அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/286-383
282. யதார்த்த ராஜவிசுவாசிகளுக்கு விண்ணப்பம்
அன்பர்காள்! வித்தையும் புத்தியும் யீகையும் சன்மார்க்கமும் சீவகாருண்யமும் நீதிநெறியும் பூரணமாக நிறைந்த நமது பிரிட்டிஷ் அரசாட்சியார் இதுகாரும் இந்தியதேயத்தை வந்து அரசாட்சி நடத்தாமற் போயிருப்பார்களாயின் தேசங்கள் என்ன சீர்கெட்டிருக்கும், தேசத்தில் வாழும் மக்கள் என்ன சீரழிந்திருப்பார்களென்பதை அவரவர்களே தங்கள் தங்கள் மனசாட்சிக்கு விரோதமின்றி சீர்தூக்கி ஆலோசிப்பார்களாயின் அங்ஙனமே விளங்கிப்போம்.
அதாவது புத்ததன்மமானது இந்தியதேய முழுவதும் பரவியிருந்த காலத்தில் சகல மனுமக்களும் ஒற்றுமெயுற்று வித்தையிலும் புத்தியிலும் ஈகையிலும் சன்மார்க்கத்திலும் நிறைந்து குருவிசுவாசம் இராஜவிசுவாசத்திலும் அமைந்து சகலமக்களும் சுகச்சீர்பெற்று நல்லொழுக்கம், நன்நீதி, நன்ஞானம், நற்கடைபிடியினின்று நல்வாழ்க்கைப் பெற்றிருந்தபடியால் அக்காலத்தில் இந்தியதேய முழுவதும் நிறைந்திருந்த மநுமக்கள் முப்பத்திமூன்றுகோடி பெயரையும் முப்பத்திமூன்று கோடி தேவர்களென்று அழைக்கும்படியாக வாழ்ந்து வந்தார்கள். காரணம் அவர்களுக்கிருந்த குருவிசுவாச நம்பிக்கையும், இராஜவிசுவாச அன்பின் மிகுதியுமேயாம்.
அதன்பின்னர் புத்ததன்மத்திற்கு எதிராகவே அபுத்ததன்மக் கூட்டத்தோர் இத்தேயத்தில் வந்து குடியேறி தங்களுடைய நயவஞ்சகத்தாலும் மித்திரபேதத்தாலும் தங்கள் சுயப்பிரயோசனங்களுக்காக ஒற்றுமெயுடன் வாழ்ந்திருந்த குடிகளை சாதிபேதமென்னும் பிரிவினைகளை உண்டு செய்தும் ஞான ரீதியில் நிறைந்திருந்த குடிகளை அஞ்ஞானமாம் பொய்தேவதைகளென்னுஞ் சிலாலயங்களை உண்டு செய்து நல்லுழைப்பிலும், நல் வித்தையிலும், நன்முயற்சியிலும் இருந்த மக்களை கல்லையுங் கட்டையையும் வணங்கிக் கொண்டால் கேட்ட வரமெல்லாம் சாமிகொடுப்பாரென்று சோம்பேறிகளாகச் செய்துவிட்டதுமன்றி, தங்கள் பொய்ப் போதகங்களுக் கடங்காத அரசர்கள் யாவரையும் மித்திரபேதங்களால் கொன்றும், தங்கள் பொய்ப்போதகங்களை செவியிற் கேளாமலும் மாடுகளையுங் குதிரைகளையும் மநுக்களையும் உயிருடன் நெருப்பிலிட்டுச் சுட்டுத் தின்னுங் கொடும் பாவிகளாகிய மிலேச்சர்களென்று அவர்களைக் கண்டயிடங்களிலெல்லாம் அடித்துத் துரத்திவந்த விவேக மிகுத்தவர்களையும் வித்தையில் தேர்ந்தவர்களையும் உழைப்பில் ஊக்கமுடையவர்களையும் பூமிக்கென்றே உழைத்து தானியவிருத்தி செய்து வந்தோர்களையுந் தாழ்ந்த சாதியோரென வகுத்து அவர்களை எவ்வகையினுந் தலையெடுக்கவிடாத கொடுந் துன்பங்களைச் செய்தற்கு ஆரம்பித்துக்கொண்டதுடன் இத்தேசத்தோர்களும் தங்கள் வித்தைகளையும் சோரவிடுத்துப் பெருஞ்சோம்பேறிகளாகி உடைந்தையாய சத்துருக்களாகிவிட்டபடியால் வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கங்கள் யாவும் அழிந்து துன்மார்க்கங்களாம் சாதி சண்டைகளும் சாமி சண்டைகளும் ஒற்றுமெக்கேடுகளும் வித்தையின் குறைவுகளும் விவசாய நாசங்களும் நாளுக்குநாள் அதிகரித்து தேச சிறப்பழிந்தும் தேசமக்கள் சீர்குலைந்தும், சோம்பேறிகளே மிகுத்து பிச்சையிரந்துண்போரே அதிகரித்து, ஈவோர், குறைந்துவருங்கால் மகம்மதியர் துரைத்தனமும், போர்ச்சுகியர்துரைத்தனமும், பிரான்சியர் துரைத்தனமும் வந்து தோன்றிய போதினும் தேச்சிறப்பும் தேசமக்கள் சுகமும் குறைந்தே நின்றதன்றி நிறைந்தது கிடையாது. அதே நிலையில் இதுகாரும் இருக்குமாயின் தேசங்களென்ன சிறப்பழிந்திருக்குமோ தேசமக்கள் யாவரும் என்ன சீரழிந்து கேடுற்று மிருகாதிகளினும் மதிகெட்டு மடிந்திருப்பார்களோ என்பது தற்காலத்திய சாதித்தலைவர்கள் செய்துவருஞ் செயல்களே போதுஞ்சான்றாம்.
