உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/290-383

விக்கிமூலம் இலிருந்து

286. கருணை தங்கிய கவர்ன்மெண்றாரால் ஏற்படுத்திய விவசாய பஞ்சாங்க புத்தகவரவு

நம்மெ ஆண்டுவருங் கருணைதங்கிய ராஜாங்கத்தோரால் ஏற்படுத்தியுள்ள விவசாயப் பஞ்சாங்கப் புத்தகமொன்று நம்பால் வரப்பெற்றோம். அதனுள் காலக்கணிதங்களை வகுத்துள்ளது ஒருவாறு இருப்பினும் விவசாயிகளாகிய உழவாளிகளாம் வேளாளத்தொழிலாளிகளுக்கு வேண உதவியை தாங்களே ஆராய்ச்சி செய்து பூமிகளின் குணாகுணங்களையும் தானியங்களின் பலாபலன்களையும் செவ்வனே விளக்கி ஒவ்வொரு பண்ணைக் குடியாளனும் விருத்தியடையும் வகைகளையும் விளக்கி வரைந்திருக்கின்றார்கள்.

அவற்றுள் அந்தந்த தேசங்களில் எந்தெந்த தானியங்கள் ஓங்கிப் பலனைத் தருகிறதென்றும் அப்பலனை அடைதற்கு வேண்டிய ஆயுதங்களையும் தானியங்கள் பூச்சுகளால் சேதமடையாதிருக்கும் வழி வகைகளையும் நன்கு விளக்கி படங்களுடன் அமைத்திருக்கின்றார்கள்.

அத்தகைய ஊக்கமும் பிரையாசையும் உலகிலுள்ள எந்த ராஜாங்கத்தாருக்கு இருக்குமென்று சொல்லத்தரமன்று. ஏனென்பரேல், அந்தந்த தேசத்தரசர்களும் அதிகாரிகளும் தங்கள் தங்கள் அரசாங்க விஷயத்திலும் வேறு விருத்தியிலுந் தங்கள் மனதை செலுத்திவரவும் பூமிகளை உழுது பண்படுத்தும் உழைப்பாளிகள் யாவரும் தங்கள் மனோவிருத்தியை பூமியினிடத்திற் செலுத்தி அந்தந்த தானியங்கள் மேலுமேலும் பெருத்தம் உடையவர்களாய் செய்தொழிலிலும் ஊக்கமுடையவர்களாய் சகலருக்கும் உபகாரிகளாக விளங்குகின்றார்கள். அவரவர்கள் விருத்தியை உணர்ந்த அந்தந்த ராஜாங்கத்தார் விவசாய விஷயத்தில் அதிநோக்கமுறாது தங்கள் தங்கள் ராஜாங்கவிஷயத்திலே நிலைத்திருக்கின்றார்கள். இத்தேசத்திலேயோ சின்னசாதி பெரியசாதியென்னும் மிலேச்சச் செயல்களை வகுத்துக்கொண்டு பூமியையுழுது பயிரிட்டு உண்போனை சின்னசாதியென்றும், பிச்சை இறந்துண்போனைப் பெரியசாதியென்றும் உயர்த்தியுந் தாழ்த்தியும் பூமியை உழுது பயிறு செய்யும் உழைப்பாளிகளுக்கு வேளைப்புசிப்பு உதவாமலும் சுத்தநீரை மொண்டு குடிக்கவிடாமலும் அவர்கள் மீது தங்களுக்குள்ள பூர்வவிரோதத்தால் கோலுங்குடுவையுங் கொடுத்து எலும்புந்தோலுமாகச் செய்யுங் கொடூர வஞ்சகச்செயலால் மடிந்தவர்கள் போக மற்றுமிருந்த உழைப்பாளிகள் யாவரும் இப்படும்பாவிகளிடம் நசிந்து நாசமடைவதினும் அன்னியதேசங்களுக்குச் சென்றேனும் பிழைத்திருக்கலாமென்று எண்ணிப் போய்விட்டார்கள். அவர்களை வதைத்து ஊரைவிட்டோட்டிவிட்டப் பெரியசாதிகள் என்போர்களோ வஞ்சினத்திலும் சூதிலும் பொறாமெயிலுங் குடிகெடுப்பிலும் வல்லவர்களேயன்றி பூமியை உழுது பண்படுத்தும் வல்லபமே கிடையாது.

இத்தகைய பெரியசாதிகள் என்னும் சோம்பேறிகள் தங்கள் தங்கள் பேராசையின் மிகுதியால் பெருத்த பூமிகளை வளைத்துக்கொண்ட போதினும் அவைகளை உழுது பண்படுத்தி தானியவிருத்திச் செய்தற்கு சக்த்தியற்றும் யுக்த்தியற்றும் இஞ்சித்தின்றக் குரங்குகளைப்போல் பூமிகளை இளித்துப்பார்க்க ஆரம்பித்துக் கொண்டார்கள். அதனால் பூமிகளின் பண்ணை உழவுகளுங்கெட்டு தானியவிருத்திகளும் பட்டு, பஞ்சங்களும் பெருவாரி நோய்களும் பரவ ஆரம்பித்துவிட்டது. பெரியசாதிகள் என்போருட் சிலர் பூர்வ உழைப்பாளிகளை வைத்துத் தங்கள் பண்ணை பூமிகளை சீர்திருத்துவதாயினும் அவர்கள் உழைப்பிற்குத் தக்கப் புசிப்பை அளிக்காமல் பாழ்படுத்துகிறபடியால் பூமியின் விருத்தியும் பாழடைந்து போகின்றது. இத்தேசத்துள் குடியேறிய நயவஞ்சகர்களால் நூதனமாக ஏற்படுத்தியுள்ள சாதிபேதத்தினால் உண்டாய கேடுபாடுகளை அறியாத கருணைதங்கிய ராஜாங்கத்தார் பூமியின் விருத்தியை நாடியும் மக்கள் சுகத்தைத் தேடியும் மிக்கப் பிரையாசையெடுத்தும் வேணப் பண உதவி புரிந்தும் பூமியுதவிக்காய ஆயுதங்களைத் தருவித்தும் விதை முதல்களை அளித்தும் மிக்க ஊக்கமாக உழைத்து வருகின்றார்கள்.

அத்தகைய மேலான உபகாரச்செயல்களிலும் பெரியசாதியென வேஷமிட்டுள்ளோர் நுழைந்துகொண்டு தாங்கள் மிக்கவூக்கமுடன் உழைப்பது போல அபிநயங்காட்டி தங்கள் சுயப்பிரயோசனத்தைப் பார்த்துக் கொள்ளுகின்றார்கள் அன்றி பூமிகளின் விருத்திகளையும் உழைப்பாளிகளின் சுகத்தையுங் கருதுவார்களில்லை. யாது காரணமென்னில் தங்கள் தங்கள் சாதிவேஷங்களை நூதன வேஷங்களென்று பலருமறிய பறைந்து வந்தவர்களைப் பறையர் பஞ்சமரெனத் தாழ்த்திப் பாலகாலமாக நசித்து வருகின்றவர்களாதலால் கருணைதங்கிய ராஜாங்கத் தோன்றியும் அவர்களது கடுஞ்சினம் மாறாது பூமியின் உழைப்பாளிகளை வதைக்கும் வழிகளையே தேடிக்கொண்டு வருகின்றார்கள்.

இத்தகையக் கேடுபாடுகளையுங் கருணைதங்கிய ராஜாங்கத்தார் கண்ணோக்கி பூமிகளுக்கு எடுக்கும் முயற்சியுடனும், அதற்காய வேணப் பணங்களையுங் கருவிகளையும் உதவுவதுடனும், உழைப்பாளிகளாம் ஏழைமக்களையும் அவர்கள் சுகத்தையும் சற்று கண்ணோக்குவதாயின் பூமியின் விருத்திகள் மேலாய பலனைத்தரும். ஏராளமாயப் பணத்தை விரயஞ்செய்துவரும் இராஜாங்கத்தோருக்கும் ஆனந்த முண்டாம். சாதித் தலைவர்களாலும் சாதியென்பதை மெய்யென்று இருப்போர்களாலும் இத்தேசத்தின் வித்தியாவிருத்தியும் விவசாய விருத்தியும் பாழடைந்துபோய் இருக்கின்றபடியால் கருணை தங்கிய ராஜாங்கத்தார் அத்தகை பேர்களையே தங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாகவைத்துக்கொண்டு செய்வதாயின் எளிதில் சித்தி பெறமாட்டாது. எவரையும் நம்பாது தாங்களே முயன்று தங்கள் பார்வையையே வைத்து வித்தியாவிருத்தியையும் விவசாயவிருத்தியையும் பயன்பெறச் செய்யும்படி வேண்டுகிறோம்.

- 6:43; ஏப்ரல்2, 1913 -