அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/287-383
283. இராஜதுரோகிகளுக்கு ஓர் விண்ணப்பம்
அன்பர்களே! விரோதச்சிந்தையை அகற்றி நோக்குங்கள். இராஜ விசுவாசிகளையும் அன்பர்கள் இராஜ துரோகிகளையும் அன்பர்களென்னலாமோ என்பாருமுண்டு. புல்லுக்கும் நெல்லுக்கும் மழையானது பொதுவாகப் பெய்வது இயல்பாம். அது போல் பிரிட்டிஷ் ராஜாங்கமானது நல்லோருக்கும் பொல்லாருக்கும் பொதுவாய செங்கோலை நடாத்தி வருகின்றபடியால் அவர்களது ஆட்சியை எடுத்துப்பேசும் போது நாமும் பொதுவாகவே பேச வேண்டியது அழகாதலின் இருவர்களையும் அன்பர்களென்றே கூவி எடுத்தோத வேண்டியதை முடிக்க ஆரம்பிக்கின்றோம். இராஜாங்கத்தின்மீது துவேஷங்கொள்ளுவது தனது கோபத்தால் ஈட்டி முனையில் உதைப்பது போலாம். அது காலில் தைத்தபின் இரணமீறி உபத்திரவம் அடைவதற்குமுன் அஃது ஈட்டிமுனை, தைக்குமென்று அறியவேண்டியதே விவேகிகளின் கடன். ஆய்ந்தோய்ந்து பாராதவன் தான்சாகக் கடவதென்னும் பழமொழியையேனுங் கவனிப்பது அழகாம்.
இந்திய தேசத்தில் கருணை என்பது கனவிலும் இல்லாதவர்களும், அன்பென்பது அகத்திலில்லாதவர்களும், வஞ்சினமே வாழ்க்கையாய் உடையவர்களும், சுயப்பிரயோசனத்தையே குடியாகக் கொண்டவர்களும், மித்திரபேதத்தையே வீடாக உடையவர்களும் தந்திரத்தையே தோழனாகக் கொண்டவர்களும், பொறாமெயே உருவமாகத் தோன்றியவர்களுமாகிய சில கூட்டத்தோர் வாழுமிடத்தை ஆளும் அரசன் தன்னவர் அன்னியரென்னும் பட்சபேதமின்றி சகல குடிகளையும் அன்பு பாராட்டி மித்திரபேத சத்துருக்களின் மனதுக் கிசையாது தனதரசை நடாத்துவானாயின் வஞ்சினக்கூட்டத்தோர் அவ் வரசனை எவ்விதத்துங் கொல்லும் வகைத் தேடிக் கொன்றுவிட்டு அவன் பிள்ளை இருப்பானாயின் அவனை அரசு செலுத்தவைத்து தங்கள் வயப்படுத்திக்கொண்டு சுயப் பிரயோசனத்தைத் தேடிக்கொள்ளுவார்கள். அவ்வரசனுக்கு சந்ததிகள் இல்லாமற் போமாயின் தாங்களே அதற்குள் பிரவேசித்து சகல காரியாதிகளைத் தாங்களுந் தங்கள் சந்ததியோர்களுமே அநுபவித்துக்கொள்ளுவது இயல்பாம். அத்தகையச் செயல்கள் யாவும் தனித்தனியாய அரசாங்கங்களிற் செல்லுமேயன்றி இந்த கிரேட்பிரிட்டனென்று அழைக்கப்பெற்ற பிரிட்டிஷ் அரசாட்சியிற் செல்லுமோ ஓர்காலுஞ் செல்லாவாம். பனங்காட்டு நரி சலசலப்புக் கஞ்சாதது போல் பிரிட்டிஷ் அரசாட்சியார் துப்பாக்கிகளுக்கும் வெடிகுண்டுகளுக்கும் அஞ்சுவார்களோ முக்காலும் அஞ்சார்கள். அவர்களது இளமெய் முதல் முதுமெய்வரையில் துப்பாக்கிகளையும் வெடிகுண்டுகளையுங் கைகளிலேந்தி உலாவுவது குலபழக்கமாகும். அத்தகைய சுத்தவீரர்கள் முன் முந்தியநாள் துப்பாக்கியை ஏந்தியவர்களும் நேற்று வெடிகுண்டைப் பார்த்தவர்களும் இன்று மறைந்து சுடுவதாயின் அதன் சப்தத்திற்கும் அதனால் நேரும் மரணத்திற்கும் பயப்படுவார்களோ, அதனால் அவர்கள் அரசாங்கச் செயல்கள் தடைபட்டுப்போமோ, இன்றுந் தடைபடாது நாளைக்குந் தடைபடாது என்று அறிய வேண்டியதேயாம். கனந்தங்கிய ஆலெஷன்னுங் கலைக்ட்டரைச் சுட்டுக் கொன்றார்கள் அவருக்குப்பின் வேறு கலைக்ட்டர் ஆளுகையில்லாமற் போயினவோ. கவர்னர் ஜெனரலை வெடிகுண்டெறிந்து கொல்லப் பார்த்தார்கள் அவருக்கு நேர்ந்த விபத்தால் வைத்தியசாலைக்குச் சென்ற போதினும் அவரால் டெல்லியில் நடக்கவேண்டிய காரியாதிகள் யாதேனந் தடையுண்டாயிற்றோ; இல்லையே. அவரால் நடக்கவேண்டிய காரியங்களை அவருக்கு அருகாய உத்தியோஸ்தர் நடத்திவிட்டாரன்றோம். இதுபோல் பிரிட்டிஷ் ஆட்சியின் காரியாதிகள் யாவும் குறைவற நிறைவேறுமேயன்றி தடையுற்று இயங்காது. இவைகள் யாவையும் சீர்தூக்கிப் பாராது தான் கெட்டுப் படுபாவி கொலைபாதகன் என்னும் பெயரை ஏற்றுக் கொண்டதுடன் அத்தேசத்தோர் மீதும் இராஜாங்கத்தோருக்கு அயிஷ்டத்தை உண்டாக்கிவிட்டதும் ஓர் விவேகச்செயலாமோ. இத்தகையான துற்செய்கைகளால் தேசமும் தேசக்குடிகளும் சீர்கெடுமேயன்றி இராஜாங்ககாரியாதி களுக்கோர் பின்னம் உண்டாமோ ஒன்றுமாகாவாம்.
