அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/295-383
291. பூர்வீக சாதிபேதமற்ற திராவிடர்கள் எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!
இந்தியதேசத்தில் பூர்வக் குடிகள் யாவரும் சாதிபேதம் என்னும் ஒற்றுமெக்கேடில்லாமல் வித்தையிலும், விவசாயத்திலும், ஈகையிலும், சன்மார்க்கத்திலும் சுகசீவிகளாக வாழ்ந்து வந்தார்கள். இத்தகைய வாழ்க்கையில் பெரும்பாலும் அவர்கள் அநுசரித்துவந்த நோன்பும் விரதமும் யாதெனில், சற்குருவின் சத்திய தன்மத்தையே சிரமேற்று, கொலையுங், களவும், பொய்யும், விபச்சாரமும், கள்ளும் அகற்றி பஞ்சசீலத்தை வியாபாரத்திலும் நிறுத்தி சோம்பலின்றி உழைத்து தங்கள் தங்கள் குடும்பங்களை ஆதரித்து வந்ததுடன் புத்தசங்கஞ் சேர்ந்து ஞானசாதனங்களிலும் வித்தியா போதகங்களிலும் விவேகவிருத்தி பெற்றுவரும் சமணமுநிவர்களுக்கும் உபகாரிகளாக விளங்கி அவர்கள் ஆசீர்பெற்று ஆனந்த வாழ்க்கையும் நீதிநெறியும் குருபக்தியும் இராஜவிசுவாசமும் ஒருவருக்கொருவர் அன்புடையவர்களாய் மற்ற தேசத்தோர் புகழத்தக்க விவேகவிருத்தியிற் காலங்கழித்து வந்தார்கள்.
அவர்களது நன்முயற்சியின் ஏதுவால் இந்திய தேசம் சீரும் சிறப்பும் பெற்றிருந்தது. அத்தகைய சீரும் சிறப்பும் பெற்றிருந்த தேசத்தில் வஞ்சினமே உருவாகக்கொண்டவர்களும் கருணை என்பதே கனவிலும் இல்லாதவர்களாகிய ஓர் கூட்டத்தோர் புத்தர் பிறந்து ஆயிரத்து எழுநூறு வருடங்களுக்கு பின் குமானிடதேசமென்னும் பதியிற் குடியேறி யாதொரு தொழிலுமின்றி பிச்சையிரந்துண்பதே பெருந்தொழிலாகக்கருதி சீவனஞ்செய்து வந்தார்கள். நாளுக்குநாள் தேசமக்கள் சிறப்பையும் அன்பின் ஒழுக்கங்களையும் ஈகையின் குணங்களையும் கண்டு வந்தவர்கள் காமியமுற்ற அரசர்களையுங் கல்வி அற்றப் பெருங் குடிகளையுந் தங்கள் வசப்படுத்திக்கொண்டு பௌத்தன்மை விவேகிகளால் தொழில்களுக்கென்று வகுத்திருந்தப் பெயர்களை சாதிப் பெயர்களாக மாற்றி வஞ்சத்தாலும் குடிகெடுப்பாலும் சீவித்துவந்ததுடன் மாமிஷ பட்சணி களாயிருந்தபடியால் இத்தேசத்தில் மாமிஷம் புசிக்கப் பயந்து யாகம் யாகமெனக் கல்வியற்றக் குடிகளிடம் மாடுகளையுந் குதிரைகளையும் தியாகமாக வாங்கி சுற்றிலுந் தட்டிகளால் மறைவிட்டு சுட்டுத் தின்றுவந்ததுமன்றி பொய்யுங், கொலையும், விபச்சாரமும், சுராபானமுமே அவர்களிடம் இருந்தபடியால் பொய்யையுங் கொலையையுங் களவையும் விபச்சாரத்தையும் மது அருந்துதலையும் அகற்றி வாழ்ந்திருந்த பௌத்த விவேகக் குடிகளுக்கு இவர்களது செய்கை சயிக்கமுடியாது, இப்படுபாவிகள் நமது வீதிகளில் வந்தாலுங் கிராமங்கள் நாசமடைந்துபோம் என்று வீதிகளில் வருவார்களாயின் அடித்துத் துரத்தி அவர்கள் வந்த வழியில் சாணத்தைக் கரைத்துத் துளிர்த்து அச்சாணச்சட்டியை அவர்கள் மீதே உடைத்து பஞ்சபாதகம் நிறைந்த யீனர் வந்தார்கள், மிலேச்சர் வந்தார்கள், ஆரியர் வந்தார்களெனக் கூச்சலிட்டு