அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/285-383
281. நமது கவர்னர் ஜெனரலுக்கு நேர்ந்த அபாயமும் சென்னை சிவில் செர்விஸ் கமிஷனும்
கல்கத்தாவில் நேர்ந்துவந்த மனத்தாங்கல் யாவற்றையும் நமது சக்கிரவர்த்தியார் வந்து டெல்லியில் பட்டங் கட்டிக்கொண்டபோது கல்கத்தாவாசிகளுக்கு எதனால் மனத்தாங்கல் உண்டாயுள்ளதென்று ஆராய்ந்து தேசபிரிவினைகளை ஒன்றுபடுத்தி சகலருக்குள்ள மனத்தாங்கல்களையும் அகற்றி ஆனந்தவாழ்க்கையில் இருக்கச் செய்ததுமன்றி மற்றுமுள்ளக் குறைகளையும் அகற்றி சுகவாழ்க்கைப் பெறச்செய்வதற்கே சிலகாலங்களுக்குமுன் கல்கத்தாவிற்கு கவர்னர் ஜெனரலாய் இருந்தவருடைய பெளத்திரர் ஒருவரையே கவர்னர் ஜெனரலாக உறுதிப்படுத்தி காரியாதிகளை நடாத்திவரும்படி செய்துவிட்டுப்போய்விட்டார். இக்கவர்னர் ஜெனரல்லவர்களின் முழுநோக்கமும் செயலும் எவற்றை நாடியிருந்தாரென்னில் தேசக்குடிகள் யாவருங் கல்விகற்று அறிவுபெருக வேண்டுமென்பதேயாம். அஃதேதெனில் சகல மக்களுங் கல்விகற்று அறிவுபெருகி நிற்பார்களாயின் அவர்களுக்கு சுயராட்சிய பாரமளிக்கினும் சுகவாழ்க்கையே அடைவார்களென்பதேயாம். மற்றப்படி குடிகளுக்கு யாதோர் இடஞ்சலும் இக்கட்டும் நிகழ்ந்ததன்று. அவர்கள் நன்னோக்கங்களையும் செயல்களையும் கண்ணுற்றுவரும் அவரது பத்தினியாரும் அதே நன்னோக்கத்தைப் பின்பற்றி பல பெண்கள் கூட்டங்களுக்குஞ் சென்று பெண்களுக்கும் கல்வி விருத்தி செய்விக்க வேண்டுமென்னும் வேண நன்முயற்சிகளை செய்து வருகின்றார்கள். அத்தகைய நன்னோக்கமும் நன்முயற்சியுமுள்ள கவர்னர் ஜெனரலும் அவரது பத்தினியாரும் வீதியில் வருங்கால் வீணாம் ராஜ துரோகப் படுபாவிகள் வெடிகுண்டெரிந்து அவர்களைக் கொல்லும்படி எத்தனித்தார்கள். அவ்வெடிகுண்டு தவறி அருகில் பாதுகாப்பாளராகச் சென்ற ஓர் ஜமேதாரைக் கொன்றுவிட்டதுமன்றி கவர்னர் ஜெனரல் புஜத்தில் மட்டுங் காயப்படுத்திவிட்டதாம். அக்குண்டானது கவர்னர் ஜெனரலுக்கும் அவரது பத்தினியாருக்கும் மத்தியில் விழுந்திருக்குமாயின் இருவரும் இறந்தேபோயிருப்பார்கள்.
அவ்விருவரும் அத்தேசத்தோருக்குச் செய்துவந்த நல்வினைப்பயனே அவர்களுயிரைக் காத்ததென்பதற்கு அறிகுறியேயாம்.
