அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/292-383
288. படிப்பால் பலசுகம் உண்டு எனினும் படிப்பால் பலவித்தையும் விவசாயமும் பாழடைகின்றதே
பற்பல தேசங்களிலும் அவரவர்கள் பாஷைக்குரிய படிப்பைப் படித்த ஒவ்வோர் மனுமக்களும் அப்படிப்பினது விருத்தியைக்கொண்டே தங்கள் அறிவை வளர்த்து வித்தியாவிருத்தியிலும் விவசாயவிருத்தியிலுந் தாங்கள் வாழுந் தேசங்களை சிறப்புறச்செய்வதுமன்றி தேசமக்களும் சுகச்சீர் பெற்று வாழ்கின்றார்கள்.
அதன் ஏதுக்களோ என்னில் இரும்புவேலைசெய்யும் ஓர் மனிதனுடைய புதல்வன் தனது சுயபாஷையைச் செவ்வனே படித்துக்கொள்ளுவானாயின் தான்பழகியுள்ள இரும்பு வேலையிலேயே தனது அறிவை வளர்த்து நூதனமாய்க் கருவிகளையும் நூதனமான இருப்பின் இயந்திரங்களையுங்கண்டு செய்து அதனால் தான் இலட்சாதிபதியாக சுகித்து வாழ்வதுடன் அத்தொழிலைத் தொடுத்துக் கற்றவர்களும் சுகமடைந்து அக்கருவிகளிலும் ஒன்றைக் கொடுத்து மற்றொன்றை வாங்கி வியாபாரஞ்செய்யும் வாணிபர்களும் செல்வந்தர்களாக விளங்குகின்றார்கள். அவ்விருப்பின் இயந்திரங்களைக் கொண்டு நடத்தும் இருப்புப்பாதை ரதங்களிலும் நீராவிக் கப்பல்களிலும் கோடாகோடி மக்களின் போக்குவருத்துக்கும் உதவியாயிருக்கின்றது.
இவ்வகையாக மரவேலைச் செய்வோர்களின் புத்திரர்களும், கண்ணாடிவேலை செய்வோர்களின் புத்திரர்களும், நெசிவுவேலைச் செய்வோர்களின் புத்திரர்களும், வருணவேலை செய்வோர்களின் புத்திரர்களும், சித்திரவேலை செய்வோர்களின் புத்திரர்களும், விவசாயச் தொழிற் செய்வோர்களின் புத்திரர்களும் மற்றவர்களும் தங்கள் சுயபாஷையைப் படித்துக்கொண்டு தங்களது கண்ணையுங் கருத்தையும் வித்தியா விருத்தியிலும் விவசாயவிருத்தியிலும் செலுத்தி மேலும் மேலும் அவற்றை விருத்திச்செய்து தேசத்தைச் சிறப்படையச் செய்வதுடன் தேசமக்களையும் சுகச்சீர் பெறச் செய்துவருவதை நமது காட்சியினாலும் அனுபவத்தினாலுமே கண்டறியலாம். மற்றும் இத்தேசமக்களின் ஒற்றுமெயாலும் அன்பின் மிகுதியினாலும் கருணா நோக்கத்தாலும் தாங்கள் கற்ற வித்தியாவிருத்தி வழிகளை தங்கள் மட்டில் அடக்கிக்கொள்ளாது ஏனைய மக்களுக்கு ஊட்டிவருவதுடன் அதனதன் நுட்பாநுட்பங்களை புத்தக ரூபமாகவும் அச்சிட்டுப் பலரும் வாசித்து விருத்தி பெறவும் செய்துவருகின்றார்கள்.