ஓட்டுவது வழக்கமாயிற்று. பௌத்தர்கள் இவ்வாறு செய்துவர ஆரியரென்னும் மிலேச்சர்களோ விவேகமிகுத்துள்ள அரசர்களை மித்திர பேதங்களாற் கொல்லுவதும் அதற்குத் தக்கப் பொய்க்கதைகளைப் போதிப்பதும் விவேகமற்ற அரசர்களையும், விவேகமற்ற கனவான்களையும், விவேகமற்றப் பெருங்குடிகளையும் தங்களது மித்திரபேதப் பொய்யாலும் தந்திரத்தாலும் வசப்படுத்திக்கொண்டு, பெளத்த அந்தணர்களைப்போல் வேஷமிட்டுத் தாங்களே சகலசாதிகளுக்கும் உயர்ந்த சாதிகள் என்றும் தங்களது பஞ்சபாதகச்செயலைப் பொறுக்காது அடித்துத் துரத்தி வந்தவர்களைத் தாழ்ந்த சாதியோரென்றும் வகுத்து தங்கள் செல்வாக்குள்ள இடங்களிலெல்லாம் பௌத்த விவேகிகளைத் துன்பப்படுத்தியும், செல்வாக்கு இல்லாவிடங்களில் மித்திரபேதங்களால் கெடுத்தும் வந்தார்கள்.
இவ்வகையாக பெளத்த அந்தணர்களைக் கெடுத்தும், பௌத்த மடங்களைக் கெடுத்தும், பௌத்த நூல்களை அழித்தும், பௌத்த விவேகக் குடிகளைப் பாழ்படுத்தியும் வந்தவற்றுள் முதற்குடியேறி யித்தியாதி பாழ்படுத்திய வேஷப் பிராமணர்கள் மட்டிலும் இருந்திருப்பார்களாயின் பெளத்த விவேகிகள் யாவரும் ஒன்றுகூடி மிலேச்சர்களை ஊரைவிட்டு அகற்றிவிடுவதுடன் அவர்கள் பூண்டே இவ்விடமில்லாமற் செய்திருப்பார்கள். இதன் மத்தியில் சோம்பேறி பிராமண வேஷெத்தையுங் குடிகள் அவர்களுக்குப் பயந்து பிச்சை கொடுப்பதையும் பார்த்துவந்த இத்தேசத்திய ஆந்திரசாதி, கன்னடசாதி, மராஷ்டகசாதி, திராவிட சாதியோர்களில் சோம்பேறிகளும் வஞ்சினர்களுமாகியச் சிலர்களும் பிராமண வேஷமணிந்துக்கொண்டு, சோம்பேறி சுகசீவனஞ்செய்ய ஆரம்பித்துக்கொண்டார்கள். நாதனமாகக் குடியேறியவர்களின் பிராமணவேஷத்தோடு இத்தேசக்குடிகளும் பிராமணவேஷம் அணிந்துக் கொண்டு பௌத்த நூற்களின் மூலப்பெயர்களையும், தன்மகன்மங்களையும், சரித்திரங்களையுமே பீடமாகக்கொண்டு மாறுபாடாயப் பொய்வேதங்களையும், பொய்ப்புராணங்களையும், பொய் சரித்திரங்களையும் உண்டு செய்துக்கொண்டு கல்வியற்றக் குடிகளுக்குப் போதித்து வந்தபோது பூர்வம் செவிகளில் கேட்டுவந்தப் பழைய பெயர்கள் தானே என்று நம்பி மோசம் போனார்கள். பெளத்த விவேகக் குடிகளின் போதங்களும் முயற்சிகளும் குடியேறிய வேஷப்பிராமண பெருக்கத்தால் பௌத்தர்களின் படங்கள் அழிந்தும் நூல்கள் சிதலுண்டும் தன்மங்கள் மாறுபட்டும் அதன்மம் பெருகியும் வந்ததுடன் பலத்தொழிற் பெயர்களையும் சாதிப்பெயர்களாக மாற்றி வேஷப்பிராமணர்கள் யாவரும் உயர்ந்த சாதிகளென வகுத்துக்கொண்டு, தங்கள் பொய்வேஷங்களைக் கண்டித்து வந்த பௌத்தர்கள் யாவரைத் தாழ்ந்த சாதியென வகுத்து, அவர்களைத் தலையெடுக்கவிடாமல் நசித்துவந்ததுமன்றி விவேகிகளைப் பலவகையான உபத்திரவஞ்செய்தும் கழுவில் ஏற்றியும் வசிகளில் குத்தியுங் கற்காணங்களிலிட்டுக் கொன்று, மற்றும் பௌத்தர்களையும் பயமுறுத்தி வந்தார்கள்.