அத்தகைய நற்குணமும் நற்செயலும் அமைந்த கவர்னர் ஜெனரலைக் கொல்ல உத்தேசித்த படும்பாவ ராஜதுரோகிகள் எத்தகைய வஞ்சினமும் பொறாமெயும் வைத்திருந்தார்களோ விளங்கவில்லை. இவ்விராஜ துரோகப்படும்பாவச்செயலும் எண்ணமும் ஏழை எளியோர்களுக்குத் தோன்றியிருக்க மாட்டாது. பழைய பொறாமெய் மிகுத்த வஞ்சினர்களாய கனவான்களும் உத்தியோகஸ்தர்களுமே அந்தரங்கத்திற்கூடிய செய்திருப்பார்கள் என்றே ஆலோசிக்கவேண்டியதாகின்றது. பிரிட்டிஷ் அரசாட்சியைக் கைப்பற்றவேண்டுமென்னும் அவாமிகுத்தவர்களுக்கே இத்துரோகச்சிந்தை ஊன்றியிருக்குமேயன்றி ஏழை எளியோர்களுக்கு இராதென்பது திண்ணம்.
இத்தகையப் பேரவாமிகுத்த வஞ்சினர்களும் கருணையென்பதே கனவிலுமில்லாதவர்களும் செய்நன்றியை சிந்தையில் வையாதவர்களும் தங்கள் காரியம் முடியும் வரையில் தாளைபிடித்து காரியம் முடிந்தவுடன் சிரோமயிர் பிடிப்பவர்களும் உள்ளத்தில் ஒன்றும் வெளியில் ஒன்றும் பேசுவோர்களுமாகிய சிலர் வாசஞ் செய்யும் இத்தேசத்தில் கமிஷன் ஏற்படுத்தி சிவில் செர்விசை யோசிப்பதை அடியோடு நிறுத்தி தற்காலம் நிறைவேறிவரும் பரிட்சையையே சரியான வழியில் நடைபெறச் செய்யவேண்டியதே அழகாம்.
அதாவது பிரிட்டிஷ் அரசாட்சியைச் சார்ந்த ஐரோப்பியர்கள் பெற்றுவரும் அந்தஸ்தான உத்தியோகங்களைப் பெறவேண்டுவோர் அவர்கள் நீதிபடியும் அரசு எவ்வழியோ குடிகளும் அவ்வ வழியென்னுமுறைபடியும், ஐரோப்பியருக்குள்ளசாதி பேதமில்லா குணமும் சகலர்மீதுங் கருணைவைத்து பேதமின்றி செய்யுஞ்செயலும், வித்தையில் முயற்சியும் புத்தியில் தீவிரமும் உண்டாகும் வரையில் ஐரோப்பியர் பெற்று வரும் அந்தஸ்தான உத்தியோகங்களையும் ஐரோப்பியர் பெற்றுவரும் அதிகார உத்தியோகங்களையுங் கொடுப்பதாயின் இத்தேசத்து உழைப்பாளி ஏழைக்குடிகளும் நசிந்து தேசசிறப்புங் குன்றி இராஜாங்கத்தோருக்கும் அதிக தொல்லையும் ஆயாசமும் உண்டாகிப்போம். நமது கருணைதங்கிய ராஜாங்கத்தோர் கமிஷன் விட்டு சிவில் சர்விசைப்பற்றி ஆலோசிப்பதை நிறுத்தி மிலிட்டேரி ஆலோசினையைக் கடைபிடித்து வீணாய் கட்டிடச் செலவுகளையும் வீணாய மறாமத்துச் செலவுகளையும் வீணாய வீதிச்செலவுகளையுங் குறைத்து அப்பணத்தைக் கொண்டு பெருங்கூட்டத்தோர் வாசஞ்செய்யுமிடங்களில் ஒவ்வோர் ஐரோப்பிய ரிஜிமெண்டையும், சிறுந்தொகையோர் வாசஞ்செய்யுமிடங்களில் ஒவ்வோர் கம்பனிகளையும் வைத்துக் காப்பதுடன் சிவில் செர்விஸ் அந்தஸ்தான