இந்தியதேயத்தின் பூர்வபுண்ணியபலத்தால் பிரிட்டிஷ் துரைத்தனம்வந்து தோன்றி தேசங்களெங்கும் மாடமாளிகைகள் பெருகவும், கூடகோபுரங்கள் உயரவும், தேசங்களுக்கு தேசம் பாதைகள் உண்டாகவும், புகைரதங்கள் போகவும், புகைகப்பல்கள் யேகவும், தந்திசங்கதிகள் போகவும், தபால்சங்கதிகள் வரவும், வீதிக்குவீதி சீரடையவும், வீதியில் வாழு மக்கள் நாகரீகம் அடையவும் பிச்சையிரந்துண்டவர்கள் எல்லாம் பெரும் பாக்கியசாலிகளாகவும், பேதைமக்களெல்லவருங் கல்விவிருத்தியடையவும், சகலசாதி பெண்டு பிள்ளைகள் அனைவரும் ஆடை ஆபரணமணையவும் ஆனந்தமாக உலாவவும் தேசத்திற்கு தேசங் காவலர்கள் பெருகவும், கள்ளர் பயமின்றி வாழ்கவும், தங்கள் தன்னவர் அன்னியரென்னும் பட்சபாதமற்ற செங்கோலை கருணை நிறைந்த ஆட்சியால் ஆண்டு வருகின்றார்கள். இத்தகைய தன்ம துரைத்தனத்தின் மீது விரோதச்சிந்தையை வகுத்துள்ளவர்கள் எத்தகைய நன்றிகெட்ட நயவஞ்சினர்களாயிருப்பார்கள், எத்தகையப் படும்பாவிகளாயிருப்பார்கள், எத்தகையக் கெடுயெண்ணமிகுத்தக் கொலைஞர்களாயிருப்பார்கள். அத்தகையக் கீழ்மக்கள் வாசஞ்செய்யுமிடத்திலும் வசிக்கலாமா, இராஜதுரோகிகள் முகத்திலும் விழிக்கலாமா, கிராமத்திற்கு ஒரு இராஜதுரோகி இருப்பானாயின் அக்கிராமமே பாழடைந்துபோகுமே, தேசத்திற்குள் இரண்டு இராஜதுரோகிகள் இருப்பார்களாயின் அத்தேசமே சீரழிந்துபோகுமே. தெய்வம் நின்றுகொல்லுமாயின் அரசன் அன்றே கொல்லுமென்னும் பழமொழியும் உண்டே. இராஜதுரோகிகளை அடுத்து வாழ்வதினால் பயமில்லையா, அவர்களைக் கண்டுபிடிக்கும் உபாயமில்லையா, அவரவர்கள் வார்த்தைகளினாலும் செயல்களினாலுமே அறிந்து கொள்ளலாகாதா. யதார்த்த இராஜவிசுவாசிகள் இருப்பார்களாயின் எவ்விதத்தும், அவர்களைக் கண்டுபிடித்து தங்களைவிட்டகற்றும் வழியைத் தேடுவார்கள். அங்ஙனமின்றி குழந்தையையுங் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுபவர் போலும் கோழித் திருடியுங் கூடவே குலாவுவது போலுமாக, யாங்களும் இராஜவிசுவாசிகளென நடித்துத்திரியும் இராஜதுரோகிகளே அதிகரித்திருப்பார்களாயின் படுபாவ துரோகிகளைக் கண்டுபிடிப்பது கஷ்டமே.
சீவகாருண்யமிகுத்த அரசாட்சியோர் மீது சீவகாருண்யமற்ற மக்கள் எதிர்ப்பது பஞ்சுமூட்டைகள் நெருப்பின் மீது எதிர்ப்பது போலாம். தேசத்தை சிறப்படையச்செய்யும் புண்ணியமும், தேசமக்களை சீர்பெறச்செய்துவரும் புண்ணியமுமே பிரிட்டிஷ் அரசாட்சியோருக்கு நிறைந்திருக்கின்றது. இத்தகையப் புண்ணியபுருஷரை வஞ்சினர்களும், பொறாமையுள்ளோருங், குடிகேடரும், அசத்தியரும், அசப்பியரும், துன்மார்க்கரும் எதிர்ப்பதாயின் முக்காலும் ஜெயம் பெறார்களென்பது சத்தியம் சத்தியமேயாம். ஆதலின் யதார்த்த இராஜவிசுவாசிகள் இராஜதுரோகிகளை எவ்விதத்துங் கண்டுபிடித்து அதிகாரிகளிடங் கொடுப்பார்களென்று நம்புகிறோம். கண்டுங் காணாததுபோல் மீனுக்கு வாலும் பாம்புக்குத் தலையுங் காட்டுவது போலும், மீனுக்குங் காவல் பூனைக்குந் தோழனுமாயிருப்பது போலும் உளவறிந்த கள்ளர்களாய் ஒளிந்து நிற்பார்களாயின் “உப்பிருந்த பாண்டமும் உளவிருந்த நெஞ்சமுந் தட்டிவுடையாமல் தானே வுடையும்” என்னும் பழமொழிக்கிணங்க உள்ளுளவுகள் யாவும் தானே வெளிவந்துபோம். அப்போது துக்கித்துத் திண்டாடுவதுடன் இப்போதே இராஜதுரோகிகளைக் காட்டிக் கொடுத்து யதார்த்த இராஜவிசுவாசிகளாக ஆனந்தத்துடன் வெளிவர வேண்டுகிறோம்.
- 8:31: ஜனவரி 8, 1913 -