வேஷப் பிராமணர்களின் இத்தியாதி கொடுந்துன்பங்களுக்கும் பௌத்தர்கள் அஞ்சாது தங்கள் வித்தையாலும், விவேகத்தாலும், சோதிடத்தாலும், வைத்தியத்தாலும், விவசாயத்தாலும், கைத்தொழிலாலுமே கஷ்டசீவனங்களைச் செய்துக்கொண்டே தங்கள் குடும்பங்களைக் காப்பாற்றி வந்தார்கள். இவற்றுள் இச்சாதி பேதம் வகுத்துக் கொண்டுள்ளவர்களிலேயே அரசாங்கமும் இருந்திருக்குமாயின் தாழ்ந்த சாதியோரென வகுக்கப்பட்டுள்ள பௌத்தர்களின் பூண்டே இத்தேசத்தில் இல்லாமற்போயிருக்கும். மத்தியில் மகமதிய துரைத்தனமும்,
போர்ச்சுகீஸ் துரைத்தனமும், பிரஞ்சு துரைத்தனமும் வந்து தோன்றி கொண்டேயிருந்தபடியால் பிராணன் நீங்காத கஷ்டசீவனத்திலேயே காலங்கழித்து வந்தார்கள். அந்தந்த துரைத்தனத்தாரிடமும் தந்திரமாக உட்பிரவேசித்து தங்கள் சுயப்பிரயோசனங்களை வேஷப்பிராமணர்கள் பெற்று வந்ததுடன், பௌத்தர்களைமட்டிலும் சுட்டிக்காட்டி இவர்கள் தாழ்ந்தசாதியோர்கள், இவர்களை அருகில் சேர்க்கப்படாது, தீண்டப்படாதெனப் போதித்து, அவர்கள் மனதையும் மாறுபடுத்தி இழிவடையச் செய்துவந்தார்கள். ஏதோ இவர்கள் புண்ணியவசத்தால் பிரிட்டிஷ் துரைத்தனம் வந்துதோன்றி சகலசாதியோரையும் சமரசமாகப் பாதுகாத்துவந்தபோதினும் அவர்களிடத்திலும் சென்று, அவர்கள் தாழ்ந்தசாதியார், இவர்களைத் தீண்டப்படாது, அருகில் சேர்க்கப்படாதென்று தமிழ் முநிஷிகளாகப் பாடங் கற்பிக்கும்போதே இவர்களைத் தாழ்த்திக் கெடுக்கத்தக்கப் பாடங்களையே முதலில் கற்பித்துவிட்டு மற்றபாடங் கற்பிப்பது வழக்கம். இத்தகைய இழிகுணத்தால் அவர்கள் போதிக்கும் வார்த்தைகளை நீதியும் நெறியுங் கருணையும் அமைந்த பிரிட்டிஷ் துரைத்தன துரைமக்கள். தங்கள் செவிகளில் ஏற்காது மனிதர்களை மனிதர்களாக பாவிக்கும் மேன்மக்கள் செயலினின்று சகலசாதியோரையும் சமரசமாகப் பாவித்து தங்களது ஆளுகையை நிறைவேற்றி வருகின்றார்கள். அத்தகைய கருணைநிறைந்த ஆளுகையில் நகரவாசங்களில் அவர்களது பொறாமெய்ச் செயல் சற்று தயங்கி நிற்பினும் நாட்டுப்புறங்களில் நல்லத்தண்ணீரை மொண்டு குடிக்கவிடாமலும், வண்ணார்களை வஸ்திரம் தோய்க்கவிடாமலும், அம்மட்டர்களை சவரஞ்செய்ய விடாமலும் அசுத்த நிலையே அடைந்திருக்கச் செய்துவிட்டு துரைமக்கள் அவ்விடஞ் சென்றவுடன் குளிக்கக் குளமின்றியும், சவரஞ் செய்ய வாளின்றியும், வஸ்திரங்தோய்க்க சுத்தசலமும் வண்ணானின்றியும், அசுத்தமுற்றுக் கோலுங் குடுவையுமாய் உள்ளவர்களை சுட்டிக்காட்டி, இவர்கள் தாழ்ந்தசாதியார், இவர்களுக்கு சுத்தங்கிடையாது. நாகரீகங் கிடையாது, அதினாலேயே இவர்களைப் பறம்பாக்கி வைத்திருக்கின்றோம் எனக்கூறி அவர்களாலுந் தாழ்த்தத்தக்க உபாயங்களையே செய்து வருகின்றார்கள். இத்தகைய சாதிபேதமுள்ளோர் மற்றயசாதிகள் எல்லவரையும் சமரசமாகச் சேர்த்துக்கொண்டு இவர்களை மட்டிலும் தலையெடுக்கவிடாமல் தாழ்த்தி வருங்காரணம் யாதென உசாவித் தங்கள் பூர்வ பீடத்தையும், பூர்வ தன்மத்தையும் பின்பற்றி புத்தசங்கங்களை தேசங்களெங்கும் நாட்டி பூர்வசரித்திரங்களையும் ஞானநீதிகளையும் வெளியிட்டு வருவதை அறிந்த வேஷசாதியார் இக்கூட்டத்தோரை அருகில் சேர்க்கவும் போதிக்கவுமான சில தந்திரங்களை செய்து வருகின்றார்கள், அவைகள் யாதெனில்:-
