உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/289-383

விக்கிமூலம் இலிருந்து

285. கருணைதங்கிய கவர்ன்மென்றார் கலாசாலைவுதவியுங் கல்வியின் விருத்தியும்

தற்காலம் நம்மெ ஆண்டு ரட்சித்துவரும் பிரிட்டிஷ் ஆட்சியார் நமக்கு செய்துவரும் நீர்வசதிகளும் நில வசதிகளும் வீதிவசதிக்களும் தந்திவசதி கடிதவசதிகளும் பிரயாணவசதிகளும் ஊர்காவல் வசதிகளும் அபாயத்தைக் காக்கும் வசதிகளும் பிணிகளைநீக்கும் வசதிகளுமான அனந்த உபகாரமாய வசதிகளைச் செய்துவருவதுடன் இவைகள் யாவற்றிற்குக் காரணமாக விளங்குங் கல்வியின் விருத்திக்காகச் செய்துவரும் உபகாரமே பேருபகாரமென்னப்படும்.

அதாவது தேசத்திலும் தேசமக்களிடத்திலுந் தோன்றும் அழகுகள் யாவற்றிலும் கல்வியின் அழகே மிக்கதென இத்தேச சீர்திருத்தக்காரரென விளங்கியப் பூர்வ சமணமுநிவர்கள் வரைந்திருக்கின்றார்கள். “குஞ்சியழகுங் கொடுந்தானைக் கோட்டழகும், மஞ்சளழகு அழகல்ல - நெஞ்சத்து, நல்லம்பாமென்னும் நடுவுநிலையாமெய்க், கல்வியழகேயழகு” என்பவற்றுள் எக்கல்வி அழகுடைத்தாமென்னில் சகலருக்கும் நடுநிலையாக விளங்கும் மெய்க்கல்வியே அழகுடைத்தாகும்.

கல்வியினிடத்தும் மெய்கல்வியென்றும் பொய்க்கல்வியென்றும் இரு வகைத்துண்டோவென உசாவுவோரும் உண்டு. புறப்பொருள்காட்சியையும் பிரயோசனமற்ற நூற்களையுங் கண்டறியாது படிக்குந் தெண்டப்படிப்பே பொய்க் கல்வியென்றும், அகப்பொருட்காட்சியையும் நீதிநெறி ஒழுக்கங்களையுங் கண்டறிந்து படிக்கும் படிப்பை மெய்க்கல்வி என்றும் கூறப்படும்.

இத்தகைய மெய்க்கல்வியின் விருத்தியைநாடி நமது கருணைதங்கிய ராஜாங்கத்தார் கலாசாலைகள் கட்டுவதற்காய வேணபணவுதவியும் கல்வியின் விருத்தியை செய்விப்பதற்காய வேண பணவுதவியும் செய்துவருபவற்றுள் மாணாக்கர்களது பரிட்சைகளுக்குத் தமிழ் பாஷையில் எப்புத்தகங்களை வைக்கலாம் என்னும் உத்தேசங்கொண்டிருப்பதாகத் தெரிந்து மிக்க ஆனந்திக்கின்றோம்.

இராமாயணமென்னும் புத்தகத்தைப் பரிட்சைக்கு வைக்கலாமோ வென்னில் அதன் கதாசுருக்கம் அம்மதத்தினோர்க் கடவுள் இராமனாகப் பிறந்து தன் மனைவியுடன் சுகித்திருக்குங்கால் பத்துத் தலையும் இருபது கையுமுடைய ஓர் ராட்சதன் சமுத்திரங் கடந்து எடுத்துப்போய்விட்டான் என்றும் அவனைக் கொல்லுவதற்காக அத்தேசத்திற்குச் சென்று அவனையும் அவன் குடும்பத்தோரையும் அவன் தேசத்தோர் யாவரையுங் கொன்று இராமர் தன் மனைவியை அழைத்துக்கொண்டு வந்துவிட்டார் என்பதேயாம்.

