உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/291-383

விக்கிமூலம் இலிருந்து

287. மநுக்களை மநுக்களாக நேசிக்காத தேசம் மகிழ்ச்சியும் புகழ்ச்சியும் பெறுமோ

முக்காலும் பெறாவென்பது திண்ணம். அதாவது ஓர் மனிதன் தன்னைத்தானே பெரியசாதியோனென உயர்த்திக்கொண்ட கர்வத்தினாலும் தம்மெய் ஒத்த மனிதனை மனிதனாக நேசிக்காத பொறாமெயாலும் நமது முன்னோர்களாகியப் பெரியோர்களை தங்கள் பகையாலும் அறிவின்மெயாலும் மக்களுள் மக்களை நேசிக்காது புறம்பாக்கிவருகின்றார்கள். அவ்வகை நாமுஞ் செய்யலாகாது என்னும் அறிவின்மெயாலும் தங்களால் தாழ்ந்த சாதியோனென்று தாழ்த்தப்பட்டுள்ள ஓர் மனிதன் அருகில் வந்துவிடுவானாயின் அவனைக் கண்டவுடன் துள்ளித்துடித்து தூர அகன்றோடுகிறான். அதனால் அவனுக்குள்ள மநுமக்களை மநுமக்களாக நேசிக்காத பொறாமெயும் பற்கடிப்பும் வஞ்சினமும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்குகின்றபடியால் மற்றவன் அவனைக் கண்டவுடன் மகிழவும் புகழவும் ஏதுவுண்டாமோ இல்லை, இகழ்வதே காட்சியாகும்.

தாழ்ந்த சாதியோனெனத் தாழ்த்தப்பட்டுள்ள மனிதன் சற்று விவேகியாயிருப்பானாயின் துள்ளித்துடித்துத் தூரவோடும் மனிதனை சற்று உற்றுநோக்கி நாம் இவனிலும் சீலமும் சுத்தமும் பொருந்த நிற்க நம்மெய்க் கண்டவுடன் தூரவிலகியோடியதைக் காணில் இவன் முன்ஜெனனத்தில் குதிரை, மாடு முதலிய மிருகமாயிருந்து இச்ஜெனனத்தில் மநுடனாகத்தோன்றியும் முன்ஜென்மத்தில் மனிதனைக் கண்டவுடன் தூர விலகியோடும் பயமானது மாறாது மனித ஜெனனத்திலும் பூர்வச்செயல் தொடர்ந்தேநிற்கின்றதென்று எண்ணி நகைத்துக்கொண்டே போய்விடுகிறான். அதனால் ஏதேனும் மகிழ்ச்சியும் புகழ்ச்சியுமுண்டோ, இல்லை.

மற்றுமோர் விவேகியைக்கண்டு தாழ்ந்தசாதியோனென்று எண்ணித் தீண்டலாகாதெனத் தூர ஓடுவானாயின் விவேகியானவன் சற்று அவனை உற்று நோக்கி நம்மெய்க் குடியன் என்றெண்ணி தூரவோடி இருப்பானாயின் அவர்கள் கூட்டத்திலுங் குடியர்கள் இருக்கின்றார்களே, நம்மெய்த் திருடன் என்றெண்ணி தூரவோடியிருப்பானாயின் அவர்கள் கூட்டத்திலுந் திருடர்கள் இருக்கின்றார்களே, நம்மெய் பொய்யன் என்றெண்ணி தூரவோடியிருப்பானாயின் அவர்கள் போதனாசெயலில் பொய்யர்களாகவே விளங்குகின்றார்களே, நம்மெக் கொலைஞர் என்றெண்ணி தூரவோடி இருப்பானாயின் அவர்கள் சாஸ்திரங்களைக்கொண்டே பெருங் கொலைஞர்களாக விளங்குவதுடன் நாளது வரையில் கொலைக்குற்றங்களுக்கு ஆளாகின்றார்களே, நம்மெ விபச்சாரியென்று தூரவோடி இருப்பானாயின் அவர்களிலும் விபச்சாரிகள் அனந்தம் இருக்கின்றார்களே, நம்மெப் புலால் புசிப்பவனென்று தூரவோடியிருப்பானாயின் கொழுத்த பசுக்களையுங் கொழுத்தக் குதிரைகளையும் கொழுத்த மனிதர்களையுஞ் சுட்டுத்தின்றதாக சரித்திரமிருப்பதுடன் நாளது வரையில் மாட்டுப்புலாலையும் ஆட்டுப்புலாலையுந் தின்று வருகின்றார்களே. இவ்வகையாக சகல இழிச்செயல் நிறைந்துள்ளவன் நம்மெக் கண்டவுடன் தூரவிலகியோடுவதைக் காணில் ஏதோ பொறாமெயும் பற்கடிப்பும் உள்ளுக்குள் வைத்துக்கொண்டு தன்னை உயர்ந்தவனைப்போல் அபினயித்து நம்மெத் தாழ்ந்தவனெனப் பகட்டுகின்றானென்று எண்ணி இகழுவானன்றி மகிழவும் புகழவுமாட்டான் என்பது திண்ணம்.