- 6:52; சூன் 4, 1913 -
நூதன சாதிவேஷமிட்டுள்ளக் கூட்டத்தோர் யாவரும் ஒன்றுகூடிக் கொண்டு சாதிபேதமில்லாமல் வாழ்ந்திருந்த பௌத்தகூட்டங்கள் யாவரையுந் தாழ்ந்த சாதியோரென வகுத்து அவர்களைத் தலையெடுக்கவிடாமற் கொல்லாமற்கொன்று அவர்கள் பீடியையே அறுத்துவிடவேண்டுமென்னும் பொறாமெயாற் செய்துவந்தக் கொடூரங்கள் யாவையும் இவற்றில் எழுத வேண்டுமாயின் விரியுமென்றஞ்சி விடுத்துள்ளோம்.
கருணையும் நீதிநெறியுமமைந்த பிரிட்டிஷ் துரைத்தனத்திலே சுத்தநீரை மொண்டு குடிக்கவிடாத பாவிகள் மற்றும் நீதி நெறியற்ற காலங்களில் இன்னும் ஏதேது துன்பங்களைச் செய்து வதைத்திருப்பார்கள் என்பது சொல்லாமலே விளங்கும். இத்தகையாக நூதன சாதிவேஷம் பூண்டுள்ள யாவரும் சாதிபேதமில்லாமல் வாழ்ந்திருந்தப் பூர்வக்குடிகளைத் தாழ்ந்த சாதிகளெனக்கூறித் தாங்கள் தாழ்த்தி தலையெடுக்கவிடாமற் செய்வதுடன், வந்து குடியேறும் அன்னிய தேசத்தோருக்குத் தாழ்ந்தசாதியோர் எனக் கூறி அவர்களாலும் இழிவு கூறச்செய்து மலமெடுக்குத் தோட்டிகளுக்கும் மலோபாதைக்குப் போனால் காலலம்பாது பூனையையும் பெருச்சாளியையும் பிடித்துத்தின்னும் குறவர் வில்லியருக்குங் கற்பித்து இவர்களைத் தாழ்ந்த சாதியோரெனக் கூறச் செய்துவரும் விரோதச்செய்கைகளையும் நாளுக்குநாள் கண்டறிய முயன்ற எமக்கு புத்ததர்மமே இவ்வதன்மச்செயலுக்கு ஆதாரம் என்றறிந்து சாக்கைய புத்தசங்கத்தையே நாட்டி அதனந்தரார்த்தங்கள் யாவையும் விளக்கி விட்டதின்பேரில் இச்சாதி சம்மந்தத்தில் விசாரங்கொண்டிருந்த விவேகபுருஷர்கள் யாவரும் இதுவே நமது பூர்வசரித்திரமென்று ஆனந்தித்து, அங்கங்கு சாக்கைய புத்த சங்கங்களை ஸ்தாபித்து, உள்சீர்திருத்தங்களையும் புற சீர்திருத்தங்களையுஞ் செய்து, கூட்டத்தோரை குருவிசுவாசத்திலும் இராஜவிசுவாசத்திலும் நிலைபெறச் செய்து வருவதையறிந்த நூதன சாதி வேஷச் சத்துருக்களுக்கு மனஞ்சகியாது ஆ, ஆ, நாம் தாழ்த்திவைத்துள்ள கூட்டத்தோர்கள் யாவரும் பௌத்தர்களாகி விடுவார்களாயின் நமது சாதிவேஷச் செருக்கும் சமயவேஷக் கிருக்கும் மேலது கீழதாய் மாறுபட்டு மகத்துவங் குன்றிப்போம் என்னும் ரீதியால் தாழ்ந்த சாதியாரை உயர்த்தப்போகின்றோம் என்னுங் கூட்டங்கள் கூடி, கல்விக் கற்பிக்கின்றோம். அதில் இந்துமத பாடங்களைக் கற்பிக்கவேண்டுமென முயன்று நிற்கின்றார்கள். இவர்களது முயற்சிகள் யாவும் சுயநல முயற்சியே அன்றி பொதுதல முயற்சி அன்று. தாழ்த்தப்பட்டுள்ள ஏழைமக்களுக்கு மிஷனெரி துரைக்கள் செய்துவருங் கல்வி விருத்தியில் வீசபாகம் இவர்களது விருத்திநிலை பெறாது என்பது திண்ணம். காரணமோவென்னில் சாதிபேதமில்லாக் கூட்டத்தோருக்கு சாதிபேதமில்லா ஐரோப்பிய மிஷனெரிமார்கள் செய்துவரும் கல்வியின் விருத்தியே பேருபகாரமும் சிறப்புமாகும்.