இத்தகையக் கதையை சிறுவர்கள் வாசித்து வருவார்களாயின் அவர்களுக்கு நீதிமார்க்கம் நிலைக்குமா. ஈதன்றி அவருடன் யுத்தஞ்செய்த எதிரிகளுக்கு அலைபோல நாக்குகளும் மலைபோல மூக்குகளும் உண்டாம். மனைவியை எடுத்துப்போனவனுக்குப் பத்துத்தலைகள் இருந்தனவாம், இஃது பொருந்துமா. இயற்கையிலேயே ஓர்தலையையுடைய மனிதனுக்கு அத்தலை சிறுத்துவிடுமாயின் புத்திகெட்டு குரங்கின் சேட்டைச் செய்வதைக் காண்கின்றோம். மற்றவனுக்கு ஓர்தலை உள்ள பரிமாணத்திற்குமிக்கப் பெருத்திருக்குமாயின் அத்தலையைக் கழுத்துத் தாங்கமுடியாது உருளுவதும் புத்திகெட்டு கிடப்பதுமாகியச் செயலைக்காண்கின்றோம். ஈதனுபவக் காட்சியாயிருக்க பத்துத்தலையையுடைய ஓர் மனிதன் பாரியை எடுத்துப்போய் விட்டான் என்றும் அவன் பெருத்த யுத்தஞ் செய்தான் என்றும் சிறுவர்கள் வாசிப்பார்களாயின் வித்தியாவிதரண விவேக விருத்தியுண்டாமா அன்றேல் மயங்குமா. ஒருவன் மனையாளை அபகரிப்பானாயின் அவனையும் அவன் குடும்பத்தோரையுங் கொல்ல முயலுவானா, நிதானத்தினில் நிற்பானா என்பதைக் கூர்ந்து ஆலோசிப்பதாயின் சிறுவர்கள் இத்தகையக் கதைகளைக் கண்ணினாற் பார்க்காமலிப்பதே அழகாம்.

பாரதக்கதையை சிறுவர்களுக்குக் கொடுத்து வாசிக்கச்செய்வதாயின் அக்கதையின் உற்பவமே இரிஷியும் முனியும் ஞானியுமாகிய ஓர் மனிதன் கைம்பெண்களைச் சேர்ந்தே பிள்ளைகளைப் பெற்றிருப்பது காட்சியாம். அதை வாசிக்கும் விதரணையற்ற சிறுவர்கள் இரிஷிகளே கைம்பெண்களைச் சேர்ந்திருக்க நாம் சேருவதினால் என்னக்கெடுதியென்று உறுத்திக் கைம்பெண்களைச் அணுகி பிள்ளைகள்தோற்ற அப்பிள்ளைகளைக் கழுத்தை முறித்துக் குப்பையிற் போடவும் உயிருடன் கொண்டுபோய்க் கிணற்றில் போடவுமாகிய சீவகாருண்யமற்றச் செயலும் துற்கிருத்தியங்களும் பெருகுமா குறுகுமா. பாரதக்கதா சுருக்கமோவென்னில் பங்காளிகளின் பூமி வழக்கேயாம். ஒரு சகோதிரனுக்குக் கொடுக்கவேண்டிய பாகத்தை மற்றொரு சகோதிரன் கொடுக்காத தடையால் அவனையும் அவனைச்சார்ந்தக் குடும்பத்தோர்களையும் மற்றும் தேசத்து அரசர்களையும் வஞ்சினம் சூது மித்திரபேதம் மாயாவாதம் முதலியவைகளாற் கொன்று தங்கள் பாகத்தையும் எதிரி சகோதரர்கள் பாகத்தையும் பெற்றுக்கொண்டார்கள் என்பதேயாம். இத்தகையதை வாசிக்குஞ் சிறுவர்கள் தங்கள் சகோதிரர்கள் ஏதேனும் ஓர் பாகங் கொடுக்காமல் வைத்துக்கொள்ளுவார்களாயின் உதிரக்கலப்பினால் உண்டாம் பாசத்தினாலும் சகோதிரனென்னுங் காருண்யத்தினாலும் அவனே சுகமாக அனுபவித்துக் கொள்ளட்டுமென்று விட்டுவிடுவானா அன்றேல் பாரதக்கதையை வாசித்த அனுபவங்கொண்டு தன் பாகங்கொடா சகோதிரனையும் அவனைச் சார்ந்தவர்களையும் பலவகையான துன்பத்திற்குள்ளாக்கி அவனையுங்கெடுத்து தானுங்கெட்டு துக்கத்தில் ஆழ்வானா. பொருளாசையின் மிகுதியால் எதிரிகளின் பிராணனுக்கே தீங்கை விளைவிப்பானா என்று ஆலோசிக்கில் வாசித்தவன் அனுபவமும் செயலிலுந் தோற்றுமாதலால் வஞ்சத்தாலும், சூதாலும், மாய்த்தாலும் கொல்லுங் கதையை சிறுவர்கள் கண்ணிலும் பார்க்காதிருப்பதே அழகாம்.