இத்தென்னிந்தியாவிலோ வென்னில் நாங்கள் பிரம்மா முகத்திற் பிறந்தவர்கள் இப்போது மநுஷிவயிற்றிற் பிறக்கின்றோம், பசுவின் வயிற்றிற் பிறந்தவர்கள் இப்போது மநுஷிவயிற்றிற் பிறக்கின்றோம் கழுதைவயிற்றிற் பிறந்தவர்கள் இப்போது மநுஷிவயிற்றிற் பிறக்கின்றோம், நாயின் வயிற்றிற் பிறந்தவர்கள் இப்போது மநிஷிவயிற்றிற் பிறக்கின்றோம், தவளை வயிற்றிற் பிறந்தவர்கள் இப்போது மநுஷிவயிற்றிற் பிறக்கின்றோம் என்னும் பொய்யைச்சொல்லி பொருள்பரித்து சீவிக்கும் பெருஞ்சோம்பேறிக் கூட்டத்தோர் பரவியும் அவர்களது பொய்யை மெய்யென நம்பித்திரியுங் கூட்டங்கள் அதிகரித்துவிட்டதுமன்றி மனிதர்களை மனிதர்களாக பாவிக்கும் ஒற்றுமெயற்று பொய் வேஷங்களாகிய சாதிப்பிரிவினைகளையும், பொய் மதங்களாகிய சமயப் பிரிவினைகளையும் உண்டு செய்துக்கொண்டு தங்களது கண்ணையுங் கருத்தையும் சாதிபேதவிஷயத்திலும் சமயபேத விஷயத்திலும் ஊன்றி தாங்கள் அவற்றில் நிலைத்து சோம்பேறிகளானதுமன்றி தங்களை யடுத்தவர்களையும் சோம்பேறிகளாக்கிப் பின் சந்ததியோர்களுங் கெட்டழிவதற்கு பொய்சாதிகளுக்காயப் புத்தகங்களையும் பொய் மதங்களுக்காயப் புத்தகங்களையும் வரைந்துவைத்து அவைகளையே வாசிக்கவும் அவைகளையே கேழ்க்கவுமாக வைத்துவிட்டபடியால் அவைகளே வித்தைக்கும் விவசாயத்திற்கும் சத்துருவாகி தேசஞ் சீரழிவதுடன் தேசமக்களும் சீரழிவதற்கு ஏதுவாகிவிட்டது.
இத்தகையச் செயல்களே இதுகாருமிருக்குமாயின் தென்னிந்தியம் பாழடைந்திருப்பதுடன் தென்னிந்தியக்குடிகளும் பாழடைந்தே போயிருப்பார்கள்.
ஏதோ தென்னிந்தியக்குடிகளின் பூர்வ புண்ணியவசத்தால் கருணை நிறைந்த பிரிட்டிஷ் அரசாட்சியார் வந்து தோன்றி தென்னிந்தியாவும் தென்னிந்திய மக்களும் சுகச்சீர் பெற்று வருகின்றார்கள். அவ்வகை வந்தும் தேசத்தின் வித்தியா விருத்தியிலும் விவசாய விருத்தியிலுந் தங்கள் தங்கள் கண்ணையுங் கருத்தையுஞ் செலுத்தாது படிப்பதெல்லாம் இராஜாங்க உத்தியோகம் பெறுதற்கே படிக்கவேண்டுமென்னும் பேராசையுடன் கொடுத்த பாடத்தை உருபோட்டு ஒப்பித்து விடுவதிலேயே கண்ணுங்கருத்துமாகி விட்டதுமன்றி பிரிட்டிஷ் ராஜாங்கத்தோர் சற்று களைப்பார்களாயின் இராட்சியத்தையே ஆண்டுக்கொள்ள வேண்டுமென்னுங் கருத்தையே மிகுபடப் பெருக்கி நிற்கின்றார்கள். இத்தகைய நோக்கத்தில் படிப்பதினால் வித்தியாவிருத்தியும் விவசாய விருத்தியுங் கெட்டு தேசமக்களும் பாழடைந்துபோவர்போல் காண்கின்றது.
ஆதலின் படிப்போர் யாவரும் தங்கள் கயபாஷையுடன் ஆங்கிலபாஷையை படிக்கினும் தங்களது கண்ணையுங் கருத்தையும் வித்தியா விருத்தி விவசாயவிருத்தியில் ஊன்றும்படி வேண்டுகிறோம்.
- 6:47: ஏப்ரல் 30, 1913 -