சாதிபேதமுள்ளோர் சாதிபேதமில்லாருக்குக் கல்விவிருத்திச் செய்விக்கின்றோம் என்பது காலமெல்லாம் இவர்களைத் தாழ்ந்த சாதியோர் தாழ்ந்த சாதியோர் என்றே சொல்லிக் கொண்டு சீரையழிப்பதற்கும் சிறப்பைக் கெடுப்பதற்குமேயாம்.
சாதிபேதமுள்ள மற்றொரு கூட்டத்தோர் தோன்றி சாதிபேதம் இல்லாதோர் வாழுஞ்சேரிக்குள் நுழைந்து, நீங்கள் சிவனைக்கும்பிட்டு வழக்கமாகி விட்டால் சிவனைக் கும்பிடுவதை விடாதீர்கள், விஷ்ணுவைக் கும்பிடுவது வழக்கமாகிவிட்டால் விஷ்ணுவைக் கும்பிடுவதை விடாதீர்கள். கூடிய சீக்கிரம் உங்களைக் கோவிலுக்குள் சேர்த்துக் கொள்ளுகிறோமென எய்த்து வருகின்றார்கள். அவ்வகையாக இவர்கள், அவர்கள் கோவிலுக்குள் போன போதிலும் அவ்விடம் இருட்டறையில் உள்ளக் கல்லை எட்டிப்பார்த்து துட்டு செலவாக வேண்டியகேடன்றி யாதொரு பயனுங்கிடையா. இவர்கள் அவர்கள் கோவிலுக்குப் போவதால் தேங்காய், பழம் தட்சணை, தாம்பூலம் அவர்களுக்குப் பயன்படுவதுடன் இந்துக்களென்னும் பெருந்தொகைக் கணக்குக்காட்டுவதற்கும் ஆளாவார்கள். சேரிக்குள் சென்று பிரசங்கிப்பது புத்ததன்மம் பரவலாகாது என்னும் உட்கருத்தும் தங்கள் சுயப்பிரயோசனம் பெருக வேண்டுமென்னும் வெளிக் கருத்துமேயாம்.