பெரியபுராணம் சிறியபுராணங்களை சிறுவர்களுக்குக் கற்பிப்பதாயின் சீவகாருண்யம் நிலைத்து கொலைசெய்யாமெய், களவு செய்யாமெய், கள்ளருந்தாமெய், பொய்சொல்லாமெய், பிறர் தாரமிச்சியாமெய்யென சுத்ததேகிகளாக உலாவும் சன்மார்க்கர்களாம் பௌத்தர்களை சீவகாருண்ய மற்ற பஞ்சமாபாதகர்களும் துன்மார்க்கர்களுங்கூடி கழுவிலுங் கற்காணங்களிலும் வசியிலுங் குத்தி வதைத்துக் கொன்ற கதையை அவற்றுள் விசாலமாக வரைந்திருக்கின்றது. அவற்றை வாசிக்கும் சிறுவர்கள் மக்கள் விசுவாசமும் இராஜ விசுவாசமுமற்று சீவகாருண்யம் என்பதே கனவிலுமில்லாமலும் நீதியும், நெறியும், நிலையிலில்லாமலுந் துன்மார்க்க கிருத்தியங்களுக்கே பிரவேசிப்பார்களன்றி நன்மார்க்கத்தில் நிலைக்கமாட்டார்கள்.

மற்றும் அக்காதையுள் சாமியே மனிதனாக வந்து ஏது திக்கியு மற்ற கைம்பெண் கிழவியினிடஞ்சென்று உடைந்த ஏறிகரைக்கு மண்ணிடுவதாக ஒப்பந்தம் பேசி அவள் வயிறு பிழைக்க விற்றுண்ணும் புட்டுகளை எல்லாந் தின்றுவிட்டு ஒப்பந்தம் பேசியபடி செய்யாமல் பிரம்படிப்பட்டதாக வரைந்திருக்கின்றது. அதனை வாசிக்கும் சிறுவர்கள் சாமியே கைம்பெண் கிழவியிடம் ஒப்பந்தம் பேசி அவள் புட்டெல்லாந்தின்றுவிட்டு ஒப்பிய வேலையையுஞ் செய்யாமல் பிரம்படிப்பட்டிருக்க நாமென்ன நரமனிதர் ஒருவனிடம் ஒப்புக்கொண்ட வேலையையுஞ் செய்யாமல் பணமும் பெற்றுக்கொண்டு பிரம்படிபட்டாலென்ன சிறைச்சாலைச் சென்றாலென்ன என்று முனைவார்களன்றி நீதியிலும் நெறியிலும் நிலைத்து உலக விவகாரங்களை நடத்தமாட்டார்கள். பின்னும் அக்கதையுள் கூறியுள்ள மோட்சராட்சியத்திற்குச் சென்று அங்கு வசிக்கும் ஓர் பெண்ணைக்கண்டு மோகித்து பூமியில் வந்து சேர்ந்துக்கொண்டதாக வரைந்திருக்கின்றது. அத்தகைய துன்மார்க்கக் கதைகளை சிறுவர்கள் வாசிப்பதினால் மோட்சராட்சியத்திலேயே பெண்களைக்கண்டு மோகித்து சுகமடைவது இயல்பாயிருக்க பூமியின் கண்ணுள்ள பெண்களைக்கண்டு மோகித்து அவர்களைக் கெடுப்பதினால் நமக்குக் கெடுதியாதுண்டாமென்னுந் துணிவு கொள்ளுவார்களன்றி அச்சத்திலும் ஒடுக்கத்திலும் நின்று சீர்பெறமாட்டார்கள். மற்றுமுள்ளக் கேடுபாடுகளை வரையின் வீணேவிரியும் என்றஞ்சி எமதபிப்பிராயத்தை வெளியிடுகின்றோம்.

அதாவது சிறுவர்களது தமிழ் பரிட்சைக்கு திரிக்குறள், திரிகடுகம், நாலடிமுதலிய நீதிநூற்களைவைப்பதுடன் அந்தந்த வகுப்பிற்குத் தக்கவாறு பிரதம கலாசாலை முனிஷிகளே மக்கள் விசுவாசமும் இராஜவிசுவாசமும் அமைந்துள்ளச் செய்யுட்களையும் விவேகவிருத்தி, வித்தியாவிருத்தி, விவசாயவிருத்திக்குத்தக்க செய்யுட்களையும் அமைக்கச்செய்து அவைகளைப் பாட சோதனைகளுக்கு வைப்பதாயின் பிள்ளைகள் நீதியிலும், நெறியிலும், சன்மார்க்கத்திலும் அமைந்து வித்தையிலும், விவசாயத்திலும் முனைந்து சுகவாழ்க்கைப் பெற்று மக்கள் விசுவாசத்திலும், இராஜ விசுவாசத்திலும் அமர்ந்திருப்பார்கள். மற்றப்படி மதிகேட்டிற்கும் நீதியின் கேட்டிற்கும் ஆதாரமாயுள்ள நூற்களை கலாசாலைகளில் வைப்பதாயின் கருணைதங்கிய ராஜாங்கத்தார் கலாசாலைகளுக்கென்று வேணப்பணவுதவிசெய்தும் விழலுக்கிரைக்கும் நீர்போலாமேயன்றி யாதொரு பயனையுந் தாராவாம்.

- 6:42; மார்ச் 26, 1913 -