உத்தியோகங்களுக்கு சிவில்செர்விஸ் ஐரோப்பியர்களையும், அதிகார உத்தியோகங்களுக்கு மிலிட்டேரி ஐரோப்பியர்களையும் வைத்து பிரிட்டிஷ் ஆட்சியை நடத்துவதாயின் அந்தரங்க ராஜதுரோகிகள் அடியோடு அடங்குவதுடன் இராஜதுரோகிகளை அடுத்துவாழும் இராஜவிசுவாசிகளுங் கவலையற்று வாழ்வார்கள். அரசாட்சியோருக்கும் அதிக தொல்லையில்லாமற்போம். இத்தேசத்துள் வாசித்துள்ளோரெல்லாம் பெருங்கூட்டமிட்டு பெருங்கூச்சலிட்டு அதிகார உத்தியோகங்கள் கேட்போர் யாவரும் ஐந்துபேர் முயற்சியுள்ளவர்கள் முயலுவாராயின் அவர்களுடன் ஐன்னூறு பெயர் சேர்ந்துகொள்ளுவது வழக்கமாகும். அக்கூட்டத்தோர் செயல் சகலசாதிக் கூட்டத்தோருக்கும் பொருந்தா செயலேயாம். அவ்வகைக்கூடி ராஜாங்க உத்தியோகங் கேட்போர் சகலசாதியோரிலும் பத்து பெயர் பத்து பெயரைத் தருவித்து பெருங்கூட்டமிட்டு அக்கூட்டத்தோர் சம்மதப்படி கேட்பார்களாயின் அச்செயலால் சகலசாதியோரும் முன்னேறி சுகச்சீர் பெறுவார்கள். அங்ஙனமின்றி ஐந்து பெயர் முயற்சியில் ஐன்னூறு பெயர் தன்னவர்களைக் கூட்டிக்கொண்டு இராஜாங்கத்தோரை ஏதொன்றைக் கேட்கவும் இராஜாங்கத்தோர் அதற்கு செவிசாய்த்து அந்தஸ்த்தான உத்தியோகங்களையும் அதிகார உத்தியோகங்களையுங் கொடுத்துவருகின்ற படியால் இன்னும் வெடிகுண்டாலுந் துப்பாக்கியாலும் பயமுறுத்தினால் சுயராட்சியமே அளித்துவிடுவார்களென்னும் பேராசையாலும் நயவஞ்சகத்தாலும் கெடுக்க ஆரம்பிக்கின்றார்கள். அவர்கள் முன் பிரிட்டிஷ் செங்கோலை நீட்டுவதால் பயனில்லை. சற்று கொடுங்கோல் நீட்டவேண்டியதாதலின் பெருங்கூட்டமென்று செவிகொடுத்தல் சீவகாருண்யமற்ற சாதிபேதமுள்ள இத்தேசத்திற்குப் பொருந்தாவாம். பொருந்த வேண்டுமாயின் இவர்களுக்குள்ள சாதிபேதத்தை ஒழித்தே தீரல்வேண்டும். அது ஒழியுமளவும் இவர்களது கூட்டக்கோறிக்கை இத்தேசத்திலுள்ள ஆறுகோடி மக்களை அல்லலடையச் செய்து தேசத்தின் சிறப்பழிவதுடன் தேசமக்களில் சிலர் சீர்பெற்றும் பலர் பாழடைந்தும் போவார்கள். ஆதலின் நீதியும் நெறியும் கருணையும் அமைந்த ராஜாங்கத்தார் இதனைக் கண்ணுற்று நமது கவர்னர் ஜெனரலைக் கொல்ல ஆரம்பித்த ராஜதுரோகிகளை அத்தேசத்தோர் பிடித்துக்கொடுக்குமளவும் இச்சிவில் செர்விஸ் கமிஷன் ஆலோசினையைத் தடைச்செய்து வைப்பார்களென்று நம்புகிறோம்.
- 6:30; ஜனவரி 1, 1913 -