சாதிபேதமுள்ள இன்னுமோர் கூட்டத்தோர் புலியானது பசுமந்தையில் நுழைந்து பசுக்கூட்டங்கள் யாவையும் நாசப்படுத்த வேண்டும் என்பதாயின் பசுவின் தோலைப் போர்த்துக் கொண்டு, மந்தையிலுட் புகுந்த கதைபோல் இப்போது யதார்த்த பௌத்தர்களாகி வெளிதோன்றி சீர் பெற்றுவருவோரை தாங்களும் பௌத்தர்களெனக்கூறி வெளிவந்து தங்கள் பெண்டு பிள்ளைகளையுங் குடும்பத்தோர்களையும் பௌத்தர்களாக்கி புத்ததன்மம் போதிக்காது சாதிபேதமில்லாமற் சேரிகளிலும் பேட்டைகளிலும் வாழ்வோர்களையே சேர்த்துக்கொண்டு புத்ததன்மத்திற்கு எதிரடையாய அபுத்ததன்மத்தையே போதித்து வருகின்றார்கள். அதாவது நாங்கள் போதிப்பது இந்திய பௌத்தமல்ல, பர்மா பௌத்தமல்ல, தீபேத் பௌத்தமல்ல, ஜப்பான் பௌத்தமல்ல, சைனாபௌத்தமல்ல, சைன்ட்பிக் பௌத்தம், அதுவோ, பௌத்தசிலைகள் வைக்கப்படாது, பௌத்த குருக்களிருக்கலாகாது, மனிதனுக்கு கன்மத்திற்குத் தக்கப்பலனுங் கிடையாது, மனிதன் இறந்தப்பின் ஏதுங்கிடையாது. அதுவே மனிதனுக்கு முடிவு எங்கள் சைன்டிபிக்கின் மேலான ஆராய்ச்சியால் கண்டுபிடித்த பௌத்தம் இதுவே. ஆயினும், புத்தருக்கு முன்பே சாதிபேதம் இருந்திருக்கின்றதென வற்புறுத்திக் கூறுவார்கள். புத்தருக்கு முன்பே பிராமணர்களிருந்தார்கள் என்று கூறுவதற்கு மட்டிலும் அவர்கள் சைன்டிபிக் பௌத்தம் இடங்கொடுத்திருக்கின்றது. கன்மத்திற்குத் தக்க சுகதுக்கம், இறப்பு பிறப்புக்கு இடமில்லை. இவர்களது பௌத்த உட்கருத்து யாதெனில் புத்தருடைய காலத்திலேயே பிராமண பௌத்தனும் இருந்தான் பறபௌத்தனும் இருந்தானென சாதி பேத பௌத்தம் உண்டுசெய்து சாதிபேதமில்லாது வாழும் யதார்த்த பௌத்தர்களைக் கெடுக்கும் பிறட்டு பௌத்தர்களேயாம். சாதிபேதமில்லாது வாழ்வோர் இவர்கள் பௌத்தத்திற் சேர்ந்து இவர்கள் போதனைக்குட்பட்டு ஒழுகுவார்களாயின் தாழ்ந்தசாதி பெளத்தர்களென இழிவடைவதுடன் உள்ள சிறப்புஞ் சீரும் அழியவேண்டியதேயாம்.
இதைக்கொண்டு அவர்கள் சாதிசிறப்பையும் மதசிறப்பையும் பெருக்கிக்கொண்டு யாதார்த்த பௌத்தர்களை பலுகி பெருகவிடாமற் செய்து தங்கள் சுயநலத்தைப் பெருக்கிக் கொள்வதற்கேயாம்.
இத்தகைய மூன்று வகைக் கூட்டத்தோர் வெளிதோன்றி சாதிபேதமில்லாது வாழ்வோர் மத்தியில் வந்து ஆடுகள் நனையுதெனப் புலிகள் குந்தி அழுவது போல தோன்றி தங்கள் தங்கள் மித்திரபேதங்களால் மயக்கிக் கெடுத்து வருகின்றார்கள். அதன் காரணங்களோவென்னில் சாதிபேதமில்லாக் குடிகள் யாவரும் பௌத்தர்களாக விலகிவிடுவார்களாயின் தங்களது பொய்சாதிவேஷமும் பொய்மதக் கூட்டமும் தன்னில் தானே கனங்குறைந்து சீர்கெட்டுப் போவதுடன் ஓர்கால் சுயராட்சியத்திற்கு முனைவோமாயின் இச்சாதிபேதமற்று வாழ்வோர்களே எதிர்த்து நாசப்படுத்தி விடுவார்கள் என்னும் பீதியால் அவர்கள் மேனோக்கத்தைக் கெடுக்க முயன்றிருக்கிறார்கள். சாதிபேதமில்லா திராவிடர்களே எச்சரிக்கை, எச்சரிக்கை. புலிகளின் வாயினின்று விலக்கியது போலும், விஷப்பாம்புகளின் மத்தியிலிருந்து விடுவித்தது போலும். சாதிபேதமுள்ள சத்துருக்களின் இடுக்கங்களினின்று கார்த்துரட்சித்து வரும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு நன்றியறிந்த வந்தனத்தை என்றென்றும் கூறி அவர்களது ஆட்சியிலேயே முன்னேறும் வழியைத் தேடுங்கள். சத்துருக்களை மித்துருக்கள் என்றெண்ணி மோசம் போகாதீர்கள். எச்சரிக்கை, எச்சரிக்கை, எச்சரிக்கை.
- 7:1; சூன் 11, 1913 -