இத்தகைய மதிகேடாய துற்செயல்களுக்குப் பிரதிபலன் என்ன நேருமென்றால் கருணை தங்கிய ராஜாங்கத்தோர் குடிகளின் மீது அன்பு பாராட்டி தாங்கள் அடையவேண்டிய கலைக்ட்டர் உத்தியோகங்களையும், தாங்கள் அனுபவிக்கவேண்டிய நியாயாதிபதி உத்தியோகங்களையும் அளித்து சீர்பெறச்செய்து வருகின்றார்கள். அவ்வுத்தியோகங்களின் வாயிலும் மண்ணிட்டுக் கொள்ளுவதற்கேயாம்.
இராஜ துரோகிகளே பிரிட்டிஷ் கவர்னர் ஒருவரைக் கொன்றுவிட்டால் ஆ, ஆ, இவன் மெத்த சுத்தவீரனென்று எண்ணி கவர்னர் உத்தியோகங் கொடுத்துவிடுவார்களோ, துரோகிக்கு உடைந்தையானோர்கள் யாவருக்கும் கௌன்சல் மெம்பர் உத்தியோகங்களை அளித்து விடுவார்களோ, இல்லையே. அகப்பட்டுக் கொண்டபோதல்லவா அதன் பலன் விளங்கும். ஒருவரை ஒளிந்துசுட்டவனும், ஒளிந்திருந்து குண்டெறிந்தவனும் என்றென்றும் ஒளிந்தே திரியவேண்டுமன்றி களங்கமற்று வெளியுலாவுவானோ, படுத்தும் சுக நித்திறைக் கொள்ளுவானே, அல்லது கள்ளனுங் கொலைஞனும் ஓர்கால் அகப்படாமற்போவானோ. அவன் முகமும் செயலுமே அவனைக் காட்டிக் கொடுத்து விடுமே. அக்கால் படுந் துன்பம் அனந்தமாகுமே, அகப்பட்டுக் கொண்டவுடன் உடைந்தையாயிருந்த துரோகிகளெல்லாம் உதவி புரிவார்களோ இல்லை. துரோகச் செயல் புரிந்தவனே சீரழிய நேரும். இதன்றி இராஜாங்கத்திற்கே துரோகியாகத் தோன்றுகிறவன் அவன் தெய்வத்திற்கே துரோகியாகின்றபடியால் இராஜாங்க தெண்டனைக்கு அகப்படாவிடினும் தன்னிற்றானே துக்கத்தை உண்டுசெய்யுந்தெண்டனை நேர்ந்துபோமேயன்றி சுகச்சீருண்டாகமாட்டாது. கள்ளன் பெண்சாதியை என்றுங் கைம்பெண்ணென்று கூறுவதுபோல கொலைஞனுடைய மனைவியங் கூறப்பெறுவாள். இத்தேசம் பெரும்பாலுங் கன்மத்தையே நம்பி நடந்தேறிய தேசமாகும். இத்தேசத்தில் வசிப்போர் துற்கன்மம் புரிவதாயின் தங்களுக்கும் அத் துற்கனமந்தானே நேருமென்பதை அறியாது வீணே இராஜதுரோகி களாவது அழகன்றாம். துவேஷயெண்ணந் தன்னையே துவேஷியொன்றுக் காட்டிக்கொடுத்துத் தன்னையே துன்பத்திற்கு ஆளாக்கிவிடும். இது சத்தியம் சத்தியமேயாம்.
- 6:32: ஜனவரி 15, 1912 -