அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/294-383
290. மோட்டார்கார்! மோட்டார்கார்!!
மோட்டார்கார் என்பது மாடுகட்டாமலும் குதிரை பூட்டாமலும் நீராவியின்றி அக்கினியாவியால் ஓடும் வண்டியாம். அதனில் அமைத்துள்ள இயந்திரக் கருவியைக் கொண்டே அதிஜாக்கிரதையில் ஓட்டல் வேண்டும். அதை நடத்துவோன் எஜமானனாயினும் ஆளேயாயினும் தக்க பிலமும் மனத்திடமும் அதிஜாக்கிரதையும் இல்லாவிடில் அனந்த சீவராசிகளுக்கும் மனிதர்களுக்கும் மிக்கத்துன்பத்தைக்கொடுத்துவிடும். அதன் வேகத்தை ஒவ்வோர் கற்றவர்களும் அறிந்தேயிருக்கின்றார்கள்.
அவ்வகைக் கற்றவர்களுமன்றி செல்வவந்தர்களே அவ்வகை வண்டியை வாங்கி முக்கியமாக உபயோகித்து வருகின்றார்கள். உபயோகிப்பவர்களுள் ஆங்கில துரைமக்கள் அவ்வண்டியை நடத்துங்கால் மனுமக்களும் சீவராசிகளும் மிகுதியாக உலாவும் வீதிகளில் அதி துரிதமின்றியும் அதி ஜாக்கிறதையுடனும் பெருத்த பாதைகளில் வேகமாகவும் நடத்தி வருகின்றார்கள்.
இச்சுயதேசத்தோர் அத்தகைய வண்டிகளை வைத்துக்கொண்டு நடத்துவார்களாயின் “கண்டறியாதவன் பெண்டுபடைத்தால் காடுமேடெல்லாம் இழுத்தடிப்பான்” என்னும் பழமொழிக்கிணங்க அதிக மனுமக்களும் சீவராசிகளும் நெருங்க நடமாடும் வீதிகளென்றும் அவ்வகை நடமாடாத பெரும் வீதிகளென்றும் பாராமல் கலியாண அவசரத்திற்குப் போகிறவர்களைப் போலும், கட்டியழும் அவசரத்திற்குப் போகிறவர்களைப் போலும் வேகமாகவே செலுத்திக்கொண்டு வருகின்றார்கள். தாங்களும் மோட்டார் கார்வைத்துள்ளோமென்னும் டம்பாகாரத்தால் ஓட்டுவதெனினும் சுதேச மனுமக்கள் தெருங்கி உலாவும் வீதிகளாச்சுதேயென்னும் சீவகாருண்யமேனும் அவர்கள் இதையத்திலுண்டா அதுவுங் கிடையாது. மாடுகள் மாண்டாலென்ன மக்கள் மாண்டாலென்ன என்னும் இருமாப்புற்றே வண்டிகளை அதிவேகமாக நடத்துஞ் செயலிலிருக்கின்றார்கள்.
சாதாரணமாய் மாட்டுவண்டிகளாலுங் குதிரை வண்டிகளாலுமே மனுமக்களுக்கும் மற்ற சீவராசிகளுக்குத் துன்பங்கள் நேரிட்டுவருவது அநுபவக்காட்சியாயிருக்க அக்கினிவாயுவின் வேகத்தால் ஓடும் வண்டியால் சீவர்களுக்கு எத்தகையாயத் துன்பங்கள் நேருமென்பதை சொல்லவும் வேண்டுமோ.
இவ்வண்டிகளால் உண்டாகுங் கேடுபாடுகளை மோட்டார்கார் வைத்துள்ளக் கனவான்களும் அறியார்களோ, அறிந்தேயிருப்பார்கள். ஆயினும் மனுமக்களுக்குத் தங்கள் வண்டியினால் ஓர் துன்பம் நேரிடுமாயின் ஆடுகள் மாடுகளைப்போல் இழுத்தெரிந்துவிட்டு (ஆக்ஸிடென்ட்) என்று சொல்லித் தப்பித்துக்கொள்ளும் செல்வமும் இருக்கின்றபடியால் தங்கள் தங்கள் மனம்போனவாறு மனுக்கள் நெறுங்கி யுலாவும் வீதிகளிலும் மோட்டர் காரை வேகமாகவே செலுத்தி வருகின்றார்கள். வண்டியை அத்தகையான வேகத்தில் விடவேண்டிய அவசரமென்னவோ, அதனால் அவர்களுக்குண்டாம் சுகமென்னவோ நமக்கு விளங்கவில்லை. நெருங்கிய வீதிகளில் டிராம்கார் ஓர்புறமும், மோட்டார்கார் ஓர்புறமும், ஜட்கா ஓர்புறமும், பைசைக்கில் ஓர்புறமும், கோச்சு ஓர்புறமும், கட்டைவண்டிகள் ஓர்புறமும் வந்துவிடுமாயின் பெரியோர்களும் சிறுவர்களும் எவ்வழி நடந்து எப்புறம் ஒதுங்குவார்கள். சிறிய வீதியாயிருப்பினும் பலவகை வண்டிகள் வரினும் வண்டி வோட்டுவோன் வல்லவனும் ஜாக்கிரதையுடையவனுமாய் இருப்பானாயின் அவ்வழி நடக்கும் மக்களுக்கு யாதொரு துன்பமும் நேராது வண்டிகள் ஒன்றுக்கொன்று மோதும் இடையூறுகளும் வாராது. அவ்வகையின்றி மோட்டார்கார்களை அதிவேகமாக விட்டு மக்களுக்குத் துன்பம் நேரிட்டப்பிறகு துயருறுவதிற் பயனில்லை. மக்கள் மீது வண்டிகளை ஏற்றிவிடுவோரோ அனந்தமாக வீடுசேருகிறார்கள். ஏற்றப்பட்ட மக்கள் மரிப்பதும் துன்புறுவதுமாயச் செயல்களால் அவர்களது குடும்பத்தோர் யாவருந் துள்ளித்துடித்து பதறி கதறி அழுவதுடன் மாளா துக்கத்தில் ஆழ்ந்து விடுகின்றார்கள். ஏதேனும் நோய்கண்டு மடிந்து விடுவார்களாயின் அவ்வளவு தேகம் பதருவது கிடையாது. இத்தகைய ஆபத்தில் நசுங்குண்டும் பிராண அவத்தைப்பட்டுங் கிடப்போரைக்காணில் அதிக உடல் பதைப்பும் துக்கமும் பெருவதைக்காண்கின்றோம். ஆதலின் நமது கருணை தங்கிய கவர்ன்மெண்டார் வண்டி மாடுகளுக்குத் துன்பமுண்டாகாமலும், குதிரைகளுக்குத் துன்பமுண்டாகாமலுங் கார்த்துரட்சிப்பதுபோல அச்சீவர்களுக்கு மேலாய மனுக்களுக்கு துக்கம் நேராமல் இம்மோட்டார் வண்டியை மனுக்கள் நெருங்கியுலாவும் வீதிகளில் வேகமாக விடப்படாதென்னுங் கண்டிதமான உத்திரவைப் பிறப்பிப்பதுடன் ஏதேனும் மக்களுக்கு பிராணாபத்து நேரிடுமாயின் பெருந்தொகையாம் அபராதத்தையும் விதிக்கத்தக்க வழிவகைகளை விதித்துவிடுவார்களாயின் வீதிகளில் வேகமாக ஓடும் மோட்டார்கார்களைக் கண்டு பயப்படுவோரும் துன்புறுவோரும் ஆறுதலடைவார்கள்.
- 6:49: மே 14, 1913 -