இன்னுமோர் விவேகியிடஞ்சென்று தன்னுடைய சாதி கர்வத்தினால் அருகில் உழ்க்காராது தூரவிலகி உழ்க்காருவானாயின், அவன் துற்செயலைக் சுண்ட விவேகி ஆ ஆ, இவனென்ன தன்னை பி.ஏ. எம்.ஏ. பட்டம் பெற்றவர்கள் குடும்பத்தோனென்றெண்ணி தூரவிலகி உழ்க்கார்ந்திருப்பானாயின் அவர்களைப் போல நம்மவரும் பி.ஏ. எம்.ஏ. பட்டங்களைப் பெற்றிருக்கின்றார்களே, இலக்கண இலக்கியங் கற்ற வித்துவான்கள் என்றெண்ணி தூரவிலகி உழ்க்கார்ந்திருப்பானாயின் அவர்களுக்கு மேலாய இலக்கண வித்துவான், இலக்கிய வித்துவான்களும் நம்மவருக்குள் இருக்கின்றார்களே, வைத்தியத்திலும் சோதிடத்திலும் வல்லவர்கள் என்று எண்ணி தூரவிலகி உழ்க்கார்ந்திருப்பானாயின் அவர்களிலும் மேலாய சோதிட வல்லவர்களும் அவர்களுக்கு மேலாய வைத்திய வல்லவர்களும் நம்மவர்களுக்குள்ளிருக்கின்றார்களே, ஞானத்திலும் நீதியிலும் சிறந்தவர்களென்றெண்ணி தூரவிலகி உழ்க்கார்ந்திருப்பானாயின் ஞானநெறியிலும் நீதிநெறியிலும் அவர்களுக்கு மேலானவர்கள் நம்மவர்களுக்குள்ளிருக்கின்றார்களே, சுத்த புசிப்பும் சுத்தவுடையும் உடையவர்கள் என்றெண்ணி தூரவிலகி உழ்க்கார்ந்திருப்பானாயின் இவனுக்கு மேலாய சுத்த புசிப்பும் சுத்த ஆடையும் நாமணைந்திருக்கின்றோமே அங்ஙனமிருக்க எத்தகைய இழிவைக்கண்டு நமதருகில் உழ்க்காராது தூரவிலகி உழ்க்கார்ந்தானென்று உசாவுங்கால் அவனுக்குள்ளப் பொறாமெயும் பற்கடிப்புமே அவனைத் தூரவிலக உழ்க்காரவைத்ததன்றி வேறொன்றுமில்லை யென்றும் இகழ்வுகொள்ளுவானேயன்றி அச்செயலுக்கு மகிழ்ச்சியும் புகழ்ச்சியுங் கொள்ளமாட்டான்.

இத்தகைய வஞ்சினமும் பொறாமெயுங் கொண்டு மநுக்களை மநுக்களாக நேசிக்காத தேசம் தென்னிந்தியாவேயன்றி உலசிலுள்ள எத்தேசங்களிலுங் கிடையாது. சாதி வித்தியாசமுள்ள பொறாமெயும் வஞ்சின மிகுத்தச் செயல் அந்தந்த தேசங்களில் இல்லாதிருக்கின்றபடியால் சகல பாஷை மக்களும் ஒற்றுமெயுற்று சீருஞ் சிறப்பும் பெற்றிருக்கின்றார்கள். தென்னிந்தியாவோ சீருஞ் சிறப்புங்குன்றி அவன் சின்னசாதி இவன் பெரியசாதியென்னும் துன்னாற்றங்களே பெருகிவருகின்றபடியால் ஒருவரைக் கண்டால் மற்றொருவர் சீறுகிறதும், ஒருவரைக்கண்டால் மற்றொருவர் முறுமுறுக்கிறதும், ஒருவரைக் கண்டால் மற்றொருவர் சினந்து குரைக்கிறதுமாகியச் செயல்களால் வித்தைகளுங்கெட்டு விவசாயங்களுங் கெட்டு வித்தையில்விருத்திப்பெற்றவர்கள் அவ் வித்தையை மற்றவர்களுக்குக் கற்பிக்காமலும் விவசாயவிருத்தியைக் கற்றவர்கள் அவ்விவசாய வித்தையை மற்றவர்களுக்குக் கற்பிக்காமலும் தாங்கள் சீரழிவதுடன் தங்கள் சந்ததியோரையுஞ் சீரழியச்செய்து தேசத்தையும் பாழடையச்செய்தே வருகின்றார்கள்.

இதுகாருங் கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தோர் வந்து இத்தேசத்தைக் கைப்பற்றி வேண சீர்திருத்தங்களைச் செய்யாதிருப்பார்களாயின் இத்தேசத்தோருக்குள்ள சாதிபேதமென்னுங் கொடு நாற்றத்தாலும், சமயபேத மென்னும் படுமோசத்தாலும் தேசமும் தேசமக்களும் பாழடைந்திருப்பார்களென்பது சத்தியமேயாம். ஏதோ பூர்வ புத்ததன்ம புண்ணியவசத்தால் பிரிட்டிஷ் ராஜாங்கந்தோன்றி சகலமக்களையும் மநுக்களாக நேசித்துத் தங்களைப்போல் மற்றய மநுக்களையும் சுகச்சீர்பெறச்செய்து வருகின்றார்கள். அவர்களது நற்குணத்தையும் நற்செயலையும் அனுசரித்து இத்தேசத்தோர் விவேகம் பெருகி மதுக்களை மநுக்களாக நேசிப்பார்களென்று நம்புகிறோம். வித்தியா கர்வம், தனகர்வம், சாதிகர்வம், மதகர்வம், பெருகும் வரையில் தேசமும் தேசமக்களும் மகிழ்ச்சியும் புகழ்ச்சியும் பொறார்களென்பது திண்ணம்.

- 6:44; ஏப்ரல் 9, 1913 -