந்திய மாதாவாக விளங்கிய குயின் விக்டோரியா பெருமாட்டியின் பெளத்திரரும் ஏழாவது எட்வர்ட் அரசரவர்களின் புத்திரருமாகிய ஐந்தாவது ஜார்ஜ் அரசரவர்கள் இந்திய தேசத்திற்கே வந்து சக்கிரவர்த்திப் பட்டங்கட்டிச்சென்று இந்த டிசம்பர் மீ 12உ யோடு முதல்வருஷம் முடிவானபடியால், அதனைக் கோறி நமது கருணைதங்கிய சக்கிரவர்த்தியார் இந்தியதேச மக்களின் சுகாசுகங்களை வினவி, வேண்டும் ஆசிகூறி எழுதிய கடிதத்திற்கு இந்தியதேச கவர்னர் ஜெனரலவர்கள் வேண நற்செயலாய மாறுத்திரம் எழுதியதையுந் தெரிந்து மிக்க ஆனந்திக்கின்றோம். எப்போது இந்திய தேசத்திற்கே வந்து இந்தியதேசச் சக்கிரவர்த்தியென்னும் பட்டம் தரித்துக்கொண்டாரோ. அவரது உடல் இலண்டனிலிருந்தபோதிலும் மனோவியாபகம் யாவும் இந்திய தேசத்தின் மீதும் அவரது ஆளுகைக்குட்பட்ட மக்கள்மீதுமே இருக்குமென்பதே திண்ணம். அத்தகைய சக்கிரவர்த்தியார் கருணையின் மிகுதிக்குத் தக்கவாறு இந்தியாவில் அவரது ஆளுகையை நடத்திவரும் பெரியோர்களுங் கருணை வைப்பார்களாயின் இந்தியதேசம் சிறப்படைவதுடன் தேசமக்கள் சகலருஞ் சுகச்சீரடைவார்கள்.
இத்தேசவாசிகளாகிய சிலர் ஐரோப்பியர்களைப்போல் தங்களுக்கும் மேலான உத்தியோகங்களைக் கொடுக்கவேண்டும். ஆட்சியில் சகல சுதந்திரமும் தரவேண்டுமென்னுங் கூட்டங்கள் கூடி பெருங்கூச்சலிட்டு வருகின்றார்கள். அத்தகையக் கூச்சலை நடத்துவதற்கு முதன்மெயாயுள்ளோர் நாலைந்து பெயர்களே தவிர நானூறு ஐன்னூறு பெயர்கள் கிடையாது. கூட்டமாக வந்து கூடி ஒருவர் தன் கையை உயரத்தூக்கியவுடன் எல்லவருங் கைதூக்குவதற்கு மட்டிலுஞ் சேருவார்களன்றி விவகாரங்களை ஒன்றுமறியார்கள். அவர்களுக்குப் பெரும்பாலும் என்ன விவகாரம் தெரியுமென்னில் அவன் சின்னசாதி, நான் பெரியசாதி அவன் கப்பலேறிப்போனான் சாதிகட்டுகட்டவேண்டும், இவன் தொட்டுவிட்டான் தலைமுழுகவேண்டும், அந்தக் கோவில் வருமானம் வடகலையாருக்குச் சொந்தம், இந்தக்கோவில் வருமானம் தென்கலையாருக்குச் சொந்தமெனக் சீறிச்சினந்தும், ஒருவரைக்கண்டால் மற்றொருவர் முறுமுறுத்துத் திரிவதேயாம். இத்தகைய சாதி விவகாரம் சமய விவகாரங்கள் போதாது, கோவில்களில் கிடைக்குந் தோசைக்கும் சண்டையிடும் விவகாரங்கள், நாட்டுகளில் அவர்கள் யாவருக்கும் பூமிகள் கொடுக்கப்படாது, யாங்களே சகல சுகங்களையும் அநுபவித்துக்கொள்ள வேண்டுமென்னும் விவகாரங்களுக்கு உதவியாக தங்களுக்குள்ளக் கருணையும் சீவகாருண்யமும் அற்றச் செயலால் ஆறுகோடி ஏழை மக்களை தங்களை ஒத்த மனுக்களாச்சுதே என்னும் எண்ணாது சுத்தநீரை மொண்டுகுடிக்கவிடாத விவகாரமே பெரிதாகக்கொண்டு பேச்சு வீச்சியிலுமே இருப்பார்கள். இவ்வகையானக் கருணையற்றவர்களும் கனவிலும் சீவகாருண்யம் இல்லாதக் கூட்டத்தோர்மீது கருணையும் நீதியும் சீவகாருண்யமும் நிறைந்த நமது சக்கிரவர்த்தியார் பூர்த்தியாய கருணைவைத்து அதிகாரங்களை முற்றுங் கொடுத்துவிடுவார்களாயின், சாதிபேதத்தால் நசுங்குண்டுள்ள ஆறுகோடி மக்களும் அடியோடு நாசமடைந்துவிட வேண்டியதேயாம்.
பொய்யாகிய சாதிவேஷம் இத்தேசத்தைவிட்டு எப்போது துலைக்க முயல்கின்றார்களோ அப்போதுதான் இந்திய தேசத்தோருக்கு சுயராட்சியமும் மற்றுமுள்ளப் பெரும் உத்தியோகங்களும் ஐரோப்பியர்களைப்போல் சகலசுதந்திரங்களுங் கொடுக்கவேண்டுமேயன்றி, இப்பொய்யாகிய சாதிவேஷங்கள் இந்தியாவில் இருக்குமளவும் கருணை மிகுத்த நமது சக்கிரவர்த்தியாரும் இந்தியாவில் அவரது அரசை நடாத்தும் கவர்னர் ஜெனரலும் மற்றும் கவர்னர்களும் தேசத்தோர் செயல்களைக் கண்டே காரியாதிகளை நடத்துவார்களென்று நம்புகிறோம். ஐரோப்பியர்களுக்குள்ள ஒற்றுமெயும், ஐரோப்பியர்களுக்குள்ளத் திட்டமும், ஐரோப்பியர்களுக்குள்ள கருணையும், ஐரோப்பியர்களுக்குள்ள நீதிநெறியும், ஐரோப்பியர்களுக்குள்ள வித்தை புத்தி யீகை சன்மார்க்கமும் இந்திய தேச சாதிபேதமுள்ளோருக்கு உண்டாகுமாயின் அப்போதுதான் ஐரோப்பியருக்குள்ள சுதந்திரம் பொருந்துமேயன்றி மற்ற ஒருபோதும் பொருந்தாவாம். நமது கருணைமிகுத்த சக்கிரவர்த்தியார் இந்தியக் குடிகளை அன்பில் மிகுத்த விசாரிணைப் புரிந்தபோதிலும் இந்தியருக்குள்ள சாதிபேத வூழலும், சமய பேத பொறாமெயும், குறுக்குபூசு நெடுக்குபூசு முறுமுறுப்புக்கொண்டு ஒற்றுமெயற்ற வாழ்க்கையிலிருப்பது ஒன்றையும் அறியார். இவ்விவேகமற்ற சூழல்கள் யாவையும் வெள்ளெனவிளக்கி காங்கிரஸ் கமிட்டியாரையும் மகாஜன சபையோரையும் நோக்கி உங்களுக்குள்ள உள்ளூழல்களை முன்பு நீக்கி சீர்திருத்தி செவ்வைபடுத்திக்கொண்டு பின்னர் ஐரோப்பியர்களைப் போன்ற சுதந்திரங்களைக் கேட்கவைக்கும்படி செய்வதே பேருபகாரமும் நமது கருணைதங்கிய சக்கிரவர்த்தியாரின் ஆனந்த அரசாட்சியுமாகும்.
- 6:29; டிசம்பர் 